25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

 

alt லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் கடத்தப்பட்டதற்கு எதிராகவும், அவர்களது உயிர் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு  வற்புறுத்தியும் மற்றும் அவர்கள் இருவரையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரியும் முன்னிலை சோஷலிசக் கட்சியினால் ஏற்பாடு  செய்யப்பட்டுள்ள  வேலைத்திட்டங்களின் வரிசையில் ஒரு கட்டமாக, அவர்கள் இருவரும் கடத்தப்பட்டமை, அவர்களது அரசியல் மற்றும்  பொதுவாக நாட்டில் நடைபெற்று வரும் மனித நீதிக்கு எதிரான செயற்பாடுகள் , கடத்தல் காணாமலாக்கல் மற்றும் கொலை செய்தல் குறித்து ஆவணப்படம் இன்று (11)  வெளியிட்டு வைக்கப்பட்டது.  

 

கொழும்பு பொது நூலக மற்றும் சுவடுகள் சேவை சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பொருமளவிலான பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர். 

இந் நிகழ்வில் வரவேற்புரை நிகழ்த்திய உதுல் பிரேமரத்ன அவரது உரையில்:alt

தோழர் குமார் குணரத்தினம் மற்றும் தோழி திமுது ஆட்டிகல  ஆகியோரை கடத்திச் சென்றதன் பின்னர்  குமார் தோழர் தெமட்டகொட குற்றப் பிரிவில் இருக்கிறார் என்று  தொலைக்காட்சி அலைவரிசையொன்றில் முதன் முதலாகக் கூறியவர் பாதுகாப்புச் செயலாளரர் கோடாபய ராஜபக்ஷ. அவ்வாறு  அறிவித்து இரண்டு மணித்தியாலங்கள் கடந்த பின்னரும் கூட  பொலிஸ் மா அதிபர் அது குறித்து அறிந்திருக்கவில்லை.ஆனால் தெமட்டகொட குற்றப் பிரிவு பொலிஸ் மா அதிபரின் கீழேயே இயங்குகிறது.இந்த சம்பவத்தை முழுமையாக மறைக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு இருக்கவில்லை. தான் இதனைச் செய்ததாக உணரச் செய்ய வேண்டும்.அவ்வளவுதான். இன்றைய நிலையில் பொலிஸ், இராணுவம்  வெள்ளை வேன் என்பதும் அரசாங்கம் நாட்டை ஆள்வதற்காக  பயன்படுத்தப்படும்  முறை என்றாகிவிட்டது.  இந்த காடைத்தன, கேவலமான ஆட்சி முறையை வெளிப்படுத்த வேண்டும்". என்று கூறினார்.

 

altசட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ தனது உரையில், 

இன்று அரசியல் சாஸனத்துக்கு ஏற்புடையதாக நாடு ஆளப்படுவதில்லை. அரசியல் சாஸனத்தை விபச்சாரமாக்குவது எப்படி, தமக்கு தேவையான நேரத்தில் பயன்படுத்துவது எப்படி  என்பது அவர்களுக்குத் தெரியும். அனைத்து பெயர்ப் பலகைகளும் மும்மொழிகளிலும் இருக்க வேண்டுமென மொழி சம்பந்தப்பட்ட அமைச்சு தீர்மானமெடுத்தது. ஆனால் அது செயற்படுவதில்லை. அரசாங்க அதிகாரிகள் அரசியலில் இறங்கியுள்ளார்கள்.

