25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கூடங்குளம் பகுதி மக்களின் எதிர்ப்பை இந்திய அரசு பொருட்படுத்தாதபடியால் நாங்களும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம்'

தமிழகத்தில் நீண்ட போராட்டத்துக்கு காரணமாகியுள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான கருத்துக்களுடன் இலங்கையின் வடக்கே துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

கூடங்குளம் அணுமின் நிலையத்தால் இலங்கையில் உள்ள மக்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து விளக்கமளிக்கும் விதமாக இந்த துண்டுப் பிரசுரங்கள் அமைந்துள்ளன.

 

மக்கள் போராட்டக் குழு என்ற அமைப்பு வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய நகரங்களில் இதனை ஒழுங்கு செய்திருந்தது.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் அதனால் மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் உள்ளிட்ட கரையோர மாவட்டங்களும் வவுனியா, அனுராதபுரம் உள்ளிட்ட மற்ற வடபகுதி மாவட்டங்களும் பெருமளவில் பாதிக்கக்கூடிய அபாயம் இருப்பதாக இந்த எதிர்ப்பு துண்டுபிரசுரங்களை வெளியிட்ட நிகழ்வின் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான தர்மலிங்கம் கிருபாகரன் கூறினார்.

அண்மையில் சுனாமி தாக்கத்திற்கு உள்ளான ஜப்பானில் அணுமின் உலைகள் வெடித்ததால் ஏற்பட்ட கதிர்வீச்சு பாதிப்புகள் தொலைதூர பிரதேசங்களையும் பாதித்திருந்தது, எனவே கூடங்குளம் அணுமின் நிலையத்தினால் எமது நாட்டில் வடபகுதி மக்கள் பாதிக்கப்படமாட்டார்கள் என்பதற்கு எந்தவிதமான உத்தரவாதமும் கிடையாது என்றும் அவர் கூறினார்.

'கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் தொடர்ச்சியாகப் போராட்டங்கள் நடத்திவருகின்றனர். அவர்களது கோரிக்கையை ஏற்று, அந்த அணுமின் நிலைய திட்டத்தை இந்தியா கைவிடும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் அது நடக்கவில்லை. இது விடயத்தில் அங்குள்ள அரசியல் கட்சிகளும் எதிர்பார்த்த அளவில் செயற்படவில்லை. எனவே தான், கூடங்குளம் அணுமின் நிலையத்தினால் இலங்கை மக்களுக்கு ஏற்படவுள்ள ஆபத்துக்கள், அபயாம் குறித்து வடபகுதி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த துண்டுப்பிரசுர விநியோக நடவடிக்கையை நாங்கள் மேற்கொண்டோம்' என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.