25
Tue, Jun

விஜயகுமாரன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தமிழ்மக்கள் மீது இலங்கைப் பேரினவாத அரசு தொடுத்த போரின் பின்பு மயான அமைதி நிலவியது. இலங்கை அரச கொலைகாரர்களின் அராஜகங்களின் முன் பிள்ளைகளைப் பறி கொடுத்தவர்கள் கூட வாய் விட்டு விம்ம முடியாமல் கொலைக்கரங்கள் தொண்டைகளை நெரித்துக் கொண்டிருந்தன. முன்னிலை சோசலிசக் கட்சியின் தோழர்கள் காணாமல் போனவர்களின் விபரங்களைத் திரட்டினார்கள். பெற்றோர்களிற்கு, அன்புக்குரியவர்களிற்கு நம்பிக்கை ஊட்டினார்கள். ஏழை மக்கள், உழைக்கும் மக்கள், வருத்தப்பட்டு பாரம் சுமக்கும் மக்கள் ஒற்றுமையுடன், ஒன்று சேர்ந்து போராடும்போது மக்கள் எதிரிகள் காற்றுக் கிழித்த தலையணைப் பஞ்சு போல பதறிப் போவார்கள் என்று மக்கள் சக்தியின் வலிமையை உணர்த்தினார்கள். காணாமல் போனவர்களின் உறவினர்களுடன் சேர்ந்து கொழும்பில் ஒரு ஆர்ப்பாட்டத்தை நடாத்தினார்கள்.

இலங்கை அரசிற்கு தமிழ் மக்களைக் காட்டிக் கொடுத்து வயிறு வளர்க்கும் கொலைகாரக்கும்பல்கள் யாழ்ப்பாணம் எங்கும் மணல் அள்ளி சூழலை நாசமாக்கின. முன்னிலை சோசலிசக் கட்சித்தோழர் இந்த மணல் மாபியாக்களிற்கு எதிராக மக்களுடன் சேர்ந்து குரல் கொடுத்தார். யாழ்ப்பாணத்து மணல் மாபியாக்கள் தோழர்களைக் கடத்தி இலங்கையின் அரசியல் மாபியாக்களிடம் கொடுத்து காணாமல் போகச் செய்தனர்.

முன்னிலை சோசலிசக்கட்சியின் தோழர் கடத்தப்பட்டு பல வருடங்கள் ஆகின்றன. அவர் இருக்கும் போதே இரவிலும், பகலிலும் நீங்காத நிழலாக வறுமை பின் தொடர்ந்து வந்தது. சமையல், சாப்பாடு, தூக்கம் எல்லாம் அந்த பனை ஓலை வேய்ந்த சிறுகுடிசையில் தான் நடந்தது. மழை பெய்யும் இரவுகளில் ஓலைகளில் இருந்து ஒழுகும் தண்ணீர் தம் செல்லமகளின் மீது படாமல் இருக்க மண்சட்டிகளை தூக்கிப் பிடித்தபடி கணவனும், மனைவியும் விடியும் வரை விழித்திருப்பார்கள்.

அவர் கடத்தப்பட்டு காணாமல் போனபின்பு முன்னிலை சோசலிசக் கட்சி தோழரின் குடும்பத்திற்கு ஒரு சிறுவீடு கட்டிக் கொடுக்க முயற்சி செய்தது. கட்சி பொதுமக்களிடம் நிதி சேர்த்தது. முதலாளித்துவத்திற்கும், இனவாதத்திற்கும் எதிராகப் போராடும் கட்சிக்கு ஏழைமக்கள் தானே நிதி கொடுப்பார்கள். தம் வறுமையிலும் தம்மோடு போராடுபவர்களிற்காக அன்போடு அந்த மக்கள் கொடுத்த நிதியில் தோழர்களால் வீடு கட்ட தேவையான மூலப்பொருட்களை மட்டுமே வாங்க முடிந்தது. பத்திற்கும் மேற்பட்ட தோழர்கள் பகல், இரவாக கல் அறுத்தார்கள்; மண் அரிந்தார்கள்; மரங்களை வெட்டினார்கள். பொதுமக்களின் பணத்திலும், தோழர்களின் உழைப்பிலும் சிறுவீடு ஒன்று எழுந்தது. மழை பெய்யும் இரவுகளில் ஓலைகளில் ஒழுகும் தண்ணீர் மனத்தை அரிக்கும் பயமின்றி தோழரின் மனைவியும், மகளும் உறங்குகிறார்கள்.

உழைக்கும் மக்கள் தான் முன்னிலை சோசலிசக் கட்சியின் சொத்துக்கள். அவர்கள் கொடுக்கும் நிதியில் தான் கட்சி பத்திரிகை நடத்துகிறது. அரசியல் கூட்டங்களை நடத்துகிறது. மக்களின் உணவிலே தாம் தோழர்கள் பகிர்ந்துண்டு வாழ்கிறார்கள். கட்சியின் முழுநேர ஊழியர்கள் பசிக்கும் வயிற்றுடன் தான் பாதிநேரம் பொழுதைக் கழிக்கிறார்கள். துண்டுப்பிரசுரங்கள், சுவரொட்டிகள் வெளியிடுவதற்கு அச்சகங்களிடம் கடன் சொல்லித் தான் தோழர்கள் வெளியிடுகிறார்கள்.