நீதிமன்றத்தில் சுயாதீனம் இல்லை. நீதிமன்றம் தலைநிமிர வேண்டுமாயிருந்தால் இந்த முறை மாற்றப்பட வேண்டும். 18 வது அரசியல் சாஸன திருத்தச் சடத்துக்கு கையைத் தூக்கிய அனைவரும் சமீபத்திய தேசத் துரோகிகளாகவே நான் கருதுகிறேன். 78ம் ஆண்டு அரசியல் சாஸனத்தின் பின்னர்  நிறைவேற்று அதிகாரத்துக்கு தேவையானவையே நீதிமன்றத்தில் நடக்கிறது. சில சந்தர்ப்பங்களில் மாத்திரம் நீதி தன் கடமையைச் செய்கிறது. நிறைவேற்று அதிகாரத்தின் விருப்பப்படியே நீதிபதிகள் நியமிக்கப்படுகின்றனர். நீதிமன்றம் நல்லது என யாராவது நினைத்தால் அது ஒரு ஏமாற்றம். இப்போது நடந்துக் கொண்டிருக்கும் மோதல் நிறைவேற்று அதிகாரத்தின் வெற்றியோடு முடிவுக்கு வரும். அரசியல் சாஸனம் அப்படித்தான் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், எந்தவொரு சர்வாதிகாரியும் அதிகாரத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட வரலாறு இருக்கிறது. அதற்காக தியாகிகள் முன்வர வேண்டும். எவ்வளவுதான் பேசினாலும் , சட்டங்கள் இயற்றினாலும் பிரயோஜனமில்லை. இலங்கையில் எல்லாவற்றுக்கும் சட்டம் இருக்கிறது. என்றாலும் சட்டமா அதிபரின் ஊடாக தலையீடு செய்ய நிறைவேற்று அதிகாரத்துக்கு முடியும். சட்டவரைவுத் தினணக்களம் முன்னர் சுயேட்சையாகவே செயற்பட்டது. ஆனால்,  இப்போது அதுவும் நிறைவேற்று அதிகாரத்தின் கையில் இருக்கிறது.

இதற்கு முன்னர் வழக்கு பேசி தீர்ப்பொன்றை பெற்றுக் கொள்ள முடியுமாயிருந்தது. 1989 காலகட்டத்தில் 'ஹபயாஸ் கோபுஸ் '  சில வெற்றிகள் கிடைத்தன. ஆனால், அதிகாரபூர்வமற்ற இராணுவ ஆட்சி இப்போது நடந்துக் கொண்டிருக்கிறது. எல்லோரும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்". 

 altஅடுத்து உரையாற்றிய முன்னிலை சோஷலிச கட்சியின் பிரச்சாரச் செயலாளர் புபுது ஜாகொட தனது உரையில்,

'சம்பூர் பிரதேச்தில் காணிகளை, அந்தக் காணிகளுக்கு உரிமையாளர்களாகிய  மக்களுக்குக் கொடுக்காமல், அவர்கள் அகதி முகாம்களில் பரிதவித்துக் கொண்டிருக்கும் நிலையில் சிறப்பு பொருளாதார வலயம் என்ற பெயரில் இந்தியாவுக்கு தாரைவார்த்து கொடுக்கும்போது,  தமிழ் மக்களுக்காக பேசுகிறோம் என்று கூறிக் கொள்ளும் தமிழ் அரசியல் கட்சியொன்று அது குறித்து ஒன்றுமே கதைக்கவில்லை. தோழர் லலித் குமார் மாத்திரமே சம்பூர் இடம்பெயர் முகாமுக்குச் சென்று அவர்களோ கதைத்து காணி இழந்தவர்களை ஒருங்கிணைத்து போராட்டத்துக்கு தலைமைத்துவமளித்தார். அந்த சந்தர்ப்பத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ன செய்தது? யாழ்ப்பாணத்தில் காணிகள் சிங்களவர்களுக்கு கொடுக்கப்படுவதாகக் கூறி சத்தியாக் கிரகத்தில் ஈடுபட்டு , இனவாதத்தை போஷித்து ,இலாபம் பெற முயற்சித்தார். சம்பூரில் காணி பறிக்கப்பட்ட மக்களுக்காக எதுவுமே செய்யவில்லை.

லலித் மற்றும் குகனின் போராட்டம் அரசாங்கத்துக்கு மாத்திரம் அச்சுறுத்தலாக இருக்கவில்லை. இந்த இனவாத பிரபுக்களுக்கும் அது அச்சுறுத்தலாக இருந்தது.

