02
Tue, Jul

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் புதிதாக விகாரைகளை நிர்மாணிப்பதானது நாட்டில் இனவாதத்தையும், மதவாதத்தையும் தூண்டும் செயலாகும் எனவும் யுத்தம் முடிவடைந்துள்ள போதிலும் தமிழர்களின் வாழ்க்கை இன்னும் இருண்ட யுகத்திலேயே இருக்கின்றது எனவும் தேசிய பிக்குகள் முன்னணியின் பிரதித் தலைவர் கல்யாண ரன்ஸ்ரீ தெரிவித்துள்ளார்.

தெற்கிலுள்ள விகாரைகளைப் புனரமைப்பதற்கு, பாதுகாப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்காத அரசு, வடக்கு, கிழக்கில் விகாரைகளை அமைத்து அதீத மதப்பற்றை வெளிப்படுத்துவதற்கு முயற்சிக்கின்றது எனவும் அந்த முன்னணி குறிப்பிட்டுள்ளது.

வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் போர் முடிவடைந்த கையோடு அரசு திட்டமிட்ட அடிப்படையில் சிங்களக் குடியேற்றங்களை அரங்கேற்றுவதுடன், புதிதாக விகாரைகளையும் அமைத்து வருகின்றது. பௌத்தர்கள் இல்லாத பிரதேசங்களிலும் விகாரைகள் அமைக்கப்படுகின்றன என்று தமிழ் கட்சிகள் சுட்டிக்காட்டி வருகின்றன.

யுத்தம் முடிவடைந்ததையடுத்து, தமிழ் மக்களுக்கு அவர்களின் நிலங்களை அரசு மீளப் பெற்றுக்கொடுத்திருக்கவேண்டும்; வயல் நிலங்களை  கையளித்திருக்கவேண்டும்; மீளக்குடியமர்த்தல் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தியிருக்க வேண்டும்.

ஆனால், அரசு அவ்வாறு செய்யவில்லை. யுத்தம் முடிவடைந்துள்ள போதிலும் தமிழ்மக்கள் இன்னும் முகாம்களிலேயே முடங்கியிருக்கின்றனர். அவர்க்ள இருண்ட யுகத்திலிருந்து இன்னும் மீளவில்லை. அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை அரசு செய்யவில்லை.

யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் அரசு நாட்டில் புதுவிதமான பிரச்சினைகளை உருவாக்குவதற்கு முயற்சிக்கின்றது. நீங்கள் சொன்னதுபோல பௌத்தர்கள் இல்லாத, தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு பிரதேசத்தில் விகாரைகளை அமைப்பதானது நாட்டில் இனவாதத்தையும், மதவாதத்தையும் தூண்டும் செயலாகும்.

தெற்கில் நிறையவே விகாரைகள் உள்ளன. பிக்குகள் இன்மையால் அவை பராமரிக்கப்படாமல் உள்ளன. எனவே, உள்ளவற்றைப் பாதுகாப்பதற்கும், புனரமைப்பதற்கும் அரசு நடவடிக்கை எடுத்ததாக எமக்குத் தெரியவில்லை.

மாறாக, வடக்கு, கிழக்கில் புதிதாக விகாரைகளை அமைப்பதோ அல்லது புத்தர் சிலைகளை நிர்மாணிப்பதோ மதப்பற்று அல்ல. முதலில் இருப்பவற்றைப் பாதுகாக்க பராமரிக்க நடவடிக்கை எடுத்தல் அவசியம் என தேசிய பிக்குகள் முன்னணியின் பிரதித் தலைவர் கல்யாண ரன்ஸ்ரீ தெரிவித்துள்ளார்.