25
Tue, Jun

விருந்தினர்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இங்கிலாந்தில் வேலையில்லா திண்டாட்டம் என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளது. வேலைவாய்ப்பு அளிக்க வக்கற்ற அரசு தொடர்ந்தும் வறிய மக்களுக்கு அளித்து வந்த மானியங்களை படிப்படியாக குறைத்து வருகிறது. சூரியன் அஸ்திமிக்காத ராஜ்யஜியத்தை வைத்திருந்த ஏகாதிபத்தியம் இன்று மக்களின் வறுமையை போக்க முடியாமல் திண்டாடுகிறது. ரஜ்சிய மற்றும் சீன புரட்சிக்கால கட்டத்தில் தங்கள் நாட்டிலும் ஒரு புரட்சி வருவதைத் தவிர்க்கும் பொருட்டு மானியங்களை வழங்கிய ஏகாதிபத்தியங்கள் இன்று இந்த புரட்சி அபாயம் இல்லை என்று வழங்கிய மானியங்களை நிறுத்துகின்றன. கூகிள் போன்ற பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் மில்லியன் கணக்கில் வரி ஏய்ப்பு செய்கின்றன. அவ்வாறான முதலாளித்துவ கம்பெனிகளிடமிருந்து வரி அறவிடுவதை விடுத்து வறிய மக்களுக்கு வழங்கும் மானியங்களை நிறுத்துகின்றன. இதனால் வறிய மக்கள் சமாளிக்க முடியாமல் கடன் சுமையில் சிக்கி தவிக்கின்றனர்.

அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, வேலை இன்மை போன்ற காரணங்களால், உணவுத் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள, தங்களின் சேமிப்பையே பிரிட்டன் மக்கள் நம்பியுள்ளதாக, சமீபத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக, தன்னார்வ அமைப்பு ஒன்று, 2,000 பேரிடம் நடத்திய ஆய்வில் தெரிவித்து உள்ளதாவது: பிரிட்டனில், 50 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள், தங்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக, கடன் அட்டை, வங்கிகடன் மற்றும் தங்களது சேமிப்பைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். வார இறுதி நாட்களில், கடன் அட்டைகளை பயன்படுத்தி, பொருட்களை வாங்கும், 55 சதவீதத்தினர், இனி அவ்வாறு செயல்படமுடியாத நிலையில் உள்ளனர். தங்களின் உணவுத் தேவைக்கென நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களிடம், கடன் வாங்கி, நிலைமையைச் சமாளிக்கின்றனர். இதில் 25 சதவீத மக்களே, வசதியுடன் வாழ்வதாகவும், 36 சதவீதம் பேர், தங்களுக்குக் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டு உள்ளதாகவும் தெரிவித்து உள்ளனர். இதில், 31 சதவீதத்தினர், தங்களது அத்தியாவசியத் தேவையைக் கூட குறைத்துக் கொண்டு உள்ளனர். கடந்த, 5 ஆண்டுகளில், எப்போதும் இல்லாத அளவிற்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, சாதாரண மக்களை கசக்கிப் பிழிந்து உள்ளது. இங்கிலாந்தில் உணவிற்காக மக்கள் தங்களின் சேமிப்பை பெருமளவில் பயன்படுத்துவது கவலை அளிப்பதாக உள்ளது என இந்த ஆய்வை நடத்திய ரிச்சர்டு லாய்டு தெரிவித்து உள்ளார்.

தராளமயமாக்கல் அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும் என்று கூறியவர்கள் இன்று தங்கள் நாடுகளில் ஏற்பட்டு வரும் நெருக்கடிகளுக்கு பதில் கொடுக்க முடியாமல தவிக்கின்றனர். நேற்று கிரீஸ், சைபிரஸ் போன்ற நாடுகளில் நடந்தது நாளை இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற ஏகாதிபத்திய நாடுகளில் நடக்கும் என பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மாக்ஸ் கூறிய முதலாளித்துவ நெருக்கடி பற்றி தவிர்க்க முடியாதவாறு பதில் அளிக்க கடமைப்பட்டுள்ளனர். ஏகாதிபத்திய நாடுகளே நெருக்கடியில் தடுமாறும்போது இந்தியா, இலங்கை போன்ற நாடுகள் தாராளமயமாக்கல் மூலம் எப்படி தன்னிறைவு பெறமுடியும்? எந்த நம்பிக்கையில் தொடர்ந்தும் அதே பாதையில் பயணிக்க விரும்புகினறனர்?

-தோழர் பாலன்