25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

யாழ்- பல்கலைக் கழக மாணவர்களை இலக்கு வைத்து ராணுவமும் பொலிசாரும் நடாத்திய இரண்டு நாட்களிலான அராஜகத் தாக்குதல்கள் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியவையாகும். இத்தாக்குதல்கள் மாணவர்கள் மீதான தாக்குதல் மட்டுமின்றி அனைத்துத் தமிழ் மக்களையும் அச்சுறுத்தி அடக்கி வைத்திருப்பதற்கான கொடூரக் தாக்குதலாகும். இது தமிழ் மக்கள் மீதான பேரினவாத  ராணுவ ஒடுக்கு முறை நீடிக்கப்பட்டு வருவதையே வெளிகாட்டியுள்ளது.

கடந்த 27ம் 28ம் திகதிகளில் யாழ்- பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட மாணவர்கள் மீதான காட்டு மிராண்டித்தனமான தாக்குதல்களை எமது புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சி மிக வன்மையாக கண்டிக்கிறது. அத்துடன் மாணவர்கள் தமக்கான பாதுகாப்பு, சுதந்திரமான கற்றல், பல்கலைக்கழக சுற்றாடலில் இருந்து பாதுகாப்புப் படைகளை விலகச் செய்தல் போன்ற நியாயமான கோரிக்கைகளை முன் வைத்து வருவதையும் கட்சி ஆதரிக்கின்றது.


மாணவ மாணவிகளின் விடுதிகளுக்;குள் பலாத்காரமாகப் புகுந்து அநாகரிகமான வழிகளில் பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடாத்தி இருக்கிறார்கள். இதனை மறுநாள் மாணவர்கள் அனைவரும் கண்டித்து கவனயீர்ப்புப் போராட்டம் நடாத்தி கொண்டார்கள். அமைதியாக நடாத்திய அப்போராட்டம் ஜனநாயக ரீதியானதாகும். அதனைத் தடுத்தே மாணவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

மேற்படி தாக்குதல் இடம் பெற்ற வேளை அங்கு வந்த யாழ் மாவட்டப் பாராளுமன்ற

உறுப்பினர் சரவணபவன் தூசிக்கப்பட்டதுடன் அவரது வாகனம் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. அதே போன்று உதயன் நாளிதழின் ஆசிரியர் பிரேமானந் குறிவைத்துத் தாக்கப்பட்டுள்ளார். இவை அனைத்தும் அரசாங்கத்தினதும் பாதுகாப்புப் படையிகளினதும் தமிழ் மக்கள் மீதான பேரினவாத ஒடுக்குமுறை நிலைப்பாட்டையே தெளிவுப்படுத்தி காட்டுகின்றது.

எனவே மேற்படி மாணவர்கள் மீதான தாக்குதல்களைக் கண்டித்து யாழ்நகரில் இடம் பெறவுள்ள கவனயீர்ப்புப் போராட்டங்களுக்கு புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சி தமது ஆதரவை தெரிவித்துக் அவற்றில் கலந்து கொள்கிறது.

சி. கா. செந்திவேல்
பொதுச்செயலாளர்.

புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சி

30/11/2012