25
Tue, Jun

விஜயகுமாரன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மலையகத்தில் இருந்து வன்னிக்கு இடம் பெயர்ந்து வந்த குடும்பத்தைச் சேர்ந்த பெருமாள் கணேசன் என்னும் ஆசிரியர் அக்கராயன் மகாவித்தியாலயத்தில் தலைமை ஆசிரியராக கடமையாற்றுகிறார். அவருக்கு கிளிநொச்சி சாந்தபுரம் கலைமகள் வித்தியாலயத்திற்கு அதிபராக செல்லுமாறு வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் நியமனக் கடிதம் வழங்கியிருக்கிறார். அக்கடிதத்தின் படி பெருமாள் கணேசன் 07.07.2016 தனது பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும். "கடமையை 07.07.2016 அன்று பொறுப்பேற்பதற்காகத் தயாராகிக் கொண்டிருக்கும்போதே 06.07.2016 அன்றிரவு அவருக்கு தொலைபேசி மூலமாக ஒரு இடைநிறுத்த அறிவித்தல் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மூலமாக வந்திருக்கிறது. இதனையடுத்து, கணேசன் குறித்த பாடசாலையில் கடமை ஏற்பதைத் தவிர்த்தார்" என்று கவிஞரும், கிளிநொச்சி மாவட்டக்காரருமான கருணாகரன் தனது முகப்புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.

இலங்கையில் கல்வி நிறுவனங்களில் அரசியல்வாதிகள் தலையிடுவது குறைந்த அளவிலேயே இருந்தது. ஆசிரியர்களும், அதிபர்களும் ஆளுமை மிகுந்தவர்களாக இருந்தார்கள். மக்கள் தமது ஊர்ப்பாடசாலைகள் குறித்து மிகுந்த அக்கறை செலுத்தி வந்தார்கள். இதனால் அரசியல்வாதிகள் பாடசாலை நிர்வாகங்களில் தலையிடாது ஓரளவிற்கு ஒதுங்கி இருந்தார்கள். இலங்கையில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தன் முயற்சியில் சற்றும் தளராத அம்புலி மாமாக் கதை விக்கிரமனைப் போல சற்றும் தளராமல் பதவிக்கு வரும் கட்சிக்கு ஆதரவு தரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) கல்விநிறுவனங்களில் தலையிட்டு மாணவர்களினது கல்வியையும், எதிர்காலத்தையும் வீணாக்குவதை தனது கொள்கைகளில் ஒன்றாக வைத்திருக்கிறது. பாடசாலைகளில் இருந்து பல்கலைக்கழகம் வரை தங்களது அடிவருடிகளை பதவிக்கு கொண்டு வருவது, தங்களின் இலங்கை அரசுகளிற்கு கால் கழுவும் அடிமைத்தனத்தை எதிர்ப்பவர்களை அச்சுறுத்துவது என்று வடமாகாண கல்வியை மண்ணாக்கினார்கள்.

இப்போது இவர்களின் முறை. கல்வியாளர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், சமுகப்பணியாளர் என்று பன்முகப் பரிமாணம் கொண்ட பெருமாள் கணேசனை கிளிநொச்சி கலைமகள் வித்தியாலத்திற்கு அதிபராக பதவியேற்க வேண்டாம் என்று ஒரு குரல் தொலைபேசியில் தடுத்திருக்கிறது. அந்தப் பாராளுமன்ற உறுப்பினருக்கும், பெருமாள் கணேசனிற்கும் முன்விரோதம் எதுவும் உண்டா? இல்லை. பெருமாள் கணேசனிற்கு அந்த பாடசாலை அதிபராக வருவதற்கான தகுதிகள் போதாதா? இல்லை, கல்வி அமைச்சினால் தான் அவருக்கு அந்தப் பாடசாலைக்கு போகும்படி நியமனக் கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது. அப்படியானால் அந்த பாராளுமன்ற உறுப்பினரான அறிவுக் கொழுந்திற்கு என்ன தான் பிரச்சனை?

தன்னுடைய அதிகாரத்திற்குட்பட்ட பிரதேசத்து பாடசாலைக்கு ஒரு மலையகத் தமிழர் எப்படி அதிபராக வர முடியும் என்ற கீழ்த்தரமான மேலாதிக்க வெறிதான் அந்தப் பாராளுமன்ற உறுப்பினரின் இரவுநேர தொலைபேசி வழியாக வந்தது. ஆண்டாண்டு காலமாக ஒடுக்கப்படும் மக்களிற்கு எதிராக எழும் பிற்போக்கு தமிழ்த்தேசியத்தின் குரல் தான் அது. தமிழர்களின் உரிமைக்காகப் போராடுகின்றோம் என்று சொல்லிக் கொண்டு சாதி, மதம், பிரதேசம் என்னும் பிற்போக்குத்தனங்களில் புரளும் வலதுசாரி தமிழ்த் தேசியத்தின் குரல் தான் அது.

