25
Tue, Jun

விஜயகுமாரன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சுவிட்சர்லாந்தில் உள்ள தமிழர்களால் நடத்தப்படும் ஒரு கிறீஸ்தவ தேவாலயத்திற்கு வரும் தமிழ் மக்களிடம் நன்கொடை கேட்டு அழுத்தங்கள் கொடுக்கப்படுவதாக Schweizer Radio und Fernsehen என்னும் ஊடகம் விரிவான செய்திகளையும், பாதிக்கப்பட்டவர்களின் நேர்காணல்களையும் வெளியிட்டிருக்கிறது. பிலடெல்பியா எவஞ்சலிக்கல் மிஷனரி ( Philadelphia Missionary Church) என்னும் சபை குறித்தே இந்த விமர்சனங்கள் வெளியாகி உள்ளன. கிறீஸ்துவத்தின் ஒரு பிரிவான ஆவிக்குரிய சபைகள் (பெந்தகோஸ்து சபைகள்) என்னும் பிரிவைச் சேர்ந்தது இந்த ஆலயம். பெரும்பாலான ஆவிக்குரிய சபைகளைப் போல இந்தப் பிரிவும் அமெரிக்காவிலேயே தோற்றம் பெற்றது என்பதை இங்கு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

பிதா, சுதன், பரிசுத்த ஆவி என்னும் மூவிறைத் தத்துவத்தின் படி யேகோவா என்னும் பிதாவாகிய தேவனும், தேவனின் குமாரனாகிய இயேசுவும் பெயர் கொண்டும் உருவம் கண்டும் அழைக்கப்படுகிறார்கள். புனித ஆவி உருவம் அற்றது. யேகோவா என்னும் கடவுளின் செயற்படும் சக்தி தான் புனித ஆவி. கடவுள் புனித ஆவியை பிரயோகித்து தான் உலகத்தைப் படைத்தார். பைபிளை மனிதர்களிற்கு வழங்கினார். அவருடைய விசுவாசிகளினது அற்புதங்கள் புனித ஆவியின் மூலமே நடத்தப்பட்டன. கடைசி வரை கன்னியாக இருந்த மேரிக்கு மகனாக இயேசு கிறிஸ்து பிறந்தது புனித ஆவியினால் தான் என்றும் கதைகள் சொல்லுகின்றன. இப்பவே கண்ணைக் கட்டுவதால் இதோடு நிறுத்திக் கொள்ளுவோம். புனித ஆவி என்றால் என்ன என்பது இப்போது விளங்கியிருக்கும்.

இந்த கிறீஸ்தவப் சபைகள் புனித ஆவியை வலியுறுத்துகின்றன. கடவுளின் பிரசன்னத்தை விசுவாசிகள் நேரடியாக உணர்ந்து கொள்ளுவார்கள் என்று இந்தச் சபைகள் நம்புகின்றன. இறை நம்பிக்கை என்பது சடங்குகளாலோ அல்லது சிந்தனைகளாலோ பெறப்படுவதில்லை எனவும் அது ஆற்றலும், சக்தியும் வாய்ந்த ஒரு அனுபவம் என்றும் நம்புகிறார்கள். இந்தச் சபைகளில் சில பிரிவுகளில் தான் நோய்கள் வந்தாலும் மருத்துவர்களிடம் போவதில்லை. கடவுள் வருத்தங்களை குணப்படுத்துவார் என்று நம்பி தேவையற்ற பல மரணங்கள் நடந்திருக்கின்றன.

இந்தச் சபைகளில் தான் கடவுளுடன் அந்நிய பாசை பேசுவார்கள். அந்நிய பாசை என்பது எந்தச் சொற்களும், அர்த்தங்களும்  இன்றி வெறும் சத்தங்களாக, முனகல்களாக இருக்கும். ஒரு சபையில் ஒரே நேரத்தில் பத்து விசுவாசிகள் உணர்ச்சி வசப்பட்டு அந்நிய பாசை பேசினால் பத்துப் பேரும் பத்து விதமான அந்நிய பாசைகளில் பேசுவார்கள். ஏனென்றால் அந்நிய பாசை என்றொரு மொழியே கிடையாதே. இந்த பத்து விசுவாசிகளுடனும் ஒரே நேரத்தில் பேசும் தேவனுடைய கதியை நினைத்துப் பாருங்கள். ஒரு சபையிலேயே இப்படி என்றால் ஞாயிற்றுக்கிழமை ஆராதனை நடக்கும் நேரத்தில் உலகம் முழுக்க உள்ள அந்நிய பாசை பேசுபவர்களுடன் கடவுள் எவ்வளவு கஸ்டப்படுவார் என்று நினைத்துப் பார்க்கும் போதே அடி வயிறு கலங்குகிறது.

