28
Fri, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

வவுனியச் சிறைச்சாலையில் மிருக்கத்தனமாகத் தாக்கப்பட்ட உயிரிழந்த தமிழ் அரசியல் கைதியான நிமலரூபனின் கொலையைக் கண்டித்தும், அரசியல் கைதிகள் சிறைகளில் சித்திரவதை செய்வதை நிறுத்தக் கோரியும், விசாரணை இன்றி சிறைகளில் தடுத்து வைக்கப்பட்ட அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வற்புறுத்தியும், வடக்கு கிழக்கில் நில ஆக்கிரமிப்பு – அபகரிப்பை நிறுத்தக் கோரியும் கடந்த 18ம் திகதி வடமராட்சி நெல்லியடி மத்தியில் அமைந்த பேருந்து நிலையத்தில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டப் போராட்டம் இடம்பெற்றது. தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடு செய்த இப்போராட்டத்தில் புதிய-ஜனநாயக மாக்சிசி-லெனினிசக் கட்சியும் ஏனைய அரசியல் கட்சிகளும் பொது அமைப்புகளும் கலந்து கொண்டன. கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா. செந்திவேல், வட பிராந்தியச் செயலாளர் கா. செல்வம் கதிர்காமநாதன், தொழிற்சங்கப் பிரதிநிதி கா. பஞ்சலிங்கம், அரசியல் குழு உறுப்பினர் கா. தணிகாசலம், வடபிராந்திய வவுனியா உறுப்பினர் ந. பிரதீபன் உட்பட கட்சியின் இளைஞர்கள், தொழிற்சங்க உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

மேற்படி போராட்டத்தை தடுக்க பொலிஸ் தரப்பில் நீதிமன்ற உத்தரவு கோரப்பட்ட போதும் பருத்தித்துரை நீதவான் தீதிமன்றம் அதனை நிராகரித்து விட்டது. இருப்பினும் அப்போராட்டத்தை தடுக்க ராணுவமும் புலனாய்வுத் துறையினரும் மக்கள் மத்தியில் வதந்தி மிரட்டல் அச்சுறுத்தல்களை விட்டுக் கொண்ட போதிலும் பெருந்தொகையானோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர். அதனைப் பொறுக்க முடியாத ராணுவப் புலனாய்வுத் துறையினர் என்று நம்பப்படும் நான்கு போர் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் ஆர்ப்பாட்ட இடத்திற்கு வந்து புலிக் கொடி இரண்டைக் காட்டிச் சென்றனர். அவ்வேளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டடோர் முழங்கியவாறே நின்றனர். இதனைப்  பெருமளவிளான பொலிசார் அவதானித்தப்படி நின்றனறே தவிர புலிக் கொடியுடன் பிடிக்கவோ தடுக்கவோ முற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மு.ப. 11 மணிக்கு ஆரம்பமான போராட்டம் பகல் பன்னிரண்டு மணிவரை மிக ஆக்கிரோசமாக இடம்பெற்றது. நிறுத்து நிறுத்து கொலைகளை நிறுத்து! சிறைச்சாலையில் சித்திரவதை செய்யாதே! அரசியல் கைதிகளை உடனே விடுதலை செய்! ராணுவமே நில அபகரிப்பை நிறுத்து! நில ஆக்கிரமிப்பை நடத்தாதே! ஜனநாயகத்தை மறுக்காதே! மனித உரிமைகளை மிதிக்காதே! நிமலரூபன் கொலைக்கு நீதியான விசாரணை வேண்டும்! சிறைக் கொலையை மூடி மறைக்காதே! போன்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன.


கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் முடிவில் கட்சிகளினதும் பொது அமைப்புகளினதும் பிரதிநிதிகள் தமது கண்டன எதிர்ப்பு உரைகளை ஆற்றினர்.