வடக்கிலும் தெற்கிலும் வாழும் மக்கள் தனித்தனியாக போராடும்போது லலித்  வடக்கிற்கு போய் சொன்னார், வடக்கு மக்களுக்காக போராடத் தயாராக ஒடுக்கப்பட்ட  மக்கள் தெற்கில் இருக்கிறார்கள் என்று. வடக்கிலும் தெற்கிலும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களளை ஒன்று சேர்க்க அவர்களுக்காக உறவுப் பாலத்தைக் கட்ட லலித்தும் குகனும் முயற்சி செய்தார்கள்.வடபுல மக்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக  தெற்கு மக்களை ஒன்றினணக்க அவர்கள் முயற்சித்தார்கள்.. அதுதான் அரசாங்கத்துக்கு அச்சுறுத்தலாக இருந்தது.

இன்று தமிழ்மக்கள் பிரச்சினைகளுக்காகப் பேசுவது யார் ?  ஹிலரி கிளின்டன், கருணாநிதி, ஜெயலலிதா போன்றவர்கள்தான் பேசுகிறார்கள். ஆதலால், தமிழ் மக்களின் போராட்டம் ஏகாதிபத்தியத்தோடு சமப்படுத்தப்படுகிறது என்று யாராவது கூறினால்  எதுவும் செய்ய முடியாது. ஆனால், லலித், குகன் ஆகியோர்  வடபுல மக்களுக்குக் கொடுத்த செய்திதான் உங்களுக்காக போராடத் தயாராக இருக்கும் மக்கள் தெற்கில்  இருக்கிறார்கள். அவர்களோடு கைகோர்த்துக் கொள்ளுங்கள் என்று.

வேலையில்லாப் பட்டதாரிகள் சங்கத்தின் கிளையொன்றை யாழ்ப்பாணத்தில் அமைப்பதற்காகச் சென்ற வேளையில் தான் லலித் முதன் முதலாக தாக்கப்பட்டார். லலித்தும் குகனும் செய்த இந்த அரசியலுக்குத்தான் அவர்கள் பயந்தார்கள். ஆகவே இந்தக் கடத்தல் துணிச்சலோ செய்யப்பட்ட காரியமல்ல. பயத்தினால் செய்த காரியம். இன்றும் கூட நாங்கள் நம்பிக் கொண்டிருக்கிறோம்  அரசாங்கம் அதிகாரபூர்வமற்ற முறையில் தடுத்து வைத்திருப்பதாக.  அது குறித்து எங்களுக்கு சில தகவல்கள் கிடைத்துள்ளன.  அரசாங்கம் அவர்களை இன்னும் விடுதலை செய்யாமலிருப்பது  அவர்களது அரசியல் மீதுள்ள பயத்தினால்தான்.

இன்று அனைத்தையும் இராணுவமே செய்கிறது. பாடசாலை அதிபர்கள் இராணுவ கேணல்களாக்கப்பட்டுள்ளனர். மரக்கறி விலை ஏறும்போது அதில் இராணுவம் தலையிடுகிறது.பொலிஸாரின் கடமைகளை இராணுவம் செய்கிறது. தியவன்னா ஆற்றைச் சுற்றி புல் நடுவதும் இராணுவம். சமீபத்தில் அனைத்து பல்கலைக் கழக மாணவா் ஒன்றியத்தின்  இரண்டு மாணவா்கள் வாகன விபத்தில் மரணித்தார்கள்.  அந்த விபத்து சம்பந்தமாக சந்தேகம் எழுந்துள்ளது. அந்த விபத்து நடந்த பிரதேசத்து மக்கள் சொல்கிறார்கள்  அதிகாலை 3.20 மணயளவில் விபத்து நடந்ததாக. 5.20 க்குத்தான் பொலிஸார் வந்தார்கள். அதுவரை இராணுவம் அவ்விடத்தில் இருந்தாக சொல்கிறார்கள். அந்த இடத்தில் படிந்திருந்த இரத்தக் கறைகளை அழிப்பதற்கு, சந்தேகப்படும் விதத்தில் பாதையில் பதிந்திருந்த வாகனம் பிரேக் பிடித்த டயர் அடையாளத்தை அழிக்க உடல்களை இருந்த இடத்திலிருந்து  அப்புறப்படுத்த  தலையீடு செய்தது  இராணுவம்.  லலித் -குகனும் இந்த இராணுவமயத்தைத்தான் எதிர்த்தார்கள்.

