25
Tue, Jun

விஜயகுமாரன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

அண்ணன் சீமானிடம் பேசுபவர்கள் அருகே குழந்தைகள், பெண்கள் இருக்கிறார்களா என்று உறுதிப்படுத்தி விட்டு பேசவும். பலவீனமான இதயம் உள்ளவர்கள் அவரது படங்களைப் பார்ப்பதை தவிர்ப்பது போல அவரிடம் கேள்வி கேட்பதையும் கட்டாயம் தவிர்க்க வேண்டும். அவர் அரசியலில் இருக்கிறார். தமிழ்நாட்டின் எல்லாச் சினிமாக்காரர்களின் இலட்சியமான தமிழ் மாநிலத்தின் அடுத்த முதலமைச்சராகும் தணியாத தாகம் அவருக்குள்ளும் இருக்கிறது. கருணாநிதி, வாத்தியார், ஜானகி, ஜெயலலிதா வரிசையில் அவரும் முதலைமைச்சர் ஆகும் அபாயம் தமிழ்மக்களின் மீது தொங்கிக் கொண்டிருக்கிறது. அதைக் கூட பொறுத்துக் கொள்ளலாம், அவர் முதலமைச்சராக வந்த பின் அவரிடம் கேட்கப்படும் கேள்விகளிற்கு அவர் ...த்தா என்று பொங்கியெழுவதை நினைத்துப் பார்க்கவே கதிகலங்குகிறது.

அண்ணன் சீமான் நாயக்கர்களால் மதுரையில் கட்டப்பட்ட நாயக்கர்மகால் அவமானச் சின்னம் என்கிறார். உண்மை தான் நிலப்பிரபுத்துவ காலத்தில் கட்டப்பட்டவைகள் எல்லாம் அவமானச் சின்னங்கள் தான். மக்களைப் பிழிந்து எடுத்த வரிப்பணத்திலும், "வெட்டி" எனப்படும் ஊதியமில்லா உழைப்பின் மூலம் மக்களை கட்டாயமாக வியர்வை சிந்த வைத்துக் கட்டப்பட்டவை தான் இந்த கோவில்கள், கட்டிடங்கள், அரண்மனைகள். ஆனால் அண்ணன் சீமான் தனது அழிவு அரசியலிற்காக நாயக்கர்களால் கட்டப்பட்ட அவமானச் சின்னம் என்று பேசி தமிழ்நாட்டில் இருக்கும் தெலுங்கு பேசும் மக்களை குறி வைக்கிறார்.

நாயக்கர் மகால் அவமானச் சின்னம் என்றால் ராஜராஜனால் கட்டப்பட்ட தஞ்சைப் பெரிய கோவில் அவமானச் சின்னம் இல்லையா? ராஜராஜன் என்ற தமிழ் மன்னனால் கட்டப்பட்டதனால் அது அவமானச் சின்னம் இல்லை என்று ஆகி விடுமா? பிரகதீஸ்வரர் கோவில் யாருடைய பணத்தில் கட்டப்பட்டது? ஏழைத் தமிழர்களின் வரிப்பணத்தில் எழுப்பப்பட்டது தான் இந்தக் கோவில். ஏழைத் தமிழர்களை கூலியில்லாமல் உழைக்கச் சொல்லி ஆணையிட்டு எழுப்பப்பட்டது தான் இந்தக் கோவில்.

இந்தக் கோவிலில் பூசை செய்ய தமிழர்களையா நியமித்தான் தமிழ் மன்னன் ராஜராஜன்?. உழைக்கும் மக்களை சூத்திரர்கள் என்று இழிவு செய்யும் பிராமண குலக்கொழுந்துகளை பொன்னும் பொருளும் கொடுத்து சோழ நாட்டிற்கு வரவழைத்தது இந்த தமிழ் மன்னன் இல்லையா? ஏழைகளை நிலத்தை விட்டு விரட்டி விட்டு அந்த ஊர்களிற்கு சதுர்வேதிமங்கலம் என்று பெயரிட்டு பிராமணர்களிற்கு தானமாக ராஜராஜன் கொடுத்தது அநியாயம் இல்லையா? இந்த தமிழ் மன்னன் கட்டிய கோவிலில் தமிழிலா பூசை நடந்தது?; நடக்கிறது?. தேவரடியார்கள் என்ற பெயரில் ஏழைப்பெண்களின் வாழ்க்கையை ராஜராஜன் நாசமாக்கியது அவமானம் இல்லையா? இன்றைக்கு வரைக்கும் தேவடியாள் என்று பெண்களை இழிவுபடுத்துவது இந்த மன்னர்கள் தொடங்கி வைத்த கொடுமை இல்லையா?

நாயக்கர் மகாலை தமிழர்களின் அவமானச்சின்னம் என்று சொல்லும் அண்ணன் சீமான் ஊழலாலும், அராஜகத்தாலும் தமிழ்மக்களை ஒடுக்கும் ஜெயலலிதாவை ஈழத்தாய் என்று போற்றிப் பாடுகிறார். தனது சாராயக்கடைக் கொள்ளைக்காக தமிழ் மக்களின் வாழ்வை அழிக்கும் ஜெயலலிதா சீமானிற்கு அழிவுச்சின்னமாக, அவமானச் சின்னமாக தெரியவில்லை. ஜெயலலிதா என்ற பேயை விரட்ட துணிவு இல்லாத அவரும், அவரது கூட்டமும் தெலுங்கர்களை விரட்ட வேண்டும் என்று இனவெறி பேசுகிறார்கள்.

தமிழ்நாட்டின் காடுகள், மலைகள், ஆறுகள் என தமிழ்மண் முழுவதையும் கொள்ளையடிக்கிறார்கள். தமிழ்நாட்டில் வைத்து தொழிலாளிகளை அந்நிய பெருமுதலாளிகள் கை நீட்டி அடிக்கிறார்கள். தமிழ்நாட்டின் பொதிகைமலையில் தவழ்ந்து வரும் ஜீவநதியான தாமிரபரணியை ஊழல் பணத்திற்காக கொக்கோ கோலாவிற்கு விற்கப் போகிறார்கள் தமிழ்நாட்டுக் கொள்ளைக்காரர்கள். இவை எதையுமே அண்ணனும், அல்லக்கைகளும் கண்டு கொள்ளமாட்டார்கள் என்பது மட்டுமல்ல கடல் விழுங்கி வைகுந்தராசன் போன்றவர்களின் காலில் விழுந்து வணங்குகிறார்கள்.

இந்தத் தமிழ் இனவெறியின் உச்சமாக ஈ.வே ராமசாமியை கன்னட நாயக்கராக பார்க்கும் அவலம் நிகழ்கிறது. பார்ப்பன அதிக்கத்தை எதிர்த்து எழுந்த திராவிட இயக்கத்தை தமிழர்களிற்கு எதிரானது என்று சொல்லி இனவெறி நஞ்சை விதைக்கிறார்கள். தேசியம் என்பது அதன் வளர்ச்சிப் போக்கில் பாசிசப்பயங்கரமாக மாறும் என்பதன் இன்றைய உதாரணமாக சீமானும், நாம் தமிழரும் இருக்கிறார்கள். ஒடுக்கப்படும் ஏழை மக்களின் ஒற்றுமையை இனம், மதம், மொழி, சாதி என்பவற்றின் பெயரால் இவர்கள் சிதைக்கிறார்கள் என்பது தான் என்றைக்குமான வரலாறு.