25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

 

    

    
தமிழ் நாட்டிற்கு சென்ற சிங்கள யாத்திரீகர்களான சாதாரண பயணிகள் மீது இனத்துவேச அடிப்படையில் எதிர்ப்பும் தாக்குதலும் நடத்தப்பட்டிருப்பது வெறுக்கத்தக்க இனவெறிச் செயலாகும். இது போன்ற அற்பத்தனமான செயற்பாடுகள் எவ்வகையிலும் இலங்கைத் தமிழர்களுக்கு உதவப்போவதில்லை. இன உணர்வுச் செயற்பாடு என்ற பெயரில் முன்னெடுக்கப்படும் இத்தகைய இன வக்கிரம் கொண்ட எதிர்ப்பையும் தாக்குதலையும் எமது புதிய-ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது. இலங்கையின் பேரினவாத ஒடுக்குமுறையை நியாயபப்படுத்தி இன வன்முறையைத் தூண்டக்கூடிய இவ்வாறான செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும் என எமது கட்சி வற்புறுத்துகிறது.

 


இவ்வாறு புதிய-ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் அரசியல் குழு சார்பாக அக் கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா. செந்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


மேலும் அவ் அறிக்கையில், இலங்கையில் பேரினவாத ஒடுக்குமுறை தொடரப்படுவதும் அதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமைதாங்குவதும் உலகறிந்த உண்மையாகும். இங்கு இன ஒடுக்குமுறைக்கு உள்ளாகி நிற்கும் தமிழ் மக்களுக்கு ஆதரவும் ஆறுதலும் மட்டுமன்றி நியாயமான தீர்வை வற்பறுத்தி நிற்பதும் தமிழ் நாட்டு மக்களுக்குரிய தார்மீகக் கடமையாகும். அவ்வாறான தமிழ் நாட்டு மக்களின் இலங்கை மக்களுக்கான ஆதரவைச் சில தமிழ் உணர்வாளர்கள் என்போரும் திராவிட இயக்கக் கட்சிகளும் தத்தமது நலன்களுக்கும் குறுகிய நோக்கங்களுக்குமே பயன்படுத்தி வருகின்றனர். அதன் வழியிலேயே தமிழ் நாட்டிற்கு சென்ற சிங்கள மாணவ விளையாட்டு வீரர்களுக்கு எதிர்ப்பும் யாத்தீரிகர்களாகச் சென்ற பயணிகள் மீது தாக்குதலும் நடாத்தப்பட்டுள்ளது. இது பேரினவாத ஒடுக்குமுறையாளர்களுக்கும் சாதாரண சிங்கள மக்களுக்கும் வேறுபாடு காணத் தெரியாத தமிழ் இனவாதச் செயற்பாட்டளார்களின் குறுகிய இனவெறிச் செயலேயாகும். எனவே இவ்வாறான செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும் என்பதை எமது கட்சி மீண்டும் வலியுறுத்திக் கொள்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.


புதிய ஜனநாயக மாக்சிய - லெனினிசக் கட்சி
07-09-2012