25
Tue, Jun

2015
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நேற்று, 27.12.2015 அன்று  மீதொட்டமுல்ல குப்பை மேட்டை அகற்றக்கோரிப் போராடும் மக்கள் மீது ரணில்- மைத்ரி அரசின் கைகூலிகள் தாக்குதல் நடாத்தியுள்ளனர். மேற்படி குப்பை மேட்டை  அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் கால வரையறை அற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்னிலையில், நேற்று 27.12.2015 அன்று அப்பகுதிக்கு ஆளணியுடன் வந்திறங்கிய ஆளுங்கட்சிகளின் அடிவருடியான கொலனாவ பிரதேச சபைத் தலைவர், போராடும் மக்கள் மீது ஆயுதங்களால் தாக்குதல் நட்டதியுள்ளார். இத் தாக்குதலால் காயமடைந்த 10 இற்கும்  மேற்பட்ட போராட்டதில் ஈடுபட்ட மக்களும், இவர்களுக்காக சட்ட ரீதியாக போராடும் சட்டத்தரணி நுவான் போபகேயும்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பல வருடங்களாக, மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களால், கொலன்னாவ பிரதேச சபைக்கு உட்பட்ட 19 ஏக்கர் அளவிலான மீதொட்டமுல்ல மலைப் பகுதி, கொழும்பு உட்பட்ட நகரங்களின் குப்பைகளால் நிரம்பி வழிகிறது. அத்துடன் இன்னும் 3 அரை  ஏக்கரால்  குப்பை மேட்டை விரிவுபடுத்த அரசு வேலைகளை முன்னெடுத்துள்ளது. இதனால், இப் பகுதியில் வாழும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் நேரடியாக பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். புற்றுநோய், சுவாச நோய்கள், நுரையீரல் மற்றும் இரைப்பை கோளாறுகள் இப்பகுதி மக்களை வாட்டி வதைக்கின்றது. குறிப்பாக குழந்தைகளும், பெண்களும், வயோதிபரும் குப்பை மேட்டால் ஏற்படும் வியாதிகளால் அதிக்கமாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கடந்த வருடம் வரை ஆட்சியிலிருந்த மஹிந்த குடும்பத்திற்கு, இக் குப்பை மேட்டை உடனடியாக இல்லாதொழிக்கும்படி நீதி மன்றத்தால் அறிவுறுத்தப்பட்டது. இவ்வறிவுறுதலை  ஏற்க மறுத்த மஹிந்த அரசு தனது அதிரடிபடையை ஏவி, அன்று போராடிய மக்களை தாக்கியது. அன்று எதிர்கட்சியில் இருந்த ரணில், மஹிந்தவுக்கு எதிராக அறிக்கை விட்டார். தாம் அதிகாரத்துக்கு வந்தால், உடனடியாக குப்பை மேட்டை இல்லாதொழிப்பதாக வாக்குறுதி கொடுத்தார். இப்போ ரணில் - மைத்ரி ஆட்சியில் மாபியாக் கும்பலையும், சண்டியர்களையும் போராடும் மக்கள் மீது ஏவி விட்டு, குப்பை மேட்டுக்கு எதிராகப் போராடும்  மக்களை அப்பகுதியை விட்டே அகற்ற முயற்சிகள் நடக்கின்றன. மூவின மக்களும் இணைந்து நடத்தும் இப்போராட்டம், எது நடந்தாலும் - எவ்வகை வன்முறை நிகழ்த்தப்பட்டாலும்  தொடருமென போராட்டத்  தலைமை அறிவித்துள்ளது.