வடக்கில் நடந்த அனைத்து போராட்டங்களின் பின்னணியிலும் அவர்கள் இருந்தார்கள். மண்டியிட மாட்டேடாம் என்ற செய்தியை அவர்கள் கொடுத்தார்கள். கடத்தினார்கள், பமுறுத்தினார்கள், தாக்கினார்கள். ஆனாலம் அவர்கள் அடிபணியவில்லை. 

அரசாங்கம் இன்று அச்சம், குரோதம். கோபம் மற்றும் கனவு அரசியலின் மீதே தங்கியிருக்கிறது, அரசியல் செயற்பாட்டாளர்களையும் ஊடகவியலாளர்களையும் பயமுறுத்துகிறது. காணாமலாக்குகிறது. படுகொலை செய்கிறது, அவ்வாறான குரோதத்தை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது. அதே போன்று குரோத அரசியலும் நடைமுறை படுத்தப்படுகிறது. பங்களாதேசில் நடந்த ஒரு சம்பவத்துக்கு எதிராக  இங்கே முஸ்லிம் மக்களுக்கு எதிராக குரோதத்தை விதைக்கிறார்கள். பள்ளிவாசல்களை அழிக்கிறார்கள். இவை அரசாங்கத்துக்குத் தெரியாமல் நடப்பதில்லை. இனவாதத்தை விதைக்கின்றார்கள். அடுத்ததாக கனவு அரசியல். இலங்கையை ஆசியாவின் அற்புதமாக ஆக்குவதாக கூறி கனவுகளை வளர்க்கிறார்கள். இலங்கையை ஆசியாவின்  அறிவுக் கருவூலமாக்கப் போவதாகக் கூறுகிறார்கள். ஆனால் கேள்வித் தாளையாவது ஒழுங்காக தயாரிக்க முடியவில்லை. பரீட்சையொன்றை  நடத்தக்கூட  முடியவில்லை.

இந்த நிலைமையில் சமூகம் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கிறது. தூங்கிக் கொண்டிருக்கும் இந்த சமூகத்திலும்  துணிவோடு கதைக்கக் கூடிய ஒரு சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள். லலித் மற்றும் குகன் என்பவர்கள்  அப்படிப்பட்ட இரண்டு பேர் தான்.  கொழும்பில் பிறந்து வளர்ந்த லலித் மரணத்தின் வாயில் என்று சொல்லப்படும் யாழ்ப்பாணத்துக்குப் போனார்கள். அங்கு சென்று அந்த மக்களோடு அரசியலில் ஈடுபட்டார்கள். அந்த மரணவாயிலின் அனுபவம் குகனுக்கு இருக்கிறது. என்றாலும் அவர் துணிவோடு முன்னேறி வந்தார். ஆபத்தை அறியாமல் அவர்கள் வேலை செய்யவில்லை. ஆபத்துக்கு சவால் விட்டு அவர்கள் அரசியல் செய்தார்கள்.

லலித் மற்றும் குகன் ஈடுபட்ட அரசியலை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். சிங்கள, தமிழ், முஸ்லிம்  ஒற்றுமையை கட்டியெழுப்பும், அவர்களுக்கு மத்தியில் ஒருங்கிணைப்பைக் கட்டியெழுப்பும் அரசியலை , இராணுவமயத்திற்கு எதிராக சக நீதிக்கான போராட்டத்தை, மண்டியிடுவதற்குப் பதிலாக, அடிபணிவதற்குக் பதிலாக,   கொடூரத்துக்கு எதிராக போராடக் கூடிய அரசியலை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். லலித் மற்றும் குகன் ஆகியோரை விடுதலை செய்து கொள்ளும் போரட்டமும் இந்த அரசியலும் வெவ்வேறல்ல. இரண்டமே ஒன்றுதான். என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

-www.lankaviews.com/ta