25
Tue, Jun

விருந்தினர்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மலையகத்தில் பயன்படுத்தப்படாமல் இருந்து வரும் 25000 ஆயிரம் ஏக்கர் தோட்ட நிலங்களைச் சுவீகரித்து அவற்றை இரண்டு ஏக்கர் வீதம் வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கு விவசாயம் செய்ய வழங்கப் போவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இவ்வாறான தோட்ட நிலப் பகிர்வில் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் இருந்து வரும் வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். அதேவேளை அரசாங்கத்தில் அங்கம் பெறும் மலையகக் கட்சிகளும் ஏனைய அமைப்புகளும் மேற்படி நிலப் பகிர்வில் தோட்டத் தொழிலாளர்களுக்குரிய வாழ்வுரிமை நியாயத்தை முன்னுறுத்தி விடயங்களை முன்னெடுக்க வேண்டும். இவற்றுடன் கூடவே மலையக மக்களுக்கான காணி வீடு சொந்தமாக்கப்படுவதற்கான கோரிக்கைகளும் மக்கள் இயக்கமாக விரிவுபடுத்தப்பட வேண்டும். இதற்குள்ள ஒரேவழி மலையகத் தொழிலாளர்கள் இளைஞர்கள் அரசியல் விழிப்புணர்வு பெற்று மாற்று அரசியற் கொள்கைகளை இறுகப் பற்றியவாறு பயணிக்க வேண்டும். இல்லாதுவிடில் மலையக மக்களை அமுக்கி வரும் பேரினவாத முதலாளித்துவ அடிமைத் தனங்களை எதிர்த்து வெற்றி கொள்ளமுடியாது.

இவ்வாறு மாத்தளை நகரில் ‘மலையக மக்கள் எதிர்நோக்கும் அரசியல் சமூகப் பிரச்சினைகளும் எதிர்காலமும்’ என்னும் தொனிப்பொருளில் இடம்பெற்ற பகிரங்க அரசியற் கருத்தரங்கில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய புதிய – ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் சி.கா.செந்திவேல் கூறினார்.

புதிய- ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் மாத்தளைக் கிளை ஏற்பாடு செய்திருந்த மேற்படிக் கருத்தரங்கிற்கு அதன் செயலாளர் தோழர் பெ.சுரேன் தலைமை தாங்கினார்.

மேலும் அங்கு உரையாற்றிய தோழர் செந்திவேல், மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் தென் இந்தியாவில் இருந்து அழைத்து வரப்பட்டு சுமார் இருநூறு வருடங்கள் ஆகப் போகின்றன. சுமார் ஏழு தலைமுறைகளாக மலையகத் தோட்டங்களில் உழைத்து வந்த தொழிலாளர்கள் இன்று இலங்கையிலேயே ஆகக் குறைந்த நாட்சம்பளம் பெறும் தொழிலாளர்களாக இருந்து வருகிறார்கள். அதேவேளை ஓர் அடி நிலமோ ஒரு வீடோ சொந்தமில்லாத நிலையில் பழைய லயன்களிலேயே வாழ்ந்துவரும் கொடுமையும் தொடர்கிறது.

அன்று பிரித்தானிய முதலாளிகளும் அதன் பின் இலங்கை அரசாங்கங்களும் இப்போது மீளவும் முதலாளித்துவத் தோட்டக் கம்பனிகளும் தொழிலாளர்களைக் கசக்கிப் பிழிந்து சுரண்டிக் கொழுத்து வந்திருக்கிறார்கள். அத்துடன் அவர்களுக்குரிய வாழ்வுரிமைகள் அனைத்தும் மறுக்கப்பட்டே வந்திருக்கின்றன. அவர்களுக்காக தொழிற்சங்க- அரசியல் சேவை புரிவதாகக் கூறி வந்த தலைமைகள் தொழிற்சங்கச் சந்தா மூலமும் வாக்குப் பெட்டிப் பாராளுமன்ற அரசியல் பதவிகளாலும் உச்ச சுகங்களைப் பெற்று வந்துள்ளனர். அதேவேளை மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் வறுமையாலும் வாழ்வுரிமைகள் அற்ற நிலையிலும் முதலாளித்துவப் பேரினவாத சக்திகளால் தொடர்ந்து சுரண்டி அடக்கப்படும் மக்களாகவே வாழ்ந்து வர நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.

மலையகத் தமிழ் மக்கள் ஒரு தனியான தேசிய இனமாக வளர்ந்துள்ள இன்றைய நிலையிலும் அவர்கள் வர்க்க, இன ஒடுக்குமுறைத் தளங்களில் மட்டுமன்றி பெண்கள் மீதான ஒடுக்குமறையில் மோசமான பாதிப்புக்களை எதிர்நோக்கும் மக்களாகவே இருந்து வருகின்றனர். இத்தகைய சூழலில் வெறும் தொழிற்சங்கத் தலைமைகளாலோ அன்றிப் பாராளுமன்ற வாக்குப் பெட்டி நிரப்பும் அரசியலாலோ மலையக மக்களும் தோட்டத் தொழிலாளர்களும் விமோசனம் பெற முடியாது. அதற்குப் பதிலான மாற்று அரசியலில் விழிப்புணர்வு பெற்று வெகுஜனப் போராட்டப் பாதையில் பயணிக்க மலையக மக்கள், குறிப்பாக இளம் தலைமுறையினர் முன்வரல் வேண்டும் என்றும் கூறினார்.

கட்சியின் தேசிய அமைப்பாளர் தோழர் வே.மகேந்திரன் உரை நிகழ்த்தும் போது, மலையகத்தில் தற்போது பல இடங்களில் தன்னெழுந்த வாரியான போராட்டங்கள் நடைப்பெற்று வருகின்றது. இது ஆரம்ப கால மலையகத் தொழிலாளர்களின் போராட்ட குணாம்சங்களை பிரதிபலிக்கும் ஆரோக்கியமான விடயம். மலையக மக்கள் இன்றும் மூன்றாந்தர பிரஜைகளாகவே நடாத்தப்படுகின்றோம், எமது பிரச்சினைகளுக்கு அரசின் தலையாட்டி பொம்மைகளாகவும் அடிவருடிகளாக இருக்கும் மலையக தலைமைகள் எனச் சொல்லிக்கொள்பவர்கள் எவ்வாறு தீர்க்கப்போகின்றார்கள்? நாம் சிந்திக்கவேண்டிய கட்டாயத்தில் நிற்கின்றோம். ஆகவே தான் மாற்று அணியைக் கட்ட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்றார்.

அக்கருத்தரங்கில் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் ச. பன்னீர்செல்வம், புதிய ஜனநாயக இளைஞர் முன்னணி சார்பாக சட்டத்தரணி மோகன்ராஜ் ஆகியோரும் உரையாற்றினர்.