25
Tue, Jun

விருந்தினர்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

முல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென விமானப்படை முகாமின் முன்பாக தொடர்ந்து ஏழாவது நாளாக இன்றும் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ள நிலையில் பொறுமையை இழந்த மக்கள் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். அதாவது, “இன்று (07-02-2017) மாலை 6 மணிக்குள் உரிய பதில்கள் கிடைக்காவிட்டால் எமது போராட்ட வடிவம் மாறும், எங்களில் ஒருவர் தற்கொலை செய்து உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்” என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் நாளை பாராளுமன்ற அமர்வு நடைபெற இருப்பதனால் அங்கு இந்த விடயம் குறித்து பேசுவதாகாக பல பாராளுமன்ற உறுப்பினர்களும் உறுதி வழங்கி இருந்தனர். இந்த நிலையில் இன்று (07-02-2017) மாலை 6 மணி வரைக்கும் அனைத்து அரசியல்வாதிகளுக்கும் மக்கள் காலஅவகாசம் கொடுத்துள்ளனர்.

கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு கிராமத்தில் 84 குடும்பங்களுக்கு சொந்தமான 40 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகளை கையகப்படுத்தி விமானப்படைத்தளம் அமைத்துள்ள விமானப்படையினர் அதனை பலப்படுத்தி வேலிகள் அமைத்து மக்கள் செல்ல முடியாதவாறு தடைகளை ஏற்படுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் கடந்த மாதம் 31 ஆம் திகதி காணிகள் அளவிடப்படும் எனவும் காணிகளுக்கு சொந்தமான மக்கள் அனைவரையும் அப்பகுதிக்கு வருமாறும் கேப்பாப்புலவு கிராமசேவகர் அறிவித்தல் விடுத்திருந்தனர்.

அப்பகுதிக்கு வருகை தந்திருந்த மக்கள் நாள்முழுவதும் வீதியில் காத்திருந்த போதும் அதிகாரிகள் எவரும் காணிகள் அளவிட வருகை தந்திருக்கவில்லை. இந்த நிலையில் ஆத்திரமடைந்த மக்கள் அன்றைய தினம் முதல் தாம் தமது சொந்த நிலங்களில் காலடி எடுத்து வைக்கும் வரை போராட்டம் தொடருமென கூறி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த போராட்டம் இடம்பெறும் பகுதிக்கு முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபரும், கரைத்துறைப்பற்று பிரதேசசெயலாளரும் வன்னி பிராந்திய விமானப்படை தளபதியும் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாணசபை உறுப்பினர்கள் எனப் பலரும் வருகைத் தந்து மக்களோடு கலந்துரையாடி சமரச முயற்சிகளில் ஈடுபட்ட போதிலும் மக்கள் உறுதியான நிலைப்பாட்டில் தமது சொந்த நிலத்தில் காலடி எடுத்து வைத்தால்தான் இந்த போராட்டம் நிறைவுபெறும் எனக் கூறி தொடர்ந்தும் போராடி வருகின்றனர்.

அத்தோடு மக்கள் தமது உணவுகளை தாமே மரங்களுக்கு கீழே சமைத்து உண்டு வருகின்றனர். களத்தில் உள்ள மாணவர்கள் வீதி ஓரத்திலேயே தமது பாடசாலையில் வழங்கப்பட்ட வீட்டு வேலைகளை செய்வதோடு அனைவரும் இணைந்து தமது கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதனை அவதானிக்க முடிகின்றது.

அத்தோடு இன்று முல்லைத்தீவு கல்வி வலயத்திலிருந்து வந்த பிரதிக்கல்வி பணிப்பாளர் ஆதவன் தலைமையிலான ஆசிரியர் குழுவினர் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்ததோடு சில கற்பித்தல்களையும் மேற்கொண்டனர்.

இன்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடத்திற்கு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையிலிருந்து வருகை தந்த விசேட மருத்துவக்குழு பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் பெண்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு மருந்துகளும் வழங்கப்பட்டன.

போராடத்தில் ஈடுபடும் மக்களுக்கான் உணவு மற்றும் இதர உதவிகளை அயல் கிராம மக்களும் இளைஞர்களும் சிவில் சமூக அமைப்புகளும் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

-கபிலன் சந்திரகுமார்