28
Fri, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கடந்த மாதம் 29ம் திகதி வவுனியாச் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள மீது படையினர் மோசமான தாக்குதலை மேற்கொண்டனர். படுகாயங்கள் அடைந்த அவர்களை மகர சிறைச்சாலைக்கு மாற்றிய பின்பு அங்கும் வைத்துத் தாக்கப்பட்டனர். மேற்படி தாக்குதல்களில் மோசமான படுகாயங்களுக்கு உள்ளானவர்களில் ஒருவரான கணேசன் நிமலரூபன் என்ற இளைஞன் இம் மாதம் 4ம் திகதி உயிரிழந்துள்ளார். தமிழ் அரசியல் கைதிகளின் மீதான மேற்படி கொடூரத் தாக்குதலும் படுகொலையும் மிலேச்சத்தனமானதும் பேரினவாத பாசிசத்தனம் கொண்ட தாக்குதலுமாகும். அது மட்டுமன்றி இறந்த இளைஞனின் வெற்றுடலைக் கூட பெற்றோரிடம் ஒப்படைக்க மறுத்து வரும் அக்கிரமத்தை மகிந்த சிந்தனை ஆட்சி செய்து நிற்கிறது. இதனை எமது கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது. நீண்டகாலமாக விசாரணை இன்றி அரசியல் கைதிகளைத் தடுத்து வைத்திருந்து வருவதன் விளைவே மேற்படி கண்டனத்திற்கும் துயரத்திற்குமுரிய சம்பவமாகும் என எமது கட்சி சுட்டி காட்டுகிறது.

 


இவ்வாறு புதிய ஜனநாயக மாக்சிச- லெனினிசக் கட்சியின் அரசியல் குழு சார்பில் அதன் பொதுச் செயலாளர் சி.கா.செந்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


மேலும் அவ் அறிக்கையில், தமிழ் அரசியல் கைதிகள் ஐந்து பத்து பதினைந்து வருடங்களுக்கு மேலாக விசாரணை இன்றித் தடுத்து வைக்கப்பட்டு வந்துள்ளனர். அவர்களை விடுதலை செய்யும்படி கோரிப் பல்வேறு அழுத்தப் போராட்டங்கள் சிறைச்சாலைகளுக்கு உள்ளேயும் வெளியேயும் நடாத்தப்பட்டு வந்துள்ளன. ஆனால் பௌத்த தர்மம் பேசும் ஆட்சியினர் அவர்களுக்கான விடுதலைக் கோரிக்கைகளைச் செவிகளில் வாங்கவே இல்லை. அதற்குப் பதிலாக சிறைச்சாலைகளில் தமிழ் அரசியல் கைதிகள் மீது பேரினவாத ஒடுக்குமுறை மமதையும் தாக்குதல்களும் மேற்கொள்ளப்படுகின்றன. இத் தாக்குதல் முன்னைய சிறைச்சாலைத் தாக்குதல்களையும் படுகொலைகளையும் நினைவுபடுத்துகின்றன. 1983ல் வெலிக்கடைப் படுகொலைகளும் 2000ம் ஆண்டில் பிந்துனவௌ புனர்வாழ்வு முகாம் படுகொலைகளும், களுத்துறைச் சிறைச்சாலைத் தாக்குதல்கள், பூசாச் சித்திரவதைகள் போன்றவற்றின் தொடர்ச்சியாகவே தற்போதைய வவுனியாச் சிறைச்சாலைத் தாக்குதலையும் படுகொலையையும் காண முடிகிறது. புத்தரின் போதனைகள் பற்றியும் பௌத்த தர்மம் பற்றியும் நாளாந்தம் பரப்புரை செய்து வரும் இன்றைய ஆட்சியில் இவ்வாறான மிலேச்சத்தனமான தாக்குதலும் மிருகத்தனமான படுகொலையும் இடம்பெற்றிருப்பது ஆட்சித் தலைவர்களை வெட்கித் தலைகுனிய வைத்துள்ளது. இக்கொடூரச் சம்பவத்திற்குப் பின்பாவது அனைத்து அரசியல் கைதிகளையும் பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்க அரசாங்கம் முன்வரவேண்டும் என்பதை எமது கட்சி வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறது என அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சி  07.07.2012