25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

altஉலக உணவு தினம் (World Food Day) ஆண்டு தோறும் ஒக்டோபர் 16ஆம் திகதியன்று உலக நாடுகளில் கொண்டாடப்படுகிறது. 1945ஆம் ஆண்டில் இதே நாளில் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதை நினைவு கூறும் பொருட்டு ஐ.நா இந்நாளைச் சிறப்பு நாளாக அறிவித்தது

 

நவம்பர் 1979ஆம் ஆண்டில் இவ் அமைப்பின் 20வது பொது மாநாட்டில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஹங்கேரியின் முன்னாள் வெளிநாட்டமைச்சர் பால் ரொமானி என்பவரின் முன்முயற்சியினால் இத்தீர்மானம் ஏகமனதாக ஏற்கப்பட்டு தற்போது 150ற்கும் அதிகமான நாடுகளில் இந்நாள் கொண்டாடப்படுகிறது.

உயிரினங்களின் உயிர் வாழ்க்கைக்கு உணவு அவசியம். அனைவருக்கும் உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை. இது மனித உரிமையும் கூட. பசியால் யாரும் வாடக்கூடாது, அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உலக உணவு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

ஒவ்வொருவருக்கும் போதுமான அளவு உணவு கிடைக்க வேண்டும். வசதி வாய்ப்பற்றோர், உடல் ஊனமுற்றோர், இயற்கை சீரழிவுகளால் பாதிக்கப்பட்டோருக்கு உணவு வழங்க வேண்டியது அரசின் கடமை என்பதை ஐக்கியநாடுகள் சபை வலியுறுத்துகிறது.

இன்று உலகில் 85கோடிப்பேர் பசியாலும், ஊட்டச்சத்து குறைபாட்டாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 82கோடிப்பேர், இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளை சேர்ந்தவர்கள். ஆண்டுதோறும், பட்டினியால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை, மூன்று கோடியே 50லட்சத்துக்கும் அதிகம். இதை பாதியாக குறைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டும், ஒவ்வொரு ஆண்டும் பட்டினி மரணங்கள் அதிகரிக்கின்றன.அனைவருக்கும் தேவையான உணவு இருந்தாலும், அதை பெறும் அளவு பணம் இல்லாததே மரணங்களுக்கு காரணம்.

வளரும் நாடுகளில் நிலவும் விலைவாசியால் உணவு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. மக்கள் தொகை பெருக்கம், உற்பத்தி குறைவு போன்றவை விலைவாசி உயர்வுக்கு வழி வகுக்கின்றன. ஏழைகளுக்கு மூன்று வேளை உணவு என்பது கடினமான விஷயமாகிறது. உலக வங்கி அறிக்கையின் படி, 2010 - 2011ம் ஆண்டில், உணவுப் பொருட்களின் விலை ஏற்றத்தால், உலகம் முழுவதும் 7 கோடி பேர் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.