25
Tue, Jun

சீவுளிச்சித்தன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

“நெடுந்தீவில் குதிரைகள் இறக்கின்றன என அறிந்த வட மாகாண சபை முதலமைச்சர் அது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஒரு குழுவை நியமித்து நெடுந்தீவுக்கு அனுப்பியுள்ளார்.” என ஊடகங்களில் ஒரு செய்தி வெளிவந்துள்ளது. 

கடவுள் பக்தி,  நீதி,  நேர்மை,  ஜீவகாருண்யம் கொண்ட முதலமைச்சர் இக்குழுவுக்கு ‘குதிரைகள் பற்றிய அறிவும் அனுபவமும் கொண்டவர்களையே’ தெரிவு செய்திருப்பார் என அவரை முதலமைச்சர் பதவியில் அமர்த்திய மக்கள் நிச்சயம் எதிர்பார்த்திருப்பார்கள். அத்துடன் அக்குழுவில் அண்மையில் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக பதவியிழந்த முன்னாள் வடமாகாண சபை அமைச்சர் ஒருவரை உள்ளடக்கியதன் மூலம் முதலமைச்சர் ஊழலுக்கு எதிரான தனது கடும் போக்கையும் மக்களுக்கு வெளிப்படுத்திக் காட்டியுள்ளார்.

 

பல நாடுகளில் மிருகவதைக்கு எதிராக பல அமைப்புக்கள் போராட்டம் நடாத்தி அதன் உறுப்பினர்கள் சிறைவாசம் அனுபவிக்கிறார்கள்.  மரங்கள் வெட்டப்படுவதை எதிர்த்துப் போராடும்   அமைப்புக்கள் கூட உள்ளன.  அண்மையில் பிரான்சு நாட்டில் நடாத்தப்பட்ட பாராளுமன்றத் தேர்தலில் மிருகங்கள் பாதுகாப்புக்காக ‘மிருகங்கள் உரிமைக்கான கட்சி’ என்ற  அரசியல் கட்சி ஒன்று தனது வேட்பாளர்களை 147 தொகுதிகளில் போட்டியிட நிறுத்தியிருந்தது.

‘வட மாகாண சபை’ குதிரைகளைப் பாதுகாக்க எடுத்த நடவடிக்கை ஜீவகாருண்யம் கொண்ட மனிதர்களால் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியதொன்றாகும். ஆனால் இந்த ஜீவகாருண்ய நடவடிக்கையை கடந்த காலங்களில் ஏன் மக்களின் பிரச்சனைகள் தொடர்பாக மேற்கொள்ளவில்லை என்பதும் அதே மனிதர்களால் இன்று முன் வைக்கப்படும் கேள்வியாகும்.

2013 செப்டெம்பர் 21ந் திகதி முதல் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட வட மாகாண சபை மக்களின் வாழ்வாதாரம் தொடர்பாக ஆற்றிய பணிகள் யாவை? அப்படி ஏதும் ஆற்றியிருந்தால் அவற்றால் மக்கள் அடைந்த பயன்கள் யாவை?

தீவுப்பகுதி மக்கள் காலங்காலமாக குடிநீர்ப் பிரச்சனையால் அல்லற்படுகின்றனர். ஒரு குடம் தண்ணீர் அள்ள பல மைல்கள் நடக்கிறார்கள்; ஒழுங்கில்லாமல் நீர் விநியோகிக்கும் தண்ணீர் தாங்கிகளின் வரவுக்காக பல மணி நேரம் காத்திருக்கிறார்கள். யுத்த பாதிக்குள்ளானோர் பல வேறுபட்ட பிரச்சனைகளை எதிர்கொண்டபடி உயிர் வாழ்வதற்காகப் போராடிக் கொண்டிருக்கின்றனர். சுற்றுப்புற சூழல் மாசுபடுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது. மீனவர்கள், விவசாயிகள், தொழிலாளர், பட்டதாரிகள், மாணவர்கள், இளைஞர்கள், வயதானவர்கள் மத்தியில் பலவிதமான பிரச்சனைகள் தலைதூக்கியுள்ளன. சமூகத்தின் மத்தியில் போதைவஸ்து பாவனை, குற்றச்செயல்கள் அதிகரித்தபடி உள்ளன. 

