25
Tue, Jun

2012
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

altஅனுராதபுரத்தில் சுகாதார வைத்திய அதிகாரியாகக் கடமையாற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மருத்துவர் இ.சிவசங்கர் நேற்றுக் கைது செய்யப்பட்டு கொக்காவில் இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகதெரிய வருகின்றது.

 

இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்ட கிளிநொச்சி உருத்திரபுரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சாதாரண தரப்பரீட்சை எழுதுவதற்காக வீடு வந்துள்ளார். பரீட்சை முடிந்ததும் அவரை முகாமில் ஒப்படைக்குமாறு இராணுவத்தினர் வலியுறுத்தினர்.

எனினும் குறித்த பெண் தான் இராணுவத்தில் இருந்து விலகப் போவதாகப் பெற்றோருக்கு தெரிவித்ததை அடுத்து மருத்துவர் சிவசங்கரின் உதவியுடன் அவர்கள் நேற்றுப் பிற்பகல் கொக்காவில் இராணுவ முகாமுக்குச் சென்றுள்ளனர்.

எனினும் சட்டரீதியாக இராணுவத்தில் இருந்து விலக வேண்டும் எனில் ஒரு மாதகால அவகாசம் தேவை என இராணுவத்தினர் தெரிவித்ததால் பெற்றோருக்கும் இராணுவத்தினருக்கும் இடையே முறுகல் ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து நேற்று மாலை குறித்த பெண்ணையும் பெற்றோரையும் வீடு செல்ல அனுமதித்த இராணுவத்தினர் மருத்துவர் சிவசங்கரைத் தடுத்து வைத்துள்ளனர்.

இந்த சம்பவத்தை குறித்த குடும்பத்தினர் உறுதிப்படுத்தினர்.

இதேவேளை, கைதான மருத்துவர் மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாகக் கிடைத்த செய்தியை அடுத்து மாங்குளம் பொலிஸ் நிலையத்துடன் தொடர்பு கொண்டு கேட்டபோது அப்படி ஒரு சம்பவம் நடைபெறவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.