30
Sun, Jun

2014
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இலங்கையில் ஜனநாயகம் இல்லை. சிவில் நிர்வாகம் இல்லை. மக்கள் நிம்மதி இல்லாமல் உள்ளனர். எனவே தேர்தலில் ஜனாதிபதி மஹிந்தவை தவிர்க்க வேண்டும். அவரைத் துரத்த வேண்டும்.

அதேவேளை மைத்திரியும் மஹிந்தவைப் போலவே தான் என்று தெரிவித்துள்ள முன்னிலை சோஷலிசக் கட்சியின் மத்திய குழு உறுப்பினரான குமார் குணரத்தினம், மக்களுக்கு நீண்டகால உண்மையான வெற்றியைப் பெற்றுக் கொள்ள இடதுசாரிகள் சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் துமிந்த நாகமுவவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

யாழ்.நகர் விடுதியொன்றில் நேற்று முற்பகல் செய்தியாளர் சந்திப்பு இடம்பெற்றது. அதில் முன்னிலை சோஷலிசக் கட்சியைச் சேர்ந்த கிருபாகரன், பாரூக், ரவீந்திர முதலிகே, யூட் சில்வாபிள்ளை ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். அதில் குணரத்தினம் மேலும் தெரிவிக்கையில், மக்களின் இனப்பிரச்சனை தொடர்பில் பிரதான வேட்பாளர்களுக்கு எதுவித கருத்தும் இல்லை. 66 வருடங்களாக மாறி மாறி ஆட்சிக்கு வந்தவர்களும் இதுவரை உங்கள் பிரச்சனையைத் தீர்த்து வைக்கவில்லை. வரப்போகும் தேர்தலில் மஹிந்தவை துரத்தவேண்டும். அதாவது அதிகார ஜனாதிபதி அரச பயங்கரவாதத்தைத் துரத்த வேண்டும். தோற்கடிக்க வேண்டும்.

இங்கு விவசாயம், மீள்குடியமர்வு, ஒடுக்குமுறைக்குத் தீர்வு காண வேண்டும். இவை நடக்க வேண்டுமாயின் தோற்கடிக்க வேண்டும்.

2002 ம் ஆண்டு நாடு கடத்தப்பட்ட நான் தற்போது எந்த ஆதரவில் இலங்கைக்கு வந்ததாகக் கேட்கப்படுகின்றது. முன்னர் என்னைக் கடத்தினர். நான் கொலை செய்யப்படவிருந்தேன். பலரது எதிர்ப்பால் தப்பிய போதும் நாடு கடத்தப்பட்டேன். தற்போது ஜனாதிபதியுடன் இருந்தவர்கள் எதிரணிக்கு மாறி வருகிறார்கள். அதனால் இப்போதுள்ள அந்த அரசியல் சூழ்நிலையை நான், எனக்குச் சாதகமாகப் பயன்படுத்தியே இங்கு வந்துள்ளேன். அதற்காக இங்கு ஜனநாயகம் இருப்பதாக நான் கூறவில்லை. இலங்கையில் ஜனநாயகம் இல்லை. கடந்த 66 வருடங்களாக இந்த நாடு பொருளாதாரத்தில், ஜனநாயகத்தில், தேசிய ஒற்றுமையில் என்ன நடந்தது?

அந்தக் காலத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி உட்பட பல கட்சிகள் ஆட்சி அமைத்தன. ஆனால் எந்த முன்னேற்றமும் நடக்கவில்லை. வடக்கு கிழக்கில் இராணுவ ஒழுங்குமுறைப்படியே எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது.

எனவே இந்தப் பிரச்சனைக்கு தற்போதுள்ள சூழ்நிலையில் நடைமுறை ரீதியாக முடிவெடுக்க வேண்டும். யார் என்ன கூறினாலும் நடைமுறை ரீதியான தீர்வே தேவையாகவுள்ளது. பாதிக்கப்பட்ட மூவின மக்களும் ஒன்றிணைந்து சோஷலிசத்தைப் பின்பற்ற வேண்டும். அது மனரீதியாக, ஆத்மார்த்த ரீதியாக ஒவ்வொருவரும் உணர்ந்து அனைத்து மக்களும் ஒற்றுமையாக உண்மையை உணர்ந்து செயற்பட வேண்டும். எனவே இடதுசாரிகளாக முன்னிலை சோஷலிசக் கட்சியில் போட்டியிடும் துமிந்த நாகமுவவுக்கு வாக்களியுங்கள். உண்மையான பிரச்சனைகளை உண்மையாகத் தீர்க்கவேண்டும் என்று தெரிவித்தார்.

யாழ்ப்பாணம். ஜன.5-2015

நன்றி: உதயன் பத்திரிக்கை

இது இன்றைய உதயன் பத்திரிக்கையில் வந்த செய்தியாகும்