30
Sun, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times


இன்று வடக்கு கிழக்கின் தமிழ் மக்கள் பேரினவாத ராணுவ ஒடுக்கு முறையின் கிழேயே சுதந்திரமற்ற ஜனநாயகமற்ற மனித உரிமை மறுக்கப்பட வாழ்வு வாழ்ந்து வருகின்றனர். அதன் அடிப்படையிலேயே வவுனியாச் சிறைச்சாலையிலும் பின் மகரச் சிறைச் சாலைசாலையில் வைத்துத் தமிழ் அரசியல் கைதிகள் மிலேச்சத்தனமாகக் தாக்கப்பட்டுள்ளனர். அத்தாக்குதலிலேயே நிமலரூபன் என்ற இளம் அரசியல் கைதி கொல்லப்பட்டுள்ளார். இப் பேரினவாத கொலை வெறியை நாம் மிக வன்மையாக கண்டிக்கிறோம். பேரினவாத ஆளும் வர்க்கத்தினர் இதுபோன்ற சிறைச்சாலை படுகொலைகளுக்கு இலங்கையில் பெயர் பெற்றவர்கள் என்பது உலகறிந்த உண்மையாகும். அது மட்டுமன்றி நீண்ட காலமாக அரசியல் கைதிகள் விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டு வருவதன் விளைவே வவுனியாச் சம்பவமாகும்.

அதனாலேயே அவர்களுடைய விடுதலையை மீண்டும் மீண்டும் வற்புறுத்தி வருகின்றோம். அதேவேளை யுத்தத்திற்கு பின்னான கடந்த மூன்று வருடங்களில் வடக்கு கிழக்கு மக்களின் வாழ்விடங்கள் தொழில் இடங்கள் பறிக்கப்பட்டும் ஆக்கிரமிக்கப்பட்டும் வருகின்றன. அங்கு சிவில் நிர்வாகம் கிடையாது. அங்கு யாவும் ராணுவத்தினாலேயே தீர்மானிக்கப்படுகின்றன. இந்நிலையில் வடக்கு கிழக்கு மக்கள் நிம்மதியான வாழ்வின்றி அடக்கு முறைகளின் மத்தியில் அச்சத்துடனும் அச்சுறுத்தல்களுடனுமே வாழ்ந்து வருகின்றனர். எனவே இவற்றுக்கு எதிரான வெகுஜன அரசியல் எழுச்சியும் போராட்டமும் அவசியமாகும்.


மக்களின் வெகுஜனப் போராட்டங்கள் எழுச்சிப் பெற்றால் அவற்றை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்தவோ தோற்கடிக்கவோ முடியாது. ஆதாலால் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை முன்வைத்து ஒரு பொது வேலைத்திட்டத்தினூடாக மக்கள் ஜனநாயக முற்போக்கு மக்கள் சார்புக் கட்சிகளும் மக்களை அணித்திரட்டி முன்செல்ல வேண்டும். அத்தகைய வெகுஜன போராட்ட அரசியல் மார்க்கமே இன்று நம் அனைவருக்கும் தேவையாக உள்ளது. மக்களது பலத்திற்கு பங்களிப்புச் செய்யக்கூடிய இத்தகைய துணிவான வெகுஜனப் போராட்டங்கள் சகல தடைகளையும் மீறி முன்னெடுக்கப்படல் வேண்டும். அதற்கு எமது புதிய-ஜனநாயக மாக்சிய-லெனினிசக் கட்சி என்றும் முன்னிற்கும் என ஆர்ப்பாட்ட முடிவில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய தோழர் சி.கா. செந்திவேல் குறிப்பிட்டார்.