28
Fri, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இன்றைய அரசாங்கம் பாசிசத்தனமான இனப்படுகொலை செய்யும் ஆட்சியை நடாத்தி வருகின்றது. அண்மையில் வவுனியாச் சிறையிலும் பின் மஹரச் சிறையிலும் தமிழ் அரசியல் கைதிகள் மீது நடாத்தி கொடூரத்தாக்குதலிலேயே நிமலரூபன், டில்ருக்ஷன் ஆகிய இரண்டு பேரின் உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளன.  இச்சிறைப் படுகொலைகள் வரலாற்றில் தமிழ் அரசியல் கைதிகள் மீதான மூன்றாவது படுகொலைச் சம்பவமாகும்.

1983ல் வெளிக்கடைச் சிறையில் 52 பேரும், 2000ம் ஆண்டில் பண்டாரவளை பிந்துனுவௌ புனர்வாழ்வு தடுப்பு முகாமில் 31 பேரும், இப்போது வவுனியாச் தாக்குதலில் இரண்டு பேரும் இரத்தம் கொட்ட கொட்டத் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இது இனவெறி கொண்ட பேரினவாத ஆட்சிகளின் கீழான இனப் படுகொலைகளேயாகும். இவற்றை தடுத்து நிறுத்தும் ஆற்றல் மாபெரும் மக்கள் சக்திக்கே உண்டு.  எனவே நீதிகேட்க மக்கள் அணிதிரள வேண்டும். அதுவே அடக்குமுறைகளை எதிர்த்து நிற்பதற்கான ஒரே மார்க்கமாகும்.

இவ்வாறு 15.08.2012 அன்று யாழ் நகரில், இரண்டாவது கைதியாகக் கொல்லப்பட்ட டில்ருக்ஷனின் படுகொலையைக் கண்டித்தும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பின் நிகழ்த்திய உரையில் புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா. செந்திவேல் குறிப்பிட்டார்.


தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில், பல்வேறு அரசியல் கட்சிகள் பொது அமைப்புகள் கலந்து கொண்ட மேற்படி கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெரும் தொகையானோர் கலந்து கொண்டு மகிந்த அரசின் இன ஒடுக்குமுறைக்கு எதிரான முழக்கங்களை முழங்கினர். ஆர்ப்பாட்ட முடிவில் கட்சிகளின் தலைவர்கள் உரையாற்றினர். அப்போது பு.ஜ.மா.லெ.கட்சியின் சார்பாக உரையாற்றிய சி.கா. செந்திவேல் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது:>

இலங்கையில் இன ஒடுக்குமுறை உருவாகி வளர்ந்து வந்த கடந்த அறுபது ஆண்டுகளில் அதன் கொடூர கொலை வெறிக்கு இன்று வரை சுமார் இரண்டு இலட்சம் தமிழ் மக்கள் வரை காலத்திற்கு காலம் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். இந்த நிலை தடுக்கப்பட வேண்டும். வெறுமனே பாராளுமன்றம், வாக்கு வங்கி என்பனவற்றுக்கான பாதையில் போராட்டங்கள் திசை திருப்பக் கூடாது. மக்கள் சக்தியை அணித்திரட்டக்கூடிய வெகுசன எழுச்சிகளும் போராட்டங்களுமே இன்றைய தேவை. அத்தகைய போராட்டங்களை முன்னெடுப்பதற்குப் புதிய பாதையில் புதிய பயணமும் அவசியமாகும். கடந்தகால பட்டறிவுகளில் இருந்து ஒரு உறுதியான பொது வேலைத்திட்டத்தின் அடிப்படையில் இன ஒடுக்கு முறையை நேர்மையாக நின்று எதிர்த்துப் போராடக் கூடிய அனைத்து சக்திகளும் ஐக்கியப்பட வேண்டும். அத்தகைய பொது வேலைத்திட்டம் ஏனைய தேசிய இனங்களான முஸ்லிம், மலையகத் தமிழ் மக்களையும் இணைத்து முன்செல்வதாக அமைய வேண்டும். அதேவேளை தென்னிலங்கை மக்களின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் பெறக்கூடிய போராட்டமாக இருக்க வேண்டும். அத்தகைய பரந்த, விரிந்த போராட்டத்தளமே இன ஒடுக்குமுறையை எதிர்த்து நிற்கக்கூடிய தூர நோக்கிலான சரியானதொன்றாக அமைய முடியும்.

மேற்படி கண்டன ஆர்ப்பாட்டத்தை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடு செய்திருந்தது. பல்வேறு அரசியல் கட்சிகளும் தலைவர்களும் கலந்து கொண்ட இவ் ஆர்ப்பாட்டத்தில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் பெருமளவில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

-புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சி  (வட பிராந்தியக் குழு16/08/2012)