25
Tue, Jun

2016
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

முன்னிலை சோசலிசக்கட்சியின் மூன்று முக்கிய தலைவர்களை கைது செய்து, சிறையில் அடைப்பதன் மூலம் மக்கள், மாணவர் போராட்டங்களை முடக்க மைத்திரி - ரணில் நல்லாட்சி அரசு திட்டமிட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதற்காக போலி குற்றச்சாட்டுக்களை இந்த மூவர் மீதும் சுமத்தும் நடவடிக்கை பொலிஸ் திணைக்களத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மகிந்தா அலிபாபாவையும் அவரது திருடர்களையும் துரத்தி இந்த நாட்டிற்கு நல்லாட்சி வழங்குவதாக உறுதி அளித்து தேர்தலை வென்ற நல்லாட்சி அரசு, அலிபாபாவின் திருடர்களை தம்முடன் இணைத்துக் கொண்டதன் மூலம் இதுவும் அலிபாபாவின் ஆட்சிதான் என்பது வெளிப்படையாகி விட்டது.

நவதாராள பொருளாதாரம் என்ற பெயரில் மீண்டும் அந்நியர்கள் இலங்கை மக்களின் உழைப்பு - சேமிப்பு முதல் நாட்டின் வளங்களை கொள்ளையிட தாராளமாக கதவை அகல திறந்து விட்டுள்ளது இந்த நல்லாட்சி அரசாங்கம். நவதாராளவாத பொருளாதாரத்தை முன்தள்ளும் மேற்குலகம் இலங்கையில் தமது திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த ஆளும் கட்சிகள், எதிர்க்கட்சிகள், போலி இடதுசாரிய கட்சிகள் என அனைத்தையும் ஓரணிக்குள் சலுகைகள், பெரும் பண கொடுப்புக்கள், மிரட்டல்கள் மூலமாக கொண்டு வந்துள்ளது. இந்நிலையில் இன்று அரசு பல்தேசிய கம்பனிகள், நிறுவனங்கள் மற்றும் ஏகாதிபத்தியங்களிற்கு சார்பாக பல சட்டங்கள், திட்டங்களை அமுல்படுத்த ஆரம்பித்துள்ளது. இதனை மக்கள் சார்பாக நின்று எதிர்க்க வேண்டிய எதிர்க்கட்சி பாராளுமன்றத்தில் தூங்கி வழிகின்றது.

பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகிக்காத போதும் முன்னிலை சோசலிசக் கட்சியும் மற்றும் சில இடதுசாரி கட்சிகளும் தான் மக்கள் சார்பாக முன்னின்று இந்த அநியாயங்களிற்க்காக குரல் கொடுத்தும் போராடியும் வருகின்றன.

நாடு முழுவதும் நடைபெறுகின்ற நிலப்பறிப்புக்கு எதிராகவும்;  அரசியல் கைதிகளின் விடுதலைக்காகவும்; மீனவர்கள், விவசாயிகள், தொழிலாளர்களின் உரிமைகளிற்காகவும்; இலவச மருத்துவம் - கல்வி உரிமைக்காகவும்; அரசு கொண்டு வரும் மக்கள் தொழிலாளர்கள் விரோத சட்டங்களை எதிர்த்தும்; மக்களை அணிதிரட்டி, அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தி போராட்டங்களை நடாத்திக் கொண்டிருக்கின்றனர்.

முன்னிலை சோசலிச கட்சியின் மக்கள் நலன் சார்ந்த இந்த நடவடிக்கைகள் மைத்திரி - ரணில் அரசின் நாட்டை கொள்ளையிடும் செயற்பாட்டிற்கு இடையூறாக இருப்பதனால்; தலைவர்களை கைது செய்வதன் மூலம் போராட்டங்களை நிறுத்தலாம், நவதாராளவாத கொள்ளையினை தொடர அந்நிய ஏகாதிபத்தியங்களிற்கு தங்கு தடையின்றி வழி திறந்து விடலாம் என்னும் நோக்கில் இந்த கைதுகள் இடம்பெறவுள்ளன.