25
Tue, Jun

மாணிக்கம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பத்திரிக்கை செய்தி: அரசாங்கத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன விவகார தீர்வு தொடர்பாக பேசுவதில் பயனற்றுப்போயுள்ளது எனவும், அப் பேச்சுவார்த்தை எவ்வேளையிலும் முறிவடையலாம் எனவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்திருக்கின்றார். தமிழ் மக்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் பொறுத்து சர்வதேச சமூகத்திடமும், ஐ.நா.விடமும் தமது நிலை குறித்து முறையிட்டு தீர்வு காண்பதற்கு இவர்கள் ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை முன்னெடுப்பது குறித்தும், நியாயம் கோரவும் மக்களை அணி திரட்ட வேண்டிய தேவை தற்பொழுது தமக்கு எழுந்துள்ளதாகவும், இது குறித்து மக்களிடம் செல்வதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியிருப்பதாகத் தெரியவில்லையாம்.

 

இதுவரை நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் அரசுக்கும் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தை என்றே கூறப்பட்டதாம். ஆனால் தற்போது அது சுதந்திரக் கட்சிக்கும் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தையாகவே நடைபெறுகின்றதாம், அத்துடன் கூட்டமைப்பை நாடாளுமன்றத் தெரிவுக் குழுவுடன் இணைந்து பேச்சுவார்த்தை நடாத்துமாறு அரச தரப்பு வற்புறுத்துகின்றதாம். அதைவிட 13வது திருத்தச் சட்டத்திற்கு அமைவாக காணி, காவல் அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்க முடியாதென்றும், வடக்கு கிழக்கு இணைப்பை முற்றாக அரசு மறுத்துள்ள நிலையில், இந்தப் பேச்சுவார்த்தைக்கு அர்த்தமே இல்லை என்கிறது இச்செய்தி தாங்கிய வீரகேசரி (25.12.2011).

 

காணிப்பிரச்சினை, அடிபிடிப் பிரச்சினை போன்ற வழக்குகளை நடாத்தி, சூதுவாது செய்து, சிலரின் வாழ்வை நாளாந்தம் துலைத்த எமது நாட்டின் அரசியற்போக்கை எதிர்த்து, ஆயுதப் போர்தொடுத்த முன்னை நாள் ரெலோப் போராளிகளின் பின்னைநாள் தலைவன் செல்வம் அடைக்கலநாதன், தமது அழிவுக்குப் பின்பாக புலிகளின் ஜனநாயகத்துக்குள் செல்லப் பிள்ளையாக வாழ்ந்து கொண்டே, இலங்கை நாடாளுமன்ற ஜனநாயக நீரோட்டத்துக்குள் நீந்திக் குளித்தவர். இவர் அப்போதெல்லாம் ஏதோ புலி விழுந்தாலும் ரெலோவின் ஆயுதப் போராட்டம் தொடருமென்றார். இப்போது அது என்னவாயிற்று? எங்கே போயிற்று??

 

ஒரு உள்நாட்டுக்குள் இருக்கின்ற பிரச்சினைகளை தீர்க்கக் கூடிய அரசியற் பக்குவம் இலங்கை வாழ் நாடாளுமன்ற அரசியலாளரில் எவருக்குமே அது தெளிவாக இல்லையென்பதே உண்மை நிலை. நாடாளுமன்றச் சொகுசும், மக்களை மீண்டும் மீண்டும் மாக்களாக்குகின்ற வழிகாட்டியை இவர் போன்ற அனைவரும், இன்றும் அரசியல் என்கின்றனர். இதற்குள் சாதியம் முதல் தேசியம் வரையான எந்தவித நல்லறிவையும், கருத்தையும் மக்களுக்கு முன்வைக்க முடியாத இப்படியான அனைத்துப் பம்மாத்துக் குழுக்களும், தற்போது அனைத்து வழக்குகளின் தீர்வும், பேச்சுவார்த்தைகளின் முடிவும் தமது பக்கமாக வீழ்த்தப்பட வேண்டுமென கல்லெறிகின்றனர். அதற்காக ஏதேதோ சக்கர வெடிகளை வெடிக்கின்றனர். இவர்களுக்காக சில ஊடகங்கள் அதன் தர்மத்தை மீறியவாறு புரட்டுச் செய்திகளையும், மற்றவர் மீது சேறு பூசுவதையும் மிக இலகாக, அதி உயர் அறியாமையில் நின்று செய்திகள், கட்டுரைகள், பின்னூட்டங்களென எழுதுகின்றன.

 

இந்த உள்நாட்டுத் தமிழ்க் கூட்டமைப்பினரின் கூத்தடிப்புகள் போலவே, மேற்கத்தைய நாடுகளில் இருந்து கொண்டு கணணித் தளங்களை நடாத்துகின்ற முன்னை நாள் ஈழ விடுதலைப் போராளிகளில் சிலர், தமது கடந்தகால இருண்ட பக்கங்களை – தமது கொலைக் குற்றங்களை – தலைமைகளுக்கு தாங்கள் சோரம்போய் அடிமைச் சாமரம் வீசிய காலப் பதிவுகளை, மக்களுக்கு முன்வைக்காமல், ஏதேதோ புதுவகை முகமூடிகளை தமக்குப் போட்டுக்கொண்டு, காமுக மேனியர்களாக, கஞ்சாச் சாமிகளாக, மனித உயிர்களை கூடு கடத்தும் நச்சுப் பேய்களாக, பாசறைச் சூரியராக, பக்கத்து நாட்டு உளவாளியராக, மேற்கத்தைய நாட்டு பணக்கார வீதிகளின் ஓய்வூதியக்காரராக.., இப்படிப் பலவாறாக இவர்கள் மீண்டும் மீண்டும் மனித உயிர்களை நாடு கடத்தும் தனியீழ தேசப்படம் காட்டி, அலைவழித் தொடர்பற்ற திசைகாட்டிக் கருவிகளை மக்களுக்கு விளம்பரம் காட்டி, எமது மக்களை நந்திக் கல்லாக்குகின்றனர்.

 

எமது நாட்டு அரசு, மக்களைக் கேட்காமல் அன்னியக் கடன் பெற்று விட்டு, அடுத்து வரும் வர்த்தமானியில் ஒவ்வொரு குடிமகனின் தலையிலும் ஆயிரக்கணக்கான ரூபாய்கள் கடன் உள்ளதாகக் காட்டி மழுப்புவது போல, இந்தவகையான அத்தனை குட்டிச் சுவர்களும் தமது அரசிலென்ற கோடரிக் காம்புகளால் தாய் மரமான எமது மக்களை  கொத்திச் சுவைக்கின்றனர். இதற்குள் உலகப் போர்களை நடாத்தி பல்லாயிரக் கணக்கான உயிர்களை வதைத்துக் கொன்று, அவர்களை எரிபொருளாக்கி வரும் சர்வதேச ஐ.நா.விடம் எமது பிரச்சினைக்கு நியாயம் கேட்கப்போகின்றாராம் இன்நாள் நாடாளுமன்ற அடைக்கலநாதன்.  

 

-மாணிக்கம்

25/12/2011