25
Tue, Jun

விருந்தினர்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இலங்கையில் மலையகத்தில் வீடு என்பது பெரிய பிரச்சினை. தோட்டப்பகுதிகளிலுள்ள தொழிலாளர்கள் நூற்றாண்டுக்கும் மேலாக மிகச் சிறிய லயன்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இந்த லயன்கள் கூட அவர்களுக்குச் சொந்தமில்லை. தோட்டத்தில் வேலை செய்யும் வரை அங்கே உள்ள விதிமுறைகளுக்கு அமைய குடியிருக்கலாம். அவ்வளவுதான். அதற்கப்பால் தாங்கள் குடியிருக்கும் லயன்களில் ஒரு நிரந்தரக் கட்டிடத்தை கட்டிவிட முடியாது. காரணம், அந்த நிலம் அவர்களுக்குச் சொந்தமானதில்லை. தோட்டத்துக்குச் சொந்தமான நிலத்தில், தோட்டக்கூலிகளுக்கு உரித்தில்லை என்பதே இதன் பின்னாலுள்ள சட்ட அதிகாரமாகும். இதனால் ஏகப்பட்ட இழுபறிகளும் போராட்டங்களும் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கின்றன. தொடர்ச்சியான போராட்டங்களின் விளைவாக சில சில இடங்களில் மிகக்குறைந்தளவு ஆட்களுக்கு வீடுகள் கிடைத்துள்ளன. பலருக்கு இன்னும்இதுவொரு எட்டாக்கனியே.

இப்பொழுது மலையக மக்களுடைய வீட்டுப் பிரச்சினைகளைக் கவனிப்பதற்கு என அமைச்சர் திகாம்பரம் முயற்சித்துக் கொண்டிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இருந்தாலும், அங்கே இன்னும் நதிகள் பாயவில்லை. கானலே தெரிகிறது என்று குறைப்படுகின்றனர் மலையக மக்கள். கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட மண்சரிவுகளினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கே இன்னும் வீடுகள் கிடைக்கவில்லை. உடனடி நிவாரணமாக வழங்கப்பட்டிருக்க வேண்டிய இந்த மக்களுக்கான வீடுகளுக்குப் பதிலாக சமாதானங்களும் சாட்டுகளும் நியாயமற்ற காரணங்களும் சொல்லப்படுகின்றன. இந்தக் காரணங்களை அடுக்கும் வார்த்தைகளின் கீழே நாங்கள் படுத்துறங்க முடியுமா? என்று கேள்வி எழும்பும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் சொல்வதற்கு பொல்லாத ஆட்சியிலும் ஆட்களில்லை. நல்லாட்சியிலும் யாரும் கிடையாது.

ஏறைக்குறைய இதை ஒத்த நிலையே வடக்கிலும் உள்ளது. பல தலைமுறைக் காலமாக வாழ்ந்து வரும் நிலத்தைத் தமக்கென்று உரிமை கோர முடியாத நிலையில் வடக்கில் ஏராளமான குடும்பங்கள் உள்ளன. இவர்கள் சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட காரணத்தினால், இவர்களுக்கான நிலம் இல்லாமல் இருக்கிறது. இதனால் நிலமுடையோரின் காணிகளில் பரம்பரை பரம்பரையாகக் குடியிருந்தபோதும் அதை உரிமை கோர முடியாதவர்களாக உள்ளனர். இந்த நிலைக்கு யாழ்ப்பாணத்தின் தேசவழமைச்சட்டமே காரணம்.

இதைப்போல பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பல பிரதேசங்களிலுமுள்ள கோயில் காணிகளில் குடியிருந்து வருகின்றன. இருந்தாலும் காணியின் உரித்து கோயிலுக்கே உண்டு. இதனால் இந்தக்காணிகளை இவர்கள் உரித்துக் கொண்டாட முடியாது. ஒரு காணியை ஒரு குடும்பம் உரித்தாக எடுக்க முடியவில்லை என்றால், அந்தக்காணியில் அவர்களால் மின்சாரத்தைப் பெற முடியாது. நிரந்தரமான ஒரு கட்டிடத்தை அமைக்க முடியாது. குறைந்த பட்சம் அத்தியாவசியமான மலசல கூடத்தையோ, கிணற்றையோ கூட இவர்களால் கட்ட இயலாது. இதனால்தான் இந்த இடங்களில் உள்ள குடும்பங்கள் பெரும்பாலும் சேரி வாழ்க்கை முறையைக் கொண்டிருக்கக் காரணமாகியிருந்தது.

மலையத்தின் லயன்களை ஒத்தனவாகவே பெரும்பாலான வடபகுதிக்குடியிருப்புகள் நீண்டகாலமாக இருந்ததற்கு இதுவே காரணம். இன்னும் வடக்கில் இவ்வாறான குடியிருப்புகள் ஏராளமாக உண்டு. கடந்த அரசாங்கத்தின் விசேட ஏற்பாடாக இருந்த அனைவருக்கும் மின்சாரம் என்ற திட்டத்தின் கீழ், காணி உரித்தாவணம் இல்லாமலே இவர்களுக்கு மின்சாரம் கிடைத்தது, ஒரு அரிய வாய்ப்பு. அதை விட்டால் வேறு நற்கனிகள் எதுவும் இவர்களுக்குக்கிட்டவில்லை. இப்போது யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டும் 14 ஆயிரத்து 317 குடும்பங்கள் காணியில்லாமல், வீட்டைப் பெற முடியாமல் உள்ளனர். போருக்குப் பிந்திய வீட்டுத்திட்ட உதவிகளைப் பெற முடியாத நிலையில் இந்தக் குடும்பங்கள் உள்ளன. ஏற்கனவே வீடுள்ளவர்கள் பலர், காணி இருக்கின்ற காரணத்தினால் எப்படியோ கண்ணைக் கட்டி, வித்தைகள் செய்து தங்களுக்கு மேலும் வீடுகளை இனாமாகப் பெற்றுக் கொண்டனர்.

இந்த அநீதிக்காக இந்த மக்கள் சமூக விசாரணையையா, சட்ட விசாரணையையா, சர்வதேச விசாரணையையா? கோருவது?

-சிவராசா கருணாகரன்