25
Tue, Jun

விஜயகுமாரன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இலங்கைத் தமிழ்மக்களின் மீதான இன ஒடுக்குமுறையை, தமிழ்மக்களை அழுத்துகின்ற பிரச்சனைகளை இன்று வரை தமிழ்மக்களை ஒடுக்கி வரும் இலங்கையின் இனவெறி அரசுகளுடன் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்று தமிழரின் தலைமைகள் என்று சொல்லிக் கொள்ளும் வலதுசாரி தமிழ்க் கட்சிகள் இன்னமும் இரத்தம் உறையாத ஈர மண்ணில் நின்று கொண்டு நமக்கு சொல்கிறார்கள். இலங்கையின் பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் ஆட்சிக்கு வருவதற்காக உண்மையான பிரச்சனையான வறுமையை மறைத்து தமிழ்மக்களிற்கு எதிராக இனவாதம் பேசி சிங்களமக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி வாக்குகள் பெற்று ஆட்சி அதிகாரத்தில் அமருவார்கள்.

தமிழ்க் காங்கிரஸ் கட்சி, தமிழ் அரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்று மண்டையை மாற்றினாலும் தமிழ் மக்களை ஏமாற்றி வாக்குப் பொறுக்கும் கொண்டையை மாற்றாத தமிழ்க் கட்சிகள், இலங்கையின் இந்த இனவாதக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தமிழ்மக்களிற்கு தீர்வு பெற்றுத் தருவோம் என்று கீறல் விழுந்த இசைத்தட்டைப் போல திரும்பத் திரும்ப பாடிக் கொண்டிருக்கிறார்கள்.

இலங்கையின் முதலாளித்துவ, இனவெறி அரசுகளிடமிருந்து இன்று வரைக்கும் எந்த விதமான தீர்வும் தமிழ்மக்களிற்கு கிடைத்ததில்லை. இனிமேலும் கிடைக்கப் போவதில்லை என்பது தான் யதார்த்தம். வறுமையும், பசியும் தாங்காது தெருவில் இறங்கிப் போராடிய மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஏழைச் சிங்களமக்களை சிங்கள இனவாதம், சிங்கள பெருமிதம், சிங்கள இரத்தம் என்று வார்த்தைக்கு வார்த்தை பேசியவர்கள் தான் கொன்றார்கள், வெலிவேரியாவில் இன்றும் கொல்கிறார்கள். இந்தக் கொலைகாரர்களிடம் இருந்து தீர்வு கிடைக்குமாம். அய்யா சம்பந்தனும் அவர் தம் அடிப்பொடிகளும் சொல்கிறார்கள். நம்புங்கள்.

உலகு முழுக்க இனவாதிகளின் ஒரே ஆயுதம் பொய் என்பதாகத் தான் என்றைக்கும் இருக்கிறது. ஜேர்மனியின் வறுமைக்கு காரணம் மக்களைச் சுரண்டும் முதலாளித்துவம் இல்லை, ஜேர்மனிய மக்களை சுரண்டும் ஊழல் ஆட்சியாளர்கள் இல்லை. அங்கிருந்த மிகச் சிறுபான்மையினரான யூதர்களும், ரோமா ஜிப்சிகளுமே ஜேர்மனியின் வறுமைக்கு காரணம், ஜேர்மன் மக்களின் அவலவாழ்விற்கு காரணம் என்று கிட்லரும், கோயபல்சும் நாசிகளும் பொய் சொன்னார்கள்.

