25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

 

இன்று  9பேர் விசேட பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு வவுனியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். வன்னியிலிருந்து வந்து யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறிய யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 4பேரும், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஐந்து பேருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட குறித்த நபர்கள் யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் நிலையங்களுக்கு விசாரணைகளுக்கென பொலிஸாரினால் ஏற்கனவே அழைக்கப்பட்டிருந்தனர். 

இவர்களின் கைதிற்கு ஸ்ரீ - டெலோ காரியாலயத்துக்கு நடத்தப்பட்டதாகக்  கூறப்படும், எரிகுண்டு தாக்குதலின் பின்னாலிருந்து  செயற்பட்டனர், அல்லது நேரடியாக அதில் பங்கு கொண்டனர் என்ற குற்றச்சாட்டே காரணம் என கூறப்படுகிறது. இவர்கள் அனைவரும், பல்கலைகழகத்தில் நடந்த மாவீரர்தின தீபம் ஏற்றும் நிகழ்வில் பங்கு கொண்டனர் அல்லது அதற்கு உதவியாக இருந்தனர் என்பது மட்டுமே உண்மையான காரணமாகும். அத்துடன், யாழ் - பல்கலைகழக  பெண்கள் விடுதி மற்றும் பல்கலைகழக வளாகத்தில், ராணுவ - புலனாய்வு - ஒட்டுப்படை தாக்குதல்கள் நடந்த தினத்திற்கு மறுதினம்,  அத்தாக்குதல்களுக்கு எதிராக, மாணவர் சங்க தலைமையுடன் இணைத்து  இவர்கள்  போராட்டத்தை ஏற்பாடு செய்தனர் என்பதும் தான் கைதுக்கான உண்மையான காரணங்கள் .

கைது செய்யப்படவர்கள், முன்னாள் யாழ் பல்கலைகழக மாணவர்கள், அல்லது அரசியல் அடிபடையில் இன்றுள்ள யாழ்-பல்கலைகழக மாணவர் தலைமையுடன் உறவில் உள்ளவர்கள் எனக் கூறப்படுகிறது .


அரசுடன் பின்கதவால் பேச்சுவார்த்தை நடத்திய கூட்டமைப்பு  அரசியல்வாதிகளுக்கு,   தமது பட்டியலில் இருந்த 13 அல்லது 14 பேரையும் விசாரித்தன் பின்னர்  மட்டுமே, பல்கலைகழக சுற்றாடலிலிருந்து ராணுவத்தை விலக்கிக் கொள்ள முடியும் என  இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலகம்  கூறியது.இதன் பின்னணியிலேயே, அரசுடன் பின்கதவால் பேச்சுவார்த்தை நடத்திய  கூட்டமைப்பு  அரசியல்வாதிகள் மற்றும் இலங்கை அரசுசார்ந்த தமிழ் அரசியல்வாதிகளின் ஆசீர்வதத்துடனேயே மேற்படி கைதுகள்  நடைபெற்றுள்ளது.

இந்த கைதுகள் (04.12.2012) நேற்று முழுநாளும் நடைபெற்றது. கைதுகள் நடைபெற்ற தகவலை உறுதிப்படுத்திய பின்னரே, இராணுவக் கட்டளைத்தளபதி மஹிந்த ஹத்துருசிங்க, யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர், மற்றும் அனைத்துப் பீடங்களின் பீடாதிபதிகளுடன், நேற்று சுமார் மூன்று மணிநேரம் நீண்ட பேச்சுவார்த்தையொன்றை நடத்தினார். அப்பேச்சு வார்த்தையில் கட்டளைத்தளபதி மஹிந்த ஹத்துரு சிங்க, 14 நபர்களையும் கைது செய்யும் பணி நிறைவேறும் நிலையில் உள்ளதாகவும், இதன் அடிப்படையில், படைகளைத் தான் பல்கலைகழக சுற்றாடலில் இருந்தது அகற்றுவதாகவும் அறிவித்தார். மேலும் கிடைத்த தகவல்களின்படி, மேற்படி கைது செய்யபட்ட நபர்கள் விசாரணையின் பின் விடுதலை செய்யத்  தாம் ஆவனை செய்வதாகவும் மஹிந்த ஹத்துருசிங்க கூறியதாக தெரிய வருகிறது. .
அதன் பின் நடந்த ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்த மேஜர் ஜெரல் மஹிந்த ஹத்துருசிங்க, அன்றைய சம்பவம் போன்று இனிவரும் காலங்களில் இராணுவத்தினரோ, பொலிஸாரோ பல்லைக்கழக வளாகத்துக்குள் நுழைய மாட்டார்கள். அவ்வாறு நுழைவதாயின் உரிய அனுமதியைப் பெற்றே நுழைவார்கள். தவிர்க்க முடியாத சூழ்நிலையாலேயே அன்றையதினம் இராணுவத்தினருக்கு பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைய வேண்டி ஏற்பட்டது. மாணவர்கள் மீது இவ்வாறு நடந்துகொள்ள வேண்டி ஏற்பட்டமை வருத்தத்தைத் தருகிறது. இனிவரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது. உரிய அனுமதியைப் பெற்றே இராணுவத்தினரோ, பொலிஸாரோ பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைவர் என்றார்.


மேற்கூறியது போன்று, ஸ்ரீ-டெலோ அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியதனால்தான் இந்த கைதுகள் நடைபெறவில்லை. இலங்கை அரசு  தமிழ் மக்களை எந்த விதத்திலும் இனி, உரிமைகளுக்காக  போராடக் கூடாதென, எச்சரிப்பதற்காகவே இந்தக் கைதுகளை முன்னுதாரணமாக செய்துள்ளது. குறிப்பாக, தமிழ் மாணவர்கள் எவரும் இனி அரசபடைகளின் விருப்பத்திற்கும், தமிழ் பிரதேசங்களில் நடக்கும் ஒடுக்குமுறை ஆட்சிக்கும் எதிராக இயங்கக்கூடாதென அறிவுறுத்தவே இந்த கைதுகளும், பாசிச ஒடுக்கு முறைகளும் நிகழ்த்தப்படுகிறது. இவரிற்கு எதிராக மக்களை அணிதிரட்டி போராடுவதே ஒரே வழியாகவுள்ளது. இதை விடுத்து  பின்கதவால் அரசியல் செய்வது எந்த விதத்திலும் தேசவிடுதலையைப்  பெற்றுத்தரப் போவதில்லை.