25
Tue, Jun

அகிலன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பேயாட்சியின் மகிந்தப் பூதங்களே மக்களை வெருட்டுகின்றன

கடந்த இருவாரங்களாக தமிழர் பிதேசங்கள் (கிழக்கு மாகாணம், மலையகம்) எங்கும் கிறீஸ் பூதமென்னும் வடிவில் மர்ம மனிதர்களின் கெடுபிடி சொல்லொனா தொல்லையாகியுள்ளது! மக்களின் அன்றாட வாழ்வு அவலமாகியுள்ளது. இரவு 10-மணி வரையிலான அவர்களின் இயல்பு வாழ்வு இல்லாததாகி, மாலை 6-மணிக்குள் ஊரடங்குச் சட்டம்போல் பயபீதியுடன் வீட்டிற்குள் முடங்குகின்றனர்.

கிழக்கு மாகாணத்தில் தற்போது ஏற்பட்டுள்ள மர்ம மனிதன் அச்ச நிலை காரணமாக அம்பாறை மட்டு. மாவட்டங்களில் பொது மக்கள் பகலில் தூங்கி இரவில் விழிக்கும் போக்கைக் கடைப்பிடிக்கின்றனர். தொழிலுக்குச் செல்வோர் இரு வேளையும் விழித்திருக்க வேண்டிய நிலையில் சிறுவர்கள் பலமான பீதியிலும் மன அழுத்தத்துக்கும் உள்ளாகி வருவதாகவும், பெண்கள் தமது ஆண் துணைகளை வலுக்கட்டாயப்படுத்தி வீட்டுக்குள் முடக்குகின்றனர் எனவும் நோன்பு காலமாகையால் பள்ளிக்கு தொழுகைக்கு செல்ல முடியாத துர்ப்பாக்கிய நிலை எழுந்துள்ளதாகவும், 3 வருடங்கள் படித்த உயர்தர மாணவர்கள் திருப்தியாக பரீட்சை எழுத முடியாத நிலையில் உள்ளனர்.

கடந்த இருவாரங்களாக இருந்த புதிரான புதிரை மக்கள் தம் சுயபோராட்டஙகளின் மூலம் இனம் கண்டுள்ளனர்.

கடைசியாகக் கிடைக்கும் செய்திகளின்படி கிறீஸ் பூதத்தின் பின்னணியில் இராணுவப் புலனாய்வுத்துறையினரே இருப்பதாகவும், பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்சவின் உத்தரவுக்கமையவே இந்தப் பீதி கிளப்பி விடப்பட்டுள்ளது…

இப்போது இப்புலனாய்வு பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் பரவலாகி, அரசுக்கெதிரான போராட்டமாகியுள்ளது. இதை கிழக்கு மற்றும் மலையக மக்கள் மத்தியில் பரவலாக காணமுடிகின்றது.

மட்டுநகரில் புகுந்த மர்மமனிதரை மக்கள் துரத்திச் சென்றபோது பொலிஸ் காவலரணுக்குள் ஓடி ஒளிந்தனர்!

மட்டக்களப்பு புதுநகரில் திங்கட்கிழமை இரவு நடமாடியதாகத் தெரிவிக்கப்படும் மர்ம மனிதர்களை பொதுமக்கள் துரத்திச் சென்ற போது அம்மர்ம மனிதர்கள் சேத்துக்குடா பொலிஸ் காவலரணுக்குள் ஓடி ஒளிந்து கொண்டதைக் கண்டித்து அப்பகுதி மக்கள் புதூர் விமான நிலையத்துக்கு அருகாமையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

