25
Tue, Jun

2014
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சர்வதேச காணாமல் போனவர்கள் தினத்தை முன்னிட்டு காணாமல்போனோர் உறவினர்களால் வவுனியா நகரில் கவனயீர்ப்பு போராட்டம் இன்று நடத்தப்பட்டது. ஊர்வலத்திற்கு பொலிஸார் மற்றும் படைப்புலனாய்வாளர்கள் கடுமையான அச்சுறுத்தல் விடுத்தபோதும் குறித்த போராட்டம், வெற்றிகரமான நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் சர்வதேச காணாமல்போனவர்கள் தினமாகும்.

இந்நிலையில் வட மாகாணத்தில் யுத்தத்தின் முன்னரும், பின்னரும் காணாமல்போனவர்களை தேடி தருமாறுகோரி காணாமல்போனவர்களின் உறவினர்கள் வவுனியா நகரசபை மண்டபத்தில் கவனயீர்ப்பு கூட்டம் ஒன்றிணை ஏற்பாடு செய்திருந்தனர்.

குறித்த கூட்டத்தின் நிறைவில் மகஜர் ஒன்றிணை மாவட்டச் செயலகத்தில் கையளிக்க திட்டமிடப்பட்டிருந்தது. அவ்வாறே மகஜர் கையளிப்பதற்கு கூட்டம் நிறைவடைந்ததும் மக்கள் ஊர்வலமாக சென்ற வேளை, நீதிமன்ற வீதியில் வைத்து கலக தடுப்பு பொலிஸார் மக்களை தடுத்து நிறுத்தியிருக்கின்றனர். அதன் பின்னர் மக்கள் பொலிஸாருடன் கடுமையான தர்க்கத்தில் ஈடுபட்டனர். இதில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவைசேனாதிராசா மற்றும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

வடமாகாணசபை அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் பொலிஸாருடன் தர்க்கப்பட்ட மக்கள் பொலிஸாரின் எதிர்ப்பினையும் மீறி மாவட்டச் செயலகத்திற்குச் சென்றனர். எனினும் மக்கள் கொண்டு சென்ற மகஜரினை பெற்றுக் கொள்வதற்கு அரசாங்க அதிபர் உட்பட எந்தவொரு அதிகாரிகளும் முன்வரவில்லை.

இந்நிலையில் மக்கள் பிரதான வீதியை மறித்து, மக்கள் மதியம் 2 மணி வரையில் வீதியில் அமர்ந்திருந்து எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கும் பொலிஸார் மறுப்பு தெரிவித்ததுடன், மக்களை அச்சுறுத்தும் வகையில் படைப்புலனாய்வாளர்கள் நடந்து கொண்டனர். எனினும் மக்கள் எதற்கும் அஞ்சாமல் வீதியில் அமர்ந்து தொடர்ந்தும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இதனையடுத்து தமிழ்தேசிய கூட்டமைப்பின் கோரிக்கைக்கு அமைவாக, மக்கள் வீதி மறியல் போராட்டத்தை கைவிட்டு தாங்கள் தயாரித்த மகஜரினை தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் செயலாளர் நாயகமுமான மாவைசேனாதிராசாவிடம் காணாமல்போனவர்களின் உறவினர்கள் கையளித்துள்ளனர்.

நகரசபை மண்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் அனைவரும் உரையாற்றினர்.