முன்னிலை சோசலிசக் கட்சியின் மாணவர் அமைப்பு "கல்வியை தனியார் மயமாக்காதே"!, "கல்வி இலங்கை மக்களின் அடிப்படை உரிமை"! என்ற கோசங்களை முன் வைத்து தொடர்ச்சியாக போராட்டங்களை நடத்தி வருகிறது. இந்த வாரம் கூட கொழும்பு கொள்ளுப்பிட்டியில் மாணவர் அமைப்பு நடத்திய போராட்டத்தில் வீதித்தடைகளையும் விசிறி அடிக்கும் தண்ணீரையும் மீறி மாணவர்கள் வீரத்துடன் போராடினர். உயர் கல்வியை தனியார்மயப்படுத்தலை நிறுத்து!. மாணவர்களின் அரசியல் சுதந்திரத்தை மதி!. சுகாதாரக் கல்வியின் தரத்தைக் குறைக்காதே!. மற்றும் அனைத்து பயங்கரவாதச் சட்டங்களையும் உடனே அகற்று! என்ற முழக்கங்களை முன் வைத்து தீரத்துடன் போராடினர். கடற்தொழிலாளர்களுடன் இணைந்து முன்னிலை சோசலிசக் கட்சி "எரிபொருட்களை நியாய விலைக்கு வழங்கு"! என்று மாத்தறை முதல் சிலாபம் வரை போராட்டங்களை நடத்தியது. வெலிவேரியா, சுன்னாகம் என்று தொடர்ச்சியாக தங்களின் பண வெறிக்காக அரச தலைமைகளுக்கு ஊழல் பணத்தைக் கொடுத்து விட்டு நன்னீரை நாசமாக்கும் பணமுதலைகளிற்கு எதிராக போராடி வருகிறது.

நாம் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்று நமது எதிரியே தீர்மானிக்கிறான் என்று ஆசான் மாவோ சொன்னான். இலங்கையின் மக்களை இனம், மதம், மொழி என்ற கோடுகளைப் போட்டு பிரிக்கும் இனவெறி அரசியலை உடைக்க வேண்டுமாயின் மக்களிடையே ஒற்றுமையை வளர்க்க வேண்டும் என்று மாவோவின் வழியில் சமவுரிமை இயக்கம் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் கட்டப்பட்டது. பெருவளையிலும், அளுத்கமவிலும் முஸ்லீம் மக்கள் மீது பொதுபலசேனா என்ற மகிந்த அரச கைக்கூலிகள் வெறியாட்டம் ஆடிய போது சமவுரிமை இயக்கமே எல்லா இன மக்களையும் இணைத்துக் கொண்டு கொழும்பு கோட்டையில் போதுபல சேனாவின் இனவெறிக்கு எதிராக போராடியது.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் "முகமாற்றம் போதும், அமைப்பு மாற்றத்திற்காக அணிதிரள்வோம்" என்ற பதாகையை உயர்த்திப் பிடித்தபடி முன்னிலை சோசலிசக்கட்சி நாடு முழுவதும் அரசியல் பிரச்சாரம் செய்தது. இடதுசாரி கட்சிகளுடன் அய்க்கியம் கொண்டு இடதுசாரிய முன்னணி அமைத்தது. சர்வாதிகாரி மஹிந்தவை தோற்கடிப்போம் - இன்னொரு சர்வாதிகாரிக்கு இடமளியோம்!. பொய்யான அரசியலமைப்பு திருத்தம் வேண்டாம்!. மக்கள் அரசியலமைப்பு நிர்ணய சபையைக் கூட்டு!. நவதாராளமய முதலாளித்துவத்தை தோற்கடிப்போம்!. தேசிய ஒடுக்குமுறைக்கும் இனவாதங்களுக்கும் எதிராக போராடுவோம்!. இவை தான் எமது அரசியல்.

சமத்துவ சமுதாயம் அமைப்போம்!, இனவாதத்தை இலங்கையில் இல்லாமல் செய்வோம்!, சகல இனமக்களும் சரிநிகர் சமானமாக வாழ்வோம் என்று முன்னிலை சோசலிசக் கட்சி சொல்வதை எதிர்ப்பவர்கள் யாராக இருக்க முடியும்?. முதலாளிகள் எதிர்ப்பார்கள். சிங்களப்பேரினவாதிகள் எதிர்ப்பார்கள். தமிழ்க்குறுந்தேசியம் பேசுபவர்கள் எதிர்ப்பார்கள். மதத்தை வைத்து முஸ்லீம் மக்களை ஏமாற்றுபவர்கள் எதிர்ப்பார்கள். பிரமுகர் அரசியல் செய்யும் பிழைப்புவாதிகள் எதிர்ப்பார்கள். முற்போக்கு வேடம் போடும் முன்னாள் கொலையாளிகள் எதிர்ப்பார்கள். நெருக்கடிகள் வரும் போது குழந்தைகள் அழும், நாய்கள் குரைக்கும், பிழைப்புவாத அரசியல்வாதிகள் சரியான சக்திகள் மீது சேறு பூசுவார்கள்.

முதலாளித்துவத்தின் கொடுமையால் வறுமையில் வாடும் இலங்கையின் மக்களிற்கான போராட்டப்பாதை நீண்டு கிடக்கிறது. கால்கள் சலிக்காமல் புரட்சியின் கீதத்தைப் பாடியபடி கையில் செங்கொடி ஏந்தி சேர்ந்து நடப்போம், வாரும் சகோதர, சகோதரியரே!!!