நாட்டில் கடந்த சில வருடங்களாக ‘நுளம்புப் பரவல் தடுப்பு’ செயற்திட்டத்தின் கீழ், வீட்டுக் காணிக்குள் சிரட்டைகளில் நீர் தேங்கியிருந்தால் கூட தண்டப்பணம் அறவிடும் நடவடிக்கை சுகாதார பரிசோதகர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் இவ்வருட ஆரம்பத்தில் பலரின் உயிர்களைக் காவு கொண்ட தொற்றுநோயான “டெங்குக் காய்ச்சல்” பரவும் ஆபத்துத் தடுப்பு நடவடிக்கையின் போது யாழ் பொது வைத்தியசாலைக்குள் பொதுமக்கள் பிரவேசம் தடை செய்யப்பட்டிருந்தது. அதேவேளை அதே வைத்திசாலை முன்பாக கழிவு நீர் சாக்கடை வாய்க்காலில் சாக்கடை நீர் ஓட்டம் தடைப்பட்டு தேங்கி நின்று அதிலிருந்து “நுளம்புகள்” பெருகிப் பரவியதை மாநகர சபை - மாகாண சபை - அரசாங்க திணைக்கள ஊழியர்கள் உட்பட எந்தவொரு அதிகார வர்க்கமும் கண்டு கொள்ளவில்லை. மதிப்புக்குரிய மகாஜனங்களும் அது பற்றி அலட்டிக் கொள்ளவில்லை.

இவைகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க தமக்கு அதிகாரம் இல்லை(ஆளுனரை மாற்று – சுயாட்சியைத் தா! போன்ற கோசங்கள போடுவோர்) என்பவர்களுக்கு குதிரைகளைக் காப்பாற்றுவதற்கான அதிகாரம் எப்படி வந்தது? மக்களின் மேல் ஏற்படாத அக்கறை குதிரைகளின் மீது வந்தது ஏன்? என்று குடிமக்கள் - நாம் சிந்திக்க வேண்டிய அவசியம் இன்று எமக்குண்டு. 

வரலாற்றுப் பெருமைகள் நிறைந்த நெடுந்தீவு 8 கி.மீ. நீளம், 6 கி.மீ அகலம், 50 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டதாகும். இன்று ‘வெடியரசன் கோட்டை’ என்று அழைக்கப்படும் அழிந்த நிலையில் காணப்படும் கட்டிட இடிபாடுகள் சோழ மன்னர்கள் காலத்து சின்னங்களாகும். போர்த்துக்கீசரின் ஆக்கிரமிப்பு ஆட்சியை தோற்கடித்து உருவான டச்சுக்கார காலனித்துவ ஆக்கிரமிப்பு ஆட்சியின்(1600-1678) போது இலங்கையின் ஆளுனராக இருந்த   ரைக்லாவ் வொன் கூன்சு (Rijckloff van Goens) என்பவரால் 1660க்கும் 1675க்கும் இடைப்பட்ட காலத்தில் இத் தீவுக்கு( Delft) "டெல்வ்ற்" என ஒல்லாந்து நாட்டின் நகரம் (இந்த  Delft எனப்படும் நகரில் இருந்தே காலனிகளைக் கைப்பற்றும் நோக்கில் ‘டச்சுக் கிழக்கிந்திய கம்பெனி’ ஆரம்பிக்கப்பட்டு இயங்கியது) ஒன்றின் பெயர் வழங்கப்பட்டது. போர்த்துக்கீசர்களினால் கட்டப்பட்டு பின்னர் டச்சுக்காரர்களால் மெருகூட்டப்பட்ட கோட்டை ஒன்றும் அழிந்த நிலையில் இடிபாடுகளுடன் இன்று காணப்படுகிறது. அக்கால கட்டத்தில் ஒல்லாந்து நாட்டில் இருந்து ஆக்கிரப்புப் படைகளுடன் கொண்டு வரப்பட்ட குதிரைகளின் இனவிருத்திப் பரம்பரையே இன்று கவனிப்பாரற்று தீவில் அழிந்து கொண்டிருக்கும் குதிரைகளாகும். 

