25
Tue, Jun

மாணிக்கம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

"ஒரு பொம்மலாட்டம் நடக்குது

ரொம்ப புதுமையாக இருக்குது

நாலு பேரு நடுவிலே

நூலு ஒருத்தன் கையிலே" என்ற பாடல் வரிகளை நினைவுபடுத்துகின்றது இந்தச் செய்தி.

அதாவது முஸ்லிம் தேசியம், தமிழ்த் தேசியத்துடன் ஒருபோதும் இணைந்து போகமுடியாது என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாணசபை உறுப்பினரான ஏ.எல்.தவம் தெரிவித்துள்ளார். இதனை கிழக்கு மாகாணசபை அமைச்சர் எம்.ஐ.முகம்மத் மன்சூருக்கு சம்மாந்துறையில் இடம்பெற்ற வரவேற்பு விழாவில் உரையாற்றிய போதே தெரிவித்தார் என்கிறது இணையச் செய்தி.

அத்துடன் 'சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் ஆட்சியமைத்திருக்கின்றது என்பதுடன், முஸ்லிம் காங்கிரஸைப் பொறுத்த வரை, அரசாங்கத்துடனான உறவுகளில் இருக்கின்ற விரிசல்களைக் கருத்திற்கொண்டு, இந்த அரசாங்கத்துடன் நம்பிக்கையைக் கட்டிவளர்க்க வேண்டிய தேவை முஸ்லிம் சமூகத்திற்கு இருக்கின்றது என்கிறார்.

மேலும் எதிர்க் கட்சியால் இன்னுமொரு நாடாளுமன்ற ஆட்சி மாற்றம் நிகழக்கூடிய சூழல் தோன்றியிருக்கிறதா எனப் பார்த்தால், அதையும் காணவில்லையாம். ஆகவே சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாண சபையில் எதிரணியில் போய் அமர்ந்து என்ன சாதிக்க முடியும்? என்ற கேள்வியை அவர் எழுப்பியதுடன், முஸ்லிம் சமூகம் மிக நீண்ட காலமாக அனுபவித்துக் கொண்டிருக்கிற நிர்வாக ரீதியிலான எந்தப் பிரச்சினையிலும் ஏதாவது ஒன்றைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் நிறைவேற்றித் தரமுடியுமா? என்கிறார். இந்தத் த.தே.கூ. அமைப்பே தமது பல பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள முடியாமல் இருக்கின்றபோது, முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கியுள்ள எத்தனையோ பல பிரச்சினைகளை எவ்வாறு தீர்த்துக் கொள்வது? என அங்கலாய்க்கிறார்.

அதற்காக அரசோடு, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு தெளிவான உடன்படிக்கையை செய்திருக்கிறதாம். அதனால் அடுத்த இரண்டரை வருடங்களுக்கு முஸ்லிம் முதலமைச்சர்ப் பதவி கிடைக்கும் என்றவர்இ மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்பான்மையாக வாழும் முஸ்லிம் மக்களைக் கொண்ட ஒரு நிர்வாக அலகை குச்சவெளியிலும், புல்மோட்டையிலும் பெற்றிருக்கின்றதாம். இந்த அரசியல் உடன்படிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் செய்யமுடியுமா? எனவும் த.தே.கூ. அமைப்பைச் சாடுகின்றார்.

அம்பாறை மாவட்ட நிர்வாக அலகு என்ற பல ஒப்பந்தங்களை அரசுடன் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செய்திருக்கின்றது எனவும், அவை தெளிவான எழுத்தில் கைச்சாத்திடப்பட்டுள்ளது என்றும், மறுபுறத்தில் இறுதித் தீர்வில் முஸ்லிம்களுக்கு என்ன அந்தஸ்தை கூட்டமைப்பு தரப்போகிறார்கள் என்பதை த.தே.கூட்டமைப்பு மிகத் தெளிவாக இதுவரைக்கும் கூறவில்லையே என்கிறார்.

ஆகவேதான் முஸ்லிம் தேசியம் தமிழ்த் தேசியத்தோடு ஒருபோதும் இணைந்துபோக முடியாது, இது யதார்த்தமென்கிறார்.

இதனை சிலபலர் வரவேற்கலாம் அல்லது புறக்கணிக்கலாம். ஆனால் இதற்குள்ளே இருக்கும் அரசியல்தான் என்ன?

அரசின் பிரித்தாளும் தந்திரத்தின் மூலமாக, சிறுசிறு நப்பாசைகளை இனங்களுக்குள் உருவாக்கி, இனங்களை இணையவிடாது, அவர்களை எப்போதுமே பிரித்துவைக்கும் அரசியற் சந்தர்ப்பப் போக்கே இது.

உடல் உளப் பாதிப்பற்ற சாதாரண மக்கள் தமது பசியைப் போக்க தாமே உழைக்க வேண்டும். அதனால் மக்கள் தமது அடிப்படைப் பிரச்சினைகளைத் தேடித் தீர்ப்பதற்குப் போராட வேண்டும். அதற்காக இனம் மொழி மதம் பிரதேசம் என்ற பேதங்களை முழுமையாக அகற்றி, மனசுத்தியுடன் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும்.

சிறிலங்கா என்ற அரச மாயையிலிருந்து அனைவரும் வெளியே வரவேண்டும். இதற்கு இனம் மொழி மதம் பிரதேசம் என்பன தடையாக ஒருபோதும் இருக்கக் கூடாது என்பது பற்றிச் சிந்திக்க வேண்டும்.

அற்ப ஆசைகளைக் காட்டி, மக்களை நம்பவைத்துக் கழுத்தறுக்கும் மகிந்த பாசிச அரசின் சூழ்ச்சியினை இனங்காண வேண்டும்.

தனித்தனி இனங்களின் பிரச்சினையை, நாம் அனைவரும் ஒருமித்த மக்கள் பிரச்சினையாக காணவேண்டும். இதுவரை காலமும் மக்களை மடையராக்கி, இனங்களைப் பிரித்துவைத்து, தமது சுக வாழ்வை கட்டிவளர்க்கும் இனவாத அரசையும், அதன் அடிவருடிகளையும் முழுமையாகத் தூக்கி எறிவேண்டும்.

--மாணிக்கம் 26/10/012