28
Fri, Jun

2016
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

லலித் மற்றும் குகன் ஆகியோர் பாதுகாப்பு அமைச்சினால் கடத்தப்பட்டு , தடுத்து வைக்கப்பட்டிருந்தமை உண்மை என்பதை கெஹலிய மீண்டும் ஏற்றுக் கொண்டுள்ளார்.

முன்னிலை சோசலிசக் கட்சியின் முக்கியஸ்தர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தம் ஆகியோர் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்டமை குறித்த வழக்கு இன்று யாழ்ப்பாணம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.

கடந்த 2011ம் ஆண்டில் இவர்கள் கடத்தப்பட்ட சில நாட்களின் பின்னர் அன்றைய அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் ஊடகவியலாளர்கள் இதுகுறித்து கேள்வியெழுப்பியிருந்தனர்.

அதற்குப் பதிலளித்திருந்த அவர் லலித் மற்றும் குகன் ஆகியோர் சட்டவிரோதமாக கடத்தப்படவில்லை என்றும் விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இன்றைய வழக்கு விசாரணையின் போது இது குறித்து முன்னாள் அமைச்சர் கெஹலியவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.அதற்குப் பதிலளித்த கெஹலிய,

அக்கால கட்டத்தில் லலித் மற்றும் குகன் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சிடம் இருந்து கிடைக்கப் பெற்ற அறிக்கையொன்றை ஆதாரமாகக் கொண்டே தான் அவ்வாறு தெரிவித்ததாகவும், லலித் மற்றும் குகன் ஆகியோர் பாதுகாப்புத் தரப்பினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்தது உண்மை என்றும் அதற்குப் பின்னர் என்ன நடந்தது என்பது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியின் கடைசிக்காலம் வரை அன்றைய பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, லலித்-குகன் கடத்தல் சம்பவம் குறித்து எதுவுமே தெரியாது என்று மறுப்புத் தெரிவித்திருந்தார்.

எனினும் கெஹலியவின் வாக்குமூலம் தற்போது கோத்தபாயவின் மறுப்பை பொய்யாக்கியுள்ளது.

இதனையடுத்து வழக்கின் மேலதிக விசாரணையை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 12ம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம், அன்றைய தினம் மேலதிக விசாரணைகளுக்காக அச்சுவேலிப் பொலிசாரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளது.

நன்றி: தமிழ்வின்