25
Tue, Jun

விருந்தினர்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

உள்நாட்டில் இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக நீதி கிடைக்கும் என்று நம்பிக்கை கொள்ள முடியாவிட்டாலும் அநீதி இழைக்கப்பட்டவர்கள் உள்நாட்டு பொலிஸ் நிலையங்களையும் நீதி மன்றங்களையும் நாடுகின்றனர். உள்நாட்டில் நீதி மறுக்கப்படும் போது சர்வதேச பொறிமுறையை நாடுவதற்கு வழிவகைகள் இருக்கின்றன. இதில் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லாவிடினும் நீதி கேட்கும் உரிமை போராட்டத்தை கைவிட வேண்டியதில்லை. அப்பேராட்டத்தை அங்கும் கொண்டு சொல்லலாம். இவ்விதமான நீதி கேட்கும் போராட்டங்கள் தமிழ் மக்களுக்கு பல படிப்பினைகளை கொண்டு வந்து சேர்க்கும். அவற்றினூடே எதிர்கால அரசியல் மார்க்கங்களை வளர்த்து கொள்ள முடியும் என்று இலங்கை கொம்யூனிஸட் ஐக்கிய கேந்திரத்தின் இணை அமைப்பாளர் சட்டத்தரணி இ.தம்பையா தெரிவித்தார்.

ஜெனிவாவில் அமெரிக்கா இலங்கைக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகள் என்பது இலங்கையில் போரை நடத்த உதவிய அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா போன்றன, போரை நடத்திய இலங்கை அரசாங்கத்தை ஐ.நா விற்கு பொறுப்புக் கூறக் கடமைப்படுத்துவதாகும். இன்றைய உலக ஒழுங்கின் நவ காலனித்துவ கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் இலங்கை அரசிற்கு இது மேலும் அழுத்தம் கொடுக்கும் நடவடிக்கைகளாக இருப்பதுடன் அதிலே அநீதி இழைக்கப்பட்ட மக்களுக்கு பொறுப்பு கூறும் அம்சமும் இருக்கிறது. அதனால் ஜெனிவா நடவடிக்கைகளை இலங்கை மக்களுக்கு எதிரான ஏகாதிபத்திய தாக்குதல்கள் என்ற மேலோட்டமான அடிப்படையிலோ அல்லது ஏகாதிபத்திய நீதி தமிழ் மக்களுக்கு தேவை இல்லை என்ற கொச்சை அடிப்படையிலோ பொறுப்பற்றவகையில் கணிக்க கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.

கார்ல் மாக்சின் 131வது நினைவு தினத்தையொட்டி கடந்த 15.03.2014 அன்று கொழும்பு பெண்கள் கல்வி மற்றும் ஆய்வு நிலைய கேட்போர் கூடத்தில் 'ஏகாதிபத்தியத்தின் நவ-கொலனித்துவ, நவ-தாராளவாத தாக்குதலுக்கு எதிராக இலங்கை மக்களின் பணிகள்' எனும் தலைப்பில்; நினைவு பேருரையை நிகழ்த்தும் போது மேற்படி அவர் குறிப்பிட்டார்.

இலங்கை கொம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரத்தின் இணை அமைப்பாளர் டிபில்யூ.வீ. சோமரத்ன தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் நினைவு பேருரையாற்றும் போது மேலும் தெரிவித்ததாவது.

இன்று ஜெனீவா நடவடிக்கைகள் தொடர்பாக பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவிக்கின்றனர். இதனை புலம்பெயர்ந்த புலிகளின் ஆதரவாளர்களின் அழுத்தம் காரணமாக முன்னெடுக்கப்படும் இன்னொரு பிரிவினைவாத முயற்சி என அரசாங்கம் கூறுகின்றது. வேறு சிலர் சீனா இலங்கையை தன் பக்கத்தில் வைத்துக் கொள்ள நகர்வுகளை மேற்கொள்ளுவதால் அதற்கு பதிலடியாக இலங்கையை பழிவாங்க அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு செயற்பாடு என்கின்றனர்.

இலங்கையில் போரை நடத்தி புலிகளை அழிக்க கட்டளையிட்ட அமெரிக்கா ஐரோப்பா மற்றும் இந்தியா அந்த போர் நடத்தப்பட்ட விதத்தை அவற்றுக்கு சார்பான ஐ.நா மூலம் பொறுப்புக்கூற கோரும் போது அதனை ஏகாதிபத்திய தாக்குதல் என்று ஒரே வார்த்தையில் சொல்லி முடித்துவிடுவது எவ்வகையிலும் நியாயம் ஆகாது. சீனா மௌனமாக போருக்கு தனது ஆதவை வழங்கி இருந்தது. ஏகாதிபத்தியவாதிகள் போரை நடத்தி முடிக்க கூறிய போது அதனை செய்த இன்றைய அரசாங்கத்தாலும் அதன் தலைவராலும் இராணுவ ரீதியாக மட்டுமன்றி பொருளாதார, பண்பாடு என்று ஏகாதிபத்தியத்தின் நிகழ்ச்சி நிரல் நடைமுறைப்படுத்தப்பட்டு இலங்கை நவ-கொலனியாக மாற்றப்பட்டுள்ளது. இலங்கையை நவ-கொலனியாக பகிர்ந்து கொள்வதற்கு ஏகாதிபத்திய நாடுகளான அமெரிக்க ஐரோப்பா, இந்தியா, சீனாவிற்கிடையே நடக்கும் போட்டிகளின் விளைவாக போர்குற்ற விசாரணைகள், மனிதாபிமான சட்ட மீறல்கள் மேலெழுந்துள்ளன. அதற்கு அமெரிக்க தலைமை தாங்குகிறது. இன்று தமிழர் பிரச்சினை அமெரிக்க கையில் உள்ளது. எனவே அமெரிக்காவின் ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலுக்கான இந்த ஜெனிவா செயற்பாடுகளில் தமிழ் மக்கள் பார்வையாளர்கள் தான். ஆனால் போரில் நிகழ்ந்த அநீதிகள் தொடர்பில் தமிழ் மக்கள் நீதி கேட்க தமிழ் மக்களுக்கு இருக்கும் உரிமையை மறுக்க முடியாது.

நன்றி: விஜயகுமார் (மலையகம்)