காலனித்துவ காலத்தில் கத்தோலிக்கம், புரட்டஸ்தாந்து போன்ற கிறீஸ்தவத்தின் பெரும் பிரிவுகள் ஆக்கிரமிப்பாளர்களால் உலகம் எங்கும் பரப்பப்பட்டன. தாம் அடிமைப்படுத்திய நாடுகளின் மக்களினது வறுமையையும், அந்த நாடுகளில் நிலவிய அநீதிகளையும் பயன்படுத்தி கிறீஸ்தவ மத குருமார்களினதும், மதப் பிரச்சாரகர்களினதும் உதவி கொண்டு போத்துக்கீசரும், ஸ்பானியரும் கத்தோலிக்க மதத்தையும், ஒல்லாந்தர்கள், ஆங்கிலேயர்கள் புரட்டஸ்தாந்து மதத்தையும் பரப்பினார்கள். அதே போன்று  பெரும்பாலும் அமெரிக்காவில் தோற்றம் பெற்ற இந்த பெந்தஸ்கோத்து, ஆவிக்குரிய சபைகள் அமெரிக்கர்களினால் பரப்பப்பட்டன.

இன்று மூன்றாம் உலக நாடுகள் முழுக்க இந்தச் சபைகள் பரப்பப்பட்டு வருகின்றன. புலம் பெயர்ந்து வாழும் மக்களிடையேயும் இந்தச் சபைகள் பரப்பப் படுகின்றன. மேற்கு நாடுகளில் புலம் பெயர்ந்து வாழும் போது ஏற்படும் வேலையில்லாப் பிரச்சனைகள், வதிவிட குடியுரிமை இல்லாத பிரச்சனைகள், மூச்சு விட முடியாத வாழ்க்கையினால் இயல்பாகவே குடும்பங்களில் ஏற்படும் பிரச்சனைகள் என்பவற்றிற்கு இந்தச் சபைகளில் சேர்ந்து பிரார்த்திப்பதன் மூலம் தீர்வு கிடைக்கும் என்று அப்பாவிகள் நம்ப வைக்கப்படுகிறார்கள். ஏமாற்றுக்காரர்கள் போதகர்கள் ஆகிறார்கள்.

எனது நண்பர் ஒருவருக்கும் அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடுகள் வந்து பிரிந்து விட்டனர். அந்த நண்பர் இப்படியான சபை ஒன்றிற்கு போகத் தொடங்கினார். இவரது கதையைக் கேட்ட போதகர் "உம்மை தன்னிடத்தில் கொண்டு வருவதற்காகவே கடவுள் உமக்கு இந்தப் பிரச்சனையைத் தந்திருக்கிறார்" என்று சொன்னாராம். "பிரச்சனை தந்து தான் கடவுள் உம்மை தன்னிடத்தில் சேர்த்துக் கொள்ளுவாரா? ஒருவருக்கு பிரச்சனையைக் கொடுத்துத் தான் தன்னிடத்தில் சேர்த்துக் கொள்ளுவார் என்றால் அந்தக் கடவுள் எப்படிப்பட்டவராக இருப்பார்? ஏன் மகிழ்ச்சியாக இருக்கும் ஒருவரையும் இந்தக் கடவுள்கள் தம்மிடத்தில் சேர்த்துக் கொள்ளுவதில்லை" என்று கேட்டேன். மறுமொழி இன்றி மெளனமாக இருந்தார்.

சுவிற்சர்லாந்தில் இருக்கும் இந்த பிலடெல்பியா எவஞ்சலிக்கல் மிசனரியின் தமிழ்ச்சபையின் மேல் வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களின் உண்மை, பொய்களை விட்டு விடுவோம். மதங்கள், மதவாதிகள் என்றாலே ஊழல் எல்லாம் சகஜம் தானே. இவர்கள் போன்றவர்கள் செய்யும் மிகப்பெரிய கொடுமை என்னவென்றால் மக்களின் வறுமைக்கு, பிரச்சனைகளிற்கு கடவுள்கள் மட்டுமே தீருகள் தருவார்கள். மனிதர்களால் எதுவுமே செய்ய முடியாது என்று மூளைச்சலவை செய்து மக்களை அதிகாரங்களிற்கு எதிராக, அநீதிகளிற்கு எதிராக போராடாமல் பார்த்துக் கொள்ளுவது தான். அதற்காகத் தாம் அதிகாரத்தில் இருப்பவர்கள் இவர்களை ஆதரிக்கிறார்கள். பெரும் பணம் கொடுத்து பாதுகாக்கிறார்கள்.

இந்த தமிழ்ச்சபையின் முகப்புத்தகத்தில் இருக்கும் விசுவாசி ஒருவர் "சுவிற்சர்லாந்தில் கடவுள் எமக்கு பெரும் அற்புதங்களை செய்திருக்கிறார்" என்று மெய் மறக்கிறார். "அட ஏமாற்றுக்காரர்களே, அந்தக் கடவுள் ஏன் எமது மக்களைக் கொன்றார்; ஏன் எமது மண்ணை மரண பூமியாக்கினார். சுவிற்சலாந்தில் அற்புதங்களைச் செய்த கடவுள் எமது குழந்தைகளையாவது இலங்கை அரசுக் கொலைகாரர்களிடம் இருந்து காப்பாற்றி இருக்கலாமே. மதவாதிகளே இன்னும் எவ்வளவு காலத்திற்குத் தான் உளுத்துப் போன பொய்களைச் சொல்லி மக்களை ஏமாற்றப் போகிறீர்கள்!!!