தேயிலைச் செடிக்கு உரமாக தம் உயிரைக் கொடுத்த மலையகத் தமிழ் மக்களை சிங்கள இனவெறியன் டி.எஸ். சேனநாயக்க நாடற்றவர்களாக்க சட்டம் கொண்டு வந்த போது தமிழ்க் காங்கிரசின் தலைவன் என்று சொல்லிக் கொண்டு மலையகத் தமிழர்களிற்கு எதிராக சிங்கள இனவெறியர்களுடன் சேர்ந்து நின்று மலையக மக்களின் வாழ்க்கையை அவலத்திற்குள் தள்ளிய ஜீ.ஜீ பொன்னம்பலம் செய்த வலதுசாரிப் பிற்போக்கு தமிழ்த் தேசிய அரசியலின் தொடர்ச்சி தான் இது.

சாதியால் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் "இனி இது பொறுப்பதிற்கில்லை" என்று சாதிவெறியர்களிற்கு எதிராக போராடிய போது ஒடுக்கப்பட்ட மக்களுடன் தோள் சேர்ந்து போராட வேண்டிய பொறுப்பில் இருந்த தமிழரசுக் கட்சியினர் வெள்ளாள சாதி வெறியர்களுடன் சேர்ந்து நின்று தமது சாதிவெறியைக் காட்டிய வலதுசாரிப் பிற்போக்கு தமிழ்த் தேசிய அரசியலின் தொடர்ச்சி தான் இது. "தளபதி" அமிர்தலிங்கம் பாரளுமன்றத்திலும், "அடங்காத் தமிழன்" சி.சுந்தரலிங்கம் மாவட்டபுரம் கந்தசாமி கோவிலிலும் தம் சாதிவெறியைக் காட்டிய பிற்போக்கு தமிழ்த் தேசிய அரசியலின் தொடர்ச்சி தான் இது.

நாங்கள் பெருமாள் கணேசன் மீதான கிளிநொச்சி பாராளுமன்ற உறுப்பினரின் அராஜகம் குறித்து, பிற்போக்கு தமிழ்த் தேசியவாதத்தின் பிரதேசவாதம் குறித்து கண்டிக்கும் போது "பிரதேசவாதம் பேசி தமிழர்களின் ஒற்றுமையை குலைகாதே" என்று சில அறிவுக்கொழுந்துகள் ஓடி வரப்போகிறார்கள். மானிப்பாய் மருதடி பிள்ளையார் கோவிலிற்கு கொடிமரச்சீலை கொண்டு வரும் சலவைத் தொழிலாளிகளை மரியாதை செய்ய வேண்டும் என்பதற்காக சாதிவெறியர்கள் கொடிமரத்தையே கொண்டு போய் ஒளித்தார்கள். அந்த சாதி வெறியர்களை நமது இணையத்தளம் எதிர்த்து எழுதிய போது "தமிழரை சாதி கொண்டு பிரிக்காதே" என்று சில அறிவுக்கொழுந்துகள் ஓடி வந்தார்கள்.

அதாவது சாதிவெறியர்களை, பிரதேச வெறியர்களை இவர்கள் கண்டிக்க மாட்டார்கள். இந்த வெறியர்களினால் பாதிக்கப்பட்டவர்களிற்காக குரல் கொடுக்க மாட்டார்கள். ஆனால் இன, மத, சாதி வெறியர்களை எதிர்ப்பவர்கள் தான், அம்பலப்படுத்துபவர்கள் தான் சமுதாயத்தை பிரிக்கிறார்கள் என்று விஞ்ஞான விளக்கம் கொடுப்பார்கள்.

ஆசிரியர் பெருமாள் கணேசனிற்கு கிளிநொச்சி அரசியல்வாதியினால் இழைக்கப்பட்டிருக்கும் அநியாயத்திற்கு எதிராக அனைவரும் சேர்ந்து குரல் கொடுப்போம். இனம், மதம், மொழி, சாதி, பிரதேசம் என்று மக்களைப் பிரிக்கும் கயவர்களின் அரசியலை அம்பலப்படுத்துவோம். இழப்பதற்கு எதுவும் இல்லாத உழைக்கும் மக்களிற்கு இனம் இல்லை, மதம் இல்லை, சாதி இல்லை.