25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

altநடந்து முடிந்த மாகாண சபைத் தேர்தல்களில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெற்ற போதிலும் கிழக்கு மாகாண சபை ஆளும் கட்சிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாகாணத்துக்கான தேர்தலில் எதிர்க் கட்சிகள் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றுள்ள நிலையில் அடுத்த முதலமைச்சர் யார்? என்ற கேள்வி கிழக்கு மாகாண மக்கள் மத்தியில் மாத்திரமல்லாது  நாட்டு மக்கள் மத்தியிலும் எழுந்துள்ளது.

 

கிழக்கு மாகாணத்தில் 11ஆசனங்களைப் பெற்றுள்ள தமிரசுக் கட்சி ஆட்சி அமைப்பதற்கான அனுமதியை மாகாண கவர்னரிடம் கேட்டுள்ளதோடு ஐக்கிய தேசிய கட்சியினதும் முஸ்லிம் காங்கிரஸினதும் ஒத்துழைப்பை அது எதிர்பார்த்திருக்கிறது. அதேநேரம் கிழக்கு மாகாணத்தில் அதிக ஆசனங்களை பெற்ற கட்சி என்ற வகையில் ஆளும் ஐக்கிய மக்கள் சதந்திரக் கட்சி ஆட்சி அமைப்பதற்காக முஸ்லிம் காங்கிரஸின் ஒத்துழைப்பை கேட்டுள்ளது. இத்தேர்தலில் அரசாங்கத்தோடு சேர்ந்து தேர்தலில் குதித்த முன்னால் முதலமைச்சர் பிள்ளையானின் கட்சியை சேர்ந்த வேட்பாளர்களில் பிள்ளையான் மட்டுமே வெற்றி பெற்றுள்ளமை இங்கு குறிப்பிடத் தக்கது. அடுத்த முதலமைச்சரும் தானே என மார்பு தட்டிய பிள்ளையானின் கனவு கனவாகவே இருக்குமோ என்பதை இப்போதைக்கு கூறமுடியாது.

முஸ்லிம் காங்கிரஸைப் பொறுத்தவரையில் இந்தத் தேர்தல் அவர்களுக்கு வெற்றிதான். அடுத்த முதலமைச்சரைத் தீர்மானிப்பது தாங்கள்தான் என மேடை தோறும் முழங்கிய  அவர்களுக்கு அதற்கான வாய்ப்பு இப்போது கிடைத்திருக்கிறது. அடுத்த முதலமைச்சராக ஒரு முஸ்லிம்தான் வரவேண்டும் அதற்காக எமக்கு ஒரு வாய்ப்பைத் தாருங்கள் என வீடு வீடாக வாக்குப் பிச்சை கேட்ட  இவர்களுக்கு மக்கள் வாரி வழங்கியுள்ளனர்.

இப்போதிருக்கும் பிரச்சினை என்னவென்றால் தமிழரசுக் கட்சியின் அழைப்பை ஏற்றுக் கொள்வதா? அரசாங்கத்தின் அழைப்பை ஏற்றுக் கொள்வதா என்ற சிக்கலில் மு.கா. தலைமை சிக்கியுள்ளது தெரிகிறது. தமிழரசுக் கட்சியோடு  இணைந்து ஆட்சி அமைக்க ஒத்துழைக்கும் பட்சத்தில் முதலமைச்சர் பதவியைக் கூட  தரத் தயாராக இருப்பதாக அதன் தலைவர் இரா. சம்பந்தன் கூறியிருப்பது சிந்திக்கத்தக்கது. அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று அரசாங்கத்தோடு  இணைந்து  ஆட்சி அமைக்க  ஒத்துழைக்கும் பட்சத்தில் முஸ்லிம் ஒருவருக்கே முதலமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையை மு.கா. முன்வைக்கும். அரசாங்கத்துக்கு ஆதரவளிக்காத பட்சத்தில் அமைச்சுப் பதவிகளுக்கு ஆப்பு வைக்கப்படும் அச்சம் பாதுகாப்பு  உல்லாசம் வரப்பிரசாதங்கள் என்ற அனைத்தும் வெட்டப்படும் அச்சம் மு.கா. மேலிடத்துக்கு இருக்கிறது.

ஆகவே மக்கள் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்ற எண்ணத்தில் அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கப் போவது என்னவோ உறுதி. இந்த முதலாளித்துவ அரசியல்வாதிகள் யாருமே வாக்கு கேட்பதில்லை. மக்களுக்காக என்ற போர்வையில் இவர்கள் தமது பதவிகளையும் வரப்பிரசாதங்களையும் தக்கவைத்துக் கொள்வதற்காகவும் மேலும் மேலும் உல்லசங்களை அனுபவிப்பதற்காகவுமே தேர்தல் என்ற போலி ஜனநாயகத்திற்குள் மறைந்து கொண்டு மக்களை மடையர்களாக்கி வருகிறார்கள்.

ஆகவே இவற்றையெல்லாம் சிந்தித்துப் பார்க்கும்போது அடுத்த முதலமைச்சர் ஒரு முஸ்லிமாக இருக்கக் கூடுமோ?

http://www.lankaviews.com - 10/09/2012