அவர்களின் வாரிசுகளான ஜெயவர்த்தனா, மகிந்த ராஜபக்சா என்போர் சிங்களமக்களின் வறுமைக்கு இலங்கையின் மற்ற இனமக்கள் தான் காரணம் என்று இனக்கலவரங்களை தூண்டி விட்டார்கள். இனப்படுகொலை செய்து எம்மக்களை துடிக்க துடிக்க கொன்றார்கள். கொலைகாரன் ஜெயவர்த்தனாவின் ஐக்கிய தேசியக் கட்சியின் வாரிசு ரணில் விக்கிரமசிங்கா; இனப்படுகொலையாளன் மகிந்த ராஜபக்சவின் சுதந்திரக் கட்சியின் வாரிசு மைத்திரி சிறிசேனா. இந்த இரண்டு இனப்படுகொலைக்கட்சிகளும் சேர்ந்து இலங்கைக்கு "நல்லாட்சி" தருவார்களாம். தலைவாழையில் தண்ணீர் தெளித்து இலங்கை அரசின் விருந்து தமிழ் மக்களிற்கு தரப்படுமாம் விளம்புகிறார்கள் எம்தலைவர்கள்.

இலங்கை மக்களின் வறுமை பற்றிய புள்ளிவிபரங்களில் மிகுந்த வறுமை கூடியவர்களாக தோட்டத் தொழிலாளர்களான மலையக மக்கள் இருக்கிறார்கள். அவர்களிற்கு அடுத்த நிலையில் ஏழைச் சிங்கள மக்களே இருக்கிறார்கள். ஆம், சிங்கள மக்களிற்காகவே ஆட்சி நடத்துகிறோம் என்று சொல்லும் இலங்கையின் ஆட்சியாளர்கள் மூடி மறைக்க முடியாத உண்மை இது. சிங்கள மக்களின் அன்றாட வாழ்க்கை என்னும் அவலம் சொல்லும் புள்ளிவிபரம் இது.

வறுமையில் வாழும் ஏழைச்சிங்கள மக்களின் கோபத்தில் இருந்து தப்ப இலங்கை ஆட்சியாளர்கள் சாமுவேல் ஜோன்சன் சொன்னது போல அயோக்கியர்களின் கடைசிப் புகலிடமான தேசபக்தியையும், நாசிகளின் இனவெறியையுமே ஆயுதமாக வைத்திருக்கிறார்கள். தேசபக்தி அயோக்கியத்தனத்தையும், இனவெறி படுகொலைகளையும் அவர்கள் கைவிட்டால் ஏழைச்சிங்கள மக்களின் கோபத்திற்கு அவர்கள் முகம் கொடுக்க வேண்டி வரும். இலங்கையின் ஆட்சியாளர்கள் மக்களை சுரண்டுவதை என்றைக்குமே நிறுத்தப்போவதில்லை. எனவே அவர்கள் தமிழ்மக்களிற்கு ஒரு தீர்வை என்றைக்குமே தரப்போவதும் இல்லை.

சும்மா கிடைக்க சுதந்திரம் என்ன சுக்கா மிளகா கிளியே? என்று வினவினான் பாரதிதாசன். தமிழ் மக்களிற்கு சுதந்திரம், நியாயம், தீர்வு கிடைக்க வேண்டுமாயின் இனவாதம் என்னும் பொய்யை, மோசடியை தகர்க்க வேண்டும். இனவாதத்தை உடைக்க வேண்டுமாயின் சுரண்டப்படும் ஏழைச்சிங்கள மக்களுடன் இணைந்து போராட வேண்டும். ஒடுக்கப்படும் மலையக மக்களுடன், முஸ்லீம் மக்களுடன் இணைந்து போராட வேண்டும்.

“இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின்

பரந்து கெடுக உலகியற்றியான்”

இரந்து தான் உயிர் வாழ வேண்டும் என்ற நிலை இருந்தால் இந்த உலகைப் படைத்தவன் அழியட்டும் என்றான் அய்யன் வள்ளுவன். இலங்கை மக்களை வறுமை என்னும் கொடுமைக்குள் தள்ளி விட்ட கொள்ளையர்களை ஒடுக்கப்படும் எல்லா ஏழைமக்களும் இணைந்து அழிப்போம். சுதந்திரம் சும்மா வரப்போவதில்லை.