மகிந்தாவின் “மர்ம மனிதர்களான” காவல்த்துறையை மக்கள் தான் காத்திருந்து பிடித்து காவல்த்துறையினரிடம் கொடுக்கின்றனர். தகவல் கொடுத்தும், காவல்த்துறையினர் கைது செய்த ஓர் சம்பவம் எங்குமே நடைபெறவில்லை. பேயாட்சியின் திட்டமிட்ட பூத நடவடிக்கையால் கிழக்கிலும்-மலையகத்திலும் காவல்துறை செயலிந்தே உள்ளது. இதனால்தான் மக்களால் பிடித்துக் கொடுக்கப்படுகின்றவர்கள் தாங்கள் காவல்துறையைச் சார்ந்தவர்கள் எனும் சான்றுகளை காட்டி வலு எளிதாக வெளிவருகின்றனர். இதுவரையில் பிடிபட்டவர்கள் மீது காவல்துறையாலோ-நீதி அமைச்சாலோ சட்ட நடவடிக்கைகள் ஏதுமே எடுபடவில்லை! பிடித்துக்கொடுத்த மக்கள் குறிப்பாக இளைஞர்கள்-மாணவர்கள் நையப்புடைக்ப்பட்டு மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். நியாயாம் கேட்கும் மக்கள் மிருகத்தனமாக தாக்கப்பட்டுள்ளனர்.

இதுபற்றி மகிந்தாவிடம் கேட்டபோது, இது அரசிற்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் செயற்படுவோரின் செயலென தன்னிடம் கூறியதாக நீதி அமைச்சர் மகிந்த-வக்காலத்து வாங்குகின்றார். நீதி அமைச்சரை முஸ்லிம் காங்கிரஸிற்கூடாக அரசியல் அரங்கில் அமோக வெற்றிபெற வைத்தவர்கள் கிழக்குமாகாண மக்கள். கிழக்கின் விடிவெள்ளிகளை விடுவம்! இதுகள் மகிந்த- குடுமபாட்சியின் தொடர் கொத்தடிமைகள்.! இவர்களால் கிழக்கின் மக்களுக்கு விடிவாகாது! தொடர் இருள்தான்! ஆனால் ஏதோ நீதி அமைச்சராக, நீதிக்காக நீச்சலடிப்பதாக சொல்லும் இப்பாசாங்காளர் இனிமேலும் நீதியின் பக்கமான கிழக்கு-மலையக மக்களின் பக்கம் நிற்பாரா? கிறீஸ் பூதம் எதிர்காலத்தில்தான் தன் பூதாகாரத்தை கிழக்கில் ஆரம்பிக்கப்போகின்றது.

கிராமப் படைமுகாம்கள் கிராமங்கள் தோறும் படைமுகாம்களை நிறுவுவதற்கான முடிவு அரச மட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இதை செய்வதற்கு கிறீஸ் பூதமே பேருதவியாகியுள்ளது. பூதத்தின் பூதாகரத்தால் மக்கள் காவலர்களுக்கு எதிராக, காவல் அரண்களுக்கு முன்னால் போராடுகின்றனர். இப்போ இப்படிப் போராடுகின்றவர்கள்….எதிர்காலத்தில் புலிகள் போல் அரண்களை இல்லாதாக்குவார்கள்!

எனவே இதற்கெதிரான முன்னேற்ற நடவடிக்கையே “கிராமப் படை முகாம்கள்”  கிறீஸ் மர்ம மனித பதற்றத்தை ஏற்படுத்தி கிராம மட்டத்தில் இராணுவத்தை நிலைகொள்ளச் செய்து இராணுவ நிர்வாகத்திற்குத் தேவையான புறச்சூழலை பாதுகாப்புச் செயலாளர் ஏற்படுத்தி வருகிறார்.

இதற்காக பல்லாயிரக்கணக்கில் படைகள் கிழக்கு நோக்கி நகர்த்தப்படுகின்றன! ஏற்கனவே வடக்கில் இப்போ கிழக்கில்! இந்த மகத்தான பேரினவாத மகிந்த சிந்தனைக்கு,  நிகர் வேறுண்டோ?

முட்டாள்கள் பாராங் கல்லைத் தூக்குவது தம் காலில் போடுவதற்கே!

அகிலன்

16/08/2011