25
Tue, Jun

2017
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கடந்த பெப்ரவரி மாதம் முதல் வடக்கு கிழக்கு வேலையற்ற பட்டதாரிகள் பல கோரிக்கைகளை முன்வைத்து மட்டக்களப்பு, அம்பாறை, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் இரவு பகலாக தொடர்ச்சியான சத்தியாயககிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்கலைக்கழக பட்டபடிப்பை முடித்தவர்களிற்கு அரசாங்கம் வேலை வழங்குவதனை கைவிட்டுள்ளது. இதனால் பல ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் வேலையின்றி தவிக்கின்றனர். தமக்கு நீதியான தீர்வை அரசாங்கம் முன்வைத்து நடைமுறைப்படுத்தும் வரை தமது போராட்டத்தினை கைவிடப்போவதில்லை என போராட்டத்தில் உறுதியாக இருக்கின்றனர். 

அரசியல்வாதிகள் பலரும் போராட்ட இடங்களிற்கு சென்று பல வாக்குறுதிகளை வழங்கி சென்று கொண்டிருக்கின்ற போதும் எதிர்கட்சியோ அன்றி அரசாங்கமோ இவர்களின் கோரிக்கைகளை கேட்க தயாரற்ற நிலையிலேயே இருக்கின்றன. வேலையற்றவர்களிற்கு வேலை வழங்குவதனை விட்டு விட்டு ஏற்கனவே வேலையிலிருந்து ஓய்வு பெற்றவர்களை குறைந்த ஊதியத்திற்கு வேலைக்கு அமர்த்துவதும் ஓய்வுபெறும் வயதெல்லையை நீட்ச்சி செய்வதுமே நவதாரவாத  பொருளாதார கொள்கையினை முன்னெடுக்கும் அரசின் கொள்கையாக இருக்கின்றது. எதிர்க்கட்சி தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சொந்த நலன்களை பற்றி மட்டுமே அக்கறை கொண்டவர்களாக இருப்பது இவர்களுக்கு வாக்களித்து பாராளுமன்றம் அனுப்பிய மக்களின் துயரமாகும். 

படிப்பை முடித்த பட்டதாரிகளுக்கு வேலை வழங்க வழியில்லாத ஆட்சியாளர்கள் தனியார் பல்கலைக்கழகங்களை திறந்து மேலும் பட்டதாரிகளை உருவாக்கும் நோக்கம் மக்களிடம் இருக்கும் பணத்தை தனியார் கொள்ளையிட வழி வகுப்பதை தவிர வேறு எதுவாக இருக்க முடியும்.

அனைத்து பட்டதாரிகளிற்கும் உடனடியாக நியமனம் வழங்கு!

வருடாந்தம் தொழில் வழங்கும் தேசிய கொள்கையொன்றை தயார் செய்!