25
Tue, Jun

அகிலன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

 

லலித், குகனை விடுதலை செய்!

கடத்தல்களை நிறுத்து!

புதிய ஜனநாயக மா.லெ.கட்சி, நவ சமசமாசக் கட்சி உட்பட ஏனைய பல்வேறு அமைப்புகள் இணைந்து மாபெரும் ஆர்ப்பாட்டம்!

கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இன்று (10) பி.ப 1.00 மணியளவில் லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் உட்பட கடத்தப்பட்ட அனைவரையும் விடுதலை செய்! என்ற கோசத்துடன் மக்கள் போராட்ட இயக்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இதில் மக்கள் போராட்ட இயக்கத்துடன், புதிய ஜனநாயக மா.லெ.கட்சி, நவ சமசமாசக் கட்சி உட்பட ஏனைய பல்வேறு அமைப்புக்களின் தலைவர்களும் ஆதரவாளர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய முன்னிலை சோசலிச கட்சியின் மத்திய குழு உறுப்பினர் துமிந்த நாகமுவ கருத்து தெரிவிக்கையில், லலித் யாழ்ப்பாணத்திற்கு செல்லும் போது ஒற்றுமைக்கான செய்தியை கொண்டு சென்றார் தெற்கிற்கும் வடக்கிற்கும் உறவுப்பாலம் ஒன்றை கட்டியெழுப்பும் முயற்சியில் லலித் தனது செயற்பாடுகளை முன்னெடுத்தார்.

இதை பொறுத்துக்கொள்ள முடியாத அரச படையினர் 2011.12.09ம் திகதி அவரையும் ஆதரவாளர் குகனையும் கடத்தினார்கள். லலித், குகன் கடத்தப்பட்டு இன்றுடன் இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் இந்த அரசாங்கம் அவர்களை இன்னும் விடுதலை செய்ய வில்லை. மற்றும் நாட்டின் பல பகுதிகளிலும் இவர்கள் போன்று கடத்தப்பட்ட அப்பாவி பொது மக்கள் மாற்றுக் கருத்துடையவர்களும் இன்னும் விடுதலையாகவில்லை.

அரசாங்கம் தனது காட்டுமிராண்டித்தனமான செயற்பாட்டை தொடர்ந்து செய்து வருகின்றது. இந்த நேரத்தில் அரசாங்கத்திடம் நாங்கள் கேட்டுக் கொள்வது கடத்தப்பட்ட லலித், குகன் உற்பட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். அத்துடன் அரசின் இந்த கடத்தல் நடவடிக்கையை உடன் நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்வதோடு பொதுமக்களிடம் ஒரு செய்தியை சொல்ல விரும்புகின்றேன். உங்களது கதவுளையும் அநியாயம் தட்டுமுன் அதை எதிர்த்திட முன் வாருங்கள் மக்கள் போராட்டமொன்றே அதற்கு தீர்வு அநியாயத்தை எதிர்த்து நாம் ஒன்று பட்டு போராடுவோம் என்று கூறினார்.

இன்றைய மக்கள் போராட்டத்தில் கலந்துகொண்ட முக்கிய தமிழ் ஊடகவியலாளர்கள் கருத்து தெரிவிக்கையில், புதிய ஜனநாயகக் கட்சி போன்ற முக்கிய இடதுசாரி அமைப்புகள் கலந்து கொண்ட விடயமானது, மக்கள் விரோத மகிந்த அரசிற்கு எதிரான எதிர்கால ஜக்கியபட்ட போராட்டங்களுக்கு வலுச் சேர்க்கும் ஓர் புதிய அத்தியாயத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டம் சர்வதேச செய்தி ஊடகங்களின் கவனத்தினை ஈர்த்திருந்ததும் இங்கு குறிப்பிடப்படல் வேண்டும். பிபிசி மற்றும் அல்யஜீரா செய்தியாளர்கள் செய்தி சேகரிப்பதற்க்காக வருகைதந்திருந்தனர்.

_