25
Tue, Jun

விஜயகுமாரன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மாலதி நிசாந்தன் என்னும் திருகோணமலையைச் சேர்ந்த பெண் மரணம் அடைந்திருக்கிறார். வேலையற்ற பட்டதாரியான மாலதி நிசாந்தன் வறுமை காரணமாகவும், வேலையில்லாததினால் ஏற்பட்ட மன அழுத்தங்களினாலும் தற்கொலை செய்திருக்கிறார். திருகோணமலை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தில் அங்கத்துவராக இருந்து அச்சங்கத்தினரால் நடத்தப்பட்ட போராட்டங்களில் தீவிரமாக கலந்து கொண்டிருந்திருக்கிறார். வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கம், மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தவர்கள் தமது அஞ்சலிகளையும், கவலைகளையும் தெரிவித்திருக்கிறார்கள்.

அனைவருக்குமான கல்வி, தொழில், மருத்துவம் என்பன அடிப்படை உரிமைகள். இலங்கை மக்கள் போராடிப் பெற்ற இந்த உரிமைகளை இலங்கையின் மக்கள் விரோத அரசுகள் குழி தோண்டிப் புதைத்து வருகின்றன. ஏழு படுக்கைகளை மட்டுமே கொண்ட ஒரு மருத்துவமனையை வைத்திருக்கும் "தொழில்நுட்பம் மற்றும் மருத்துவத்திற்கான தெற்கு ஆசிய நிறுவனத்தை" (South Asian Institute of Technology and Medicine - SAITM) தனியார் மருத்துவப் பல்கலைக் கழகமாக அங்கீகரித்து இலங்கை அரசு கல்வி என்னும் அடிப்படை உரிமையையும், கல்வியின் தரத்தையும் முதலாளிகளிற்கு விற்கிறது.

"சுதந்திர வர்த்தக வலையங்கள்" என்னும் பெயரில் முதலாளிகள் எந்த விதத் தடைகளும் இன்றி சுதந்திரமாக ஏழைத் தொழிலாளர்களைச் சுரண்ட அடக்குமுறைச் சட்டங்களை இலங்கை அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. மக்களின் நிலங்களைப் பறித்து முதலாளிகளிற்கு கொடுக்கிறார்கள். தகுதியும், திறமையும் கொண்டவர்கள் வேலையில்லாமல் தவிக்கும் போது லஞ்சம் வாங்கிக் கொண்டும், தமக்கு வேண்டியவர்களிற்கும் வேலை வாய்ப்புக்களை இலங்கை அரசுகள் என்னும் கொள்ளைக் கூட்டங்கள் கொடுத்து வயிறு வளர்க்கின்றன.

இலங்கை அரசு கண் துடைப்பிற்காக மாகாணசபைகளிற்கு ஒதுக்கும் நிதியைக் கூட மக்கள் நலத்திட்டங்களிற்கு உபயோகிக்காமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிகாரத்தில் இருக்கும் வடமாகாண சபை ஒவ்வொரு வருடமும் திருப்பி அனுப்பி வருகிறது. கிழக்கு மாகாண சபையில்   அதிகாரத்தில் இருக்கும் முஸ்லீம் காங்கிரசிற்கு கட்சிக்குள் நடக்கும் அதிகாரப் போட்டியில் ஒருவரை ஒருவர் இழுத்து விழுத்துவதும், இலங்கை அரசின் காலில் விழுந்து பதவிகளை காப்பாற்றிக் கொள்ளுவதும் தான் அன்றாட வேலையாக இருக்கிறது.

அதிகார வர்க்கங்கள் மக்கள் விரோதிகளாகவும், மக்கள் நலன் பற்றிய எந்தவொரு அக்கறையும் அற்ற அற்பப்பதர்களாகவும் இருப்பதனால் மாலதி நிசாந்தன் போன்ற ஏழை மக்கள் வறுமை தாங்க முடியாது தற்கொலைக்கு தள்ளப்படுகிறார்கள். தீரா வறுமையின் சுமை தாங்க முடியாமலும், மன அழுத்தங்களினாலும் ரோகித் வெமுலா, முத்துக் கிருஷ்ணன், மாலதி நிசாந்தன் போன்ற நல்ல மனிதர்கள், போராளிகள் நம்மை விட்டுப் பிரிந்து சென்று விட்டார்கள். அவர்களின் உளவியலை விளங்கிக் கொள்ளும் அதே நேரம் இந்த நல்ல மனிதர்கள், சமுகத்திற்காகச் சிந்திப்பவர்கள் தம் வாழ்வை துறக்காது இருந்து போராடியிருந்தால் மக்கள் விரோதிகளிற்கு எதிரான போராட்டங்களில் இப்போராளிகளின் பங்களிப்பு எவ்வளவு பெறுமதியாக இருந்திருக்கும் என்ற ஏக்கம் தவிர்க்க முடியாமல் எழுகிறது.

உழவர்கள், தொழிலாளர்கள், ஏழைமக்கள், முற்போக்காளர்கள் என்று கோடானு கோடி பேர் தம் உயிரைக் கொடுத்து போராடிய உரிமைப் போராட்டத்தின் விளைவாகவே இன்றுள்ள உரிமைகள் வெல்லப்பட்டன. எனவே தொடர்ந்து போராடுவோம். பெறுவதற்கு இந்த உலகமே இருக்கிறது என்று சொன்ன தாடிக் கிழவர்களின் வழி போராடுவோம்.

காணாமல் போன நம் கண்மணிகளிற்காக போராடுவோம். காணி நிலத்தை களவெடுக்கும் இலங்கை அரசுக் கயவர்களிற்கு எதிராகப் போராடுவோம். கல்வியை விற்காதே என்று போராடுவோம். மாலதி நிசாந்தனின் மரணம் போன்று மற்றொரு மரணம் இந்த மண்ணில் நடக்காமல் இருக்க போராடுவோம்.