இன்று இத்தீவு உலக முதலாளித்துவ மூலதன முகவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த சில வருடங்களாக புதிய தாராளவாத பொருளாதாரத் திட்டத்திற்குள் சுற்றுலாத்துறை மிக முக்கிய பாத்திரம் வகித்து வருகிறது. யுத்த காலத்திலேயே 2009க்கு முன்னர் தென்னிலங்கையில் உல்லாசப் பயணிகளின் வருகை வருடத்திற்கு வருடம் அதிகரிக்கத் தொடங்கி விட்டது. புத்தளம், சிலாபம் ஆகிய கடல் பகுதிகளில் பல தீவுகள் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கடந்த ‘சிங்களத் தேசிய வீரர்களின்’ ஆட்சியின் போதே சுற்றுலாத்துறை அபிவிருத்திக்கென குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. யுத்தம் முடிவுற்றதனைத் தொடர்ந்து தற்போது வட இலங்கையிலும் சுற்றுலாத்துறை முதலீடுகள் அதிகரித்துள்ளன. இதில் தனியார் முதலீடுகளும் அடங்கும். 

இந்த வகையில் சுற்றுலாப் பயணிகளின் உல்லாசபுரியாக நாளை நெடுந்தீவு அமையக் கூடிய வாய்ப்புக்களும் அதனையொட்டிய திட்டங்களும் ஆலோசனைகளும் பரவலாக காணப்படுகின்றன. அதற்கான முன்னேற்பாடாகவே முதலமைச்சரின் கவனம் குதிரைகளின் மீது திரும்பியிருக்கக் கூடும். இக் குதிரைகளைப் பாதுகாக்கும் திட்டங்களுக்காக நாளை ஒல்லாந்து நாட்டிலிருந்து நிபுணர்கள் மற்றும் நிதி உதவி ஆகியன வந்து சேரலாம். தங்களது வரலாற்றுத் தளமான கோட்டையை புனரமைக்க ஒல்லாந்து அரசு முன் வரலாம்(ஏற்கனவே ‘தமிழ் தேசிய வீரர்களால்’ 1990-1995களில் அரைகுறையாக இடிக்கப்பட்ட யாழ்ப்பாணக் கோட்டையை புனரமைக்க ஒல்லாந்து அரசு உதவி செய்கிறது) அதனைத் தொடர்ந்து ஆடம்பர உல்லாச விடுதிகள் தோன்றலாம். இத்திட்டங்களுக்கு அனுசரணையாக முன்னாள் சமூக சேவை  சமூக  நல அமைச்சரின் முயற்சியால் நிறுவப்பட்ட “கடல் நீரை நன்னீராக்கும் நிலையம்” ஒன்று தீவில் இயங்கி வருகிறது.

“அபிவிருத்தியும் அத்தீவு மக்களுக்கு வேலைவாய்ப்பும்” என்ற பதாகைகளுடன் தீவில் கால் பதிக்கும் அந்நிய மூலதன முதலீடுகள் அத்தீவின் இயற்கை வளங்களை அழித்து சுற்றுப்புற சூழலை மாசுபடுத்தி அதில் வாழும் மக்களை அடிமைத் தொழிலாளர்கள் ஆக்கும். இதுவே இன்றைய அரசியல் தலைமைகளுடைய மானசீக ஆசீர்வாதத்துடன் இலங்கையை ஆக்கிரமிக்கும் உலக புதிய தாராளவாத பொருளாதாரத் திட்ட ஒழுங்குமுறையாகும். 

எனவே குதிரைகள் பிழைக்குமோ இல்லையோ என்பது தெரியாவிட்டாலும் குதிரையை வைத்துப் பிழைப்பு நடக்கும் என்பது நூறு வீதம் நிச்சயம்.