25
Tue, Jun

விஜயகுமாரன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

 

மக்களிற்காக போராடி மடிந்தவர்கள் என்றும் எம் நினைவுகளில் வாழ்வார்கள். அவர்களின் போராட்டங்களை தொடர்வதும், அவர்களின் செய்திகளை அடுத்த கட்டங்களிற்கு, அடுத்த தலைமுறைகளிற்கு எடுத்துச் செல்லுவதுமே அவர்களிற்கான அஞ்சலியாக அமையும். அந்த நாளில் அல்லது அந்த மாதத்தில் வெறும் சடங்காக செய்யப்படுபவை எந்த விதமான அர்த்தமும் இல்லாதவை. இளையராஜா கனடாவிற்கு இசைநிகழ்ச்சி ஒன்றை நடத்துவதற்காக கார்த்திகை மாதம் வருகிறார் என்றதும் புலம்பெயர் புண்ணக்குகளின் தேசபக்தி உச்சத்திற்கு போய்விட்டது.

மாவீரர் தினம் வரும் கார்த்திகை மாதத்தில் எப்படி இசைநிகழ்ச்சி நடத்தலாம் என்று புலம்புகிறார்கள். ஆனால் விடாது கருப்பு என்பதைப் போல், வெளிநாட்டிற்கு வந்தாலும் விடாது தமிழனை துரத்தும் கோமாளித்தனமான தமிழ்ப்படங்கள் திரையரங்குகளிற்கு வரலாம். இந்தக் கேலிக்கூத்துகளிற்கு எதிராக வெளிநாட்டிற்கு வந்த பிறகு தேசிய விடுதலைக்கு உரத்துக் குரல் கொடுக்கும் சங்கக்காரர்கள், பண்பாட்டு வேலி அடைக்க கிடுகு எடுத்துக் கொடுக்கும் சங்கத்துக்காரர்கள் எவரும் குரல் எழுப்ப மாட்டார்கள். அது மட்டும் இல்லாமல் அந்த படங்களிற்கு விநியோகமும் இவர்களாகத் தான் இருக்கும்.

இவர்களின் கதைப்படியே கார்த்திகை மாதத்தை புனிதமாதம் என்று வைத்துக் கொண்டாலும், அந்த கார்த்திகை விரதத்தை மற்றவர்கள் தான் பயபக்தியாக பிடிக்க வேண்டும். இவர்களின் லங்காசிறி ,ஈழமுரசு, ஒரு பேப்பர், மனிதன், G.T.V போன்ற விடுதலை வேள்விக்கு விளக்கெண்ணெய் ஊத்தும் ஊடகங்கள் தமிழ் சினிமாவின் சிறப்புகளை விலாவாரியாக ஒவ்வொரு நாளும் எடுத்து விடலாம். இவர்களின் தேசிய விடுதலை வியாபாரம் பணம், இலாபம், பதவி என்று இருப்பதைப் போலவே இவர்கள் விரதம் பிடிக்கச் சொல்லும் இளையராஜா போன்றவர்களும் வியாபாரிகளாகவே இருக்கிறார்கள்.

பெரும்பாலான தமிழ் சினிமாக்காரர்களைப் போல இளையராஜாவும் எந்த விதமான சமுகப்பொறுப்பற்ற மனிதர். இவர்களிற்கு இவர்களது தொழிலும், பணமும் தான் உலகம். மிகவும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்திலிருந்து வந்த இவர், இந்த கொடுமையான சாதியமைப்பை கட்டிக்காத்து வரும் இந்துமதத்தின் தீவிரமான பக்தர் என்பதிலிருந்து இவரின் சமுகம் பற்றிய அறிவை கண்டு கொள்ளலாம். இவரின் சொந்த ஊரான பண்ணைப்புரத்தில் இவரின் சொந்த சாதியினரிற்கு இன்னும் தனிக்குவளைகளில் தேனீர் கொடுக்கும் போது சிறீரங்கம் பெருமாள் கோவிலிற்கு கோபுரம் கட்ட கோடிகோடியாக கொட்டிக்கொடுத்த கொடைவள்ளல் இவர். ஆபாசமான, கீழ்த்தரமான, எந்தவித கலை உணர்வுமற்ற படங்களிற்கெல்லாம் இசை அமைத்த இவர், சாதிக்கொடுமைகளிற்கு எதிராக வாழ்நாள் முழுக்க போரிட்ட  ஈ.வே ராமசாமியை பற்றிய பெரியார் படத்திற்கு ஆயிரம் கேள்விகள் கேட்டு இசையமைக்க மறுத்தார். உண்மையான காரணம் பெரியார் சமுதாயத்தை சீரழிக்கும் இந்துமதத்தின் மீது போர் தொடுத்தது தான்.

ஆனால் பகுத்தறிவு, இடதுசாரி சிந்தனை கொண்ட கலைஞர்கள் இந்த கேடுகெட்ட தமிழ்ச்சினிமா துறையில் இருந்த போதும் தமது செயற்பாடுகளை முன்னெடுத்தே சென்றனர். பணமோ, புகழோ அவர்களை மாற்றவில்லை. பெரியாரின் போர்வாளான M.R ராதா பகுத்தறிவு கொள்கைகளை படங்கள் மூலமும், நாடகங்கள் மூலமும் பரப்பினார். ராமாயணத்தை கிண்டல் செய்து கீமாயணம் என்று நாடகம் போட்டதற்காக சிறை சென்ற பகுத்தறிவுவாதி அவர். திங்கள் மாலை வெண்குடையாள், ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா ஏனடி நீராடுது போன்ற மனதை மயக்கும் பாடல்களைத் தந்த M.B சிறீனிவாசன் என்ற இசையமைப்பாளர் இடதுசாரி சிந்தனை கொண்டவர். இசைத்தொழிலாளர்களிற்கு சங்கம் அமைப்பதில் முக்கிய பங்காற்றினார். ஏழைச்சேரிக் குழந்தைகளை வைத்து கூட்டிசை நிகழ்ச்சிகளை அரங்கேற்றினார்.

நாற்பது வருடங்களிற்கு முந்தைய முதலாம் வகுப்பு தமிழ்மலர் பாடப்புத்தகம் பார் படம், பாடம் படி என்று தொடங்கும். அதை தமிழன் உடும்புப்பிடியாக பிடித்துக் கொண்டான். தமிழர்களின் தேசியப் பொழுதுபோக்கு படம் பார்த்தல், மூன்றாந்தரப் தமிழ்ப்படங்கள், அவற்றில் கேனத்தனமாக நடிக்கும் நடிகர்கள், யதார்த்தம், வாழ்வு என்றால் என்னவென்றே தெரியாத கதைகள். தமிழர்களின் பொதுஅறிவு, பகுத்தறிவு என்பன ஒரு பத்து வயது சிறுவனின் அளவிற்கு தான் இருக்கும் என்று ஒரு ஆய்வு சொல்கிறது என்பார்கள். எதை வைத்து இதை அளந்தார்களோ தெரியவில்லை. ஆனால் அது உண்மை என்றால் அதற்கு தமிழ் படமே முழுமுதல் காரணமாக இருக்கும். இந்த தமிழ் சினிமாவை விற்பதில் முன்னுக்கு நிற்கும் இந்த விடுதலை வியாபாரிகள், இன்னொரு வியாபாரியை வர வேண்டாம் என்னும் போது நாயை நாய் தின்னும் உலகம் என்னும் ஆங்கிலப் பழமொழி தான் ஞாபகம் வருகிறது.

18/11/2012