25
Tue, Jun

அகிலன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பிரிட்டிஸ் பிரதமரின் இலங்கை விஜயத்தின் நிகழ்ச்சி நிரலில் மகிந்த அரசு மண்டியிட்டுத்தான் போயுள்ளது. கமருன் பொதுநலவாய மாநாட்டிற்கு வந்தாரா? அல்லது தமிழ்மக்களுக்கு நீதி கேட்டு வந்தாரா? எனும் கேள்வி தேசிய-சர்வதேசத்தின்பால் பெரும் ஈர்ப்பாகியுள்ளது.

பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ள பொதுநலவாயத்தின் ஏகப்பெரும்பான்மையான பன்னாட்டு பிரதிநிதிகள் வந்து சேர்ந்துள்ளார்கள். ஆனால் பிரிட்டிஸ் பிரதமர் தனது காலனிய நாடு ஒன்றுக்குள் வந்து தன் கருமங்களை ஆற்றியது போல் நடந்துகொள்ளவும், இலங்கை அரசும், அதன் அரச இயந்திரமும் கைகட்டி, வாய் பொத்தி, நின்று கொண்டு… ஆம் நான் உங்களின் நவதாராள அடிமைதான் என்பதை, தன் அடிமைத்தன செல்நெறி அரசியலால் நிரூபித்துள்ளது.

மாநாட்டிற்கு வருபவர்கள் இலங்கையின் உள்நாட்டு விவகாரங்கள் பற்றியோ, மனித உரிமை மீறல்கள் பற்றியோ பேசமுடியாது என பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் கமலேஷ் சர்மா கருத்து தெரிவித்தார். நேற்றுவரை நிலைமை அப்படித்தான் இருந்தது. சனல் 4-ன் ஊடகவியலாளர்கள் பலர் வடக்கே சென்றபோதும், கெலும் மக்ரேயுடன் சென்ற குழுவினர் வடக்கே செல்லாமல் திருப்பி அனுப்பட்டனர். ஆனால் இதை முறியடிக்கும் வகையில் பிரிட்டிஸ் பிரதமரின் இன்றைய விடயம் மிக துணிச்சல் மிக்கதாகியுள்ளது.

இலங்கை மாநாட்டிற்கு புறப்பட்டு வரும் வழியில் இந்தியப் பிரதமரையும் சந்தித்துதான் வந்தார். சந்தித்தபின், இந்தியப் பத்திரிகையாளர்களின் கேள்ளவிகளுக்கு பதிலளிக்கையில்:

"கொழும்பில் நடைபெறும் மாநாட்டில் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் சமாதான நடவடிக்கைகளை குறித்து கருத்து தெரிவிக்கப் போகின்றேன். வடமாகாணத்திற்கும் செல்லப் போகின்றேன் என்றும் சொல்லித்தான் வந்தார். வந்து யாழ் சென்றதும் அரச படைகள் மக்கள்மேல் கட்டவிழ்த்துவிட்ட அட்டகாசங்கள் அவரின் வருகைக்கான காரணிக்கு மிகப் பெரும் வலுலைச் சேர்த்துள்ளது.

வடக்கின் மக்கள் தம்மிடமிருந்து பறிக்கப்பட்ட காணிகளை மீளப்பெற போராட்டங்களை நடாத்துகின்றார்கள். காணாமற்போன தம் சொந்த-பந்த இரத்த உறுவுகளை மீட்டுத்தரும்படி கேட்டுப் போராடுகின்றார்கள். இம்மக்களின் போராட்டங்களை முறியடிக்க அரச படைகளின் வினையாற்றல்கள், மிகக் கேவலம் மிக்க, தரம்கெட்ட வெட்க்ககேடான (காறித் துப்பும் அளவிற்கான) நாகரிகமற்ற நடவடிக்கைகளாகும். இவைகளை வெளிநாட்டு ஊடகங்கள் செய்தியாக்கி அனுப்பியுள்ளன. அவை சனல் 4-போன்ற தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகியுள்ளன.

பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் கீழும், அதன் காலனித்துவ்ததின் கீழும் இருந்து சுதந்திரம் பெற்ற நம்நாடு, மீண்டும் அந்நிய வல்லாதிக்கங்களின் சப்பாத்துக்களுக்குள் மிதிபடும் நிலை யாரால் ஏன் ஏற்படுகின்றது?. இன்றைய அரசுக்கட்டிலில் உள்ள மகிந்த-அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளே பெரும்காரணி. அதிலும் அந்நியத்திற்கு எதிராக போராடும் போர்க்குணம் கொண்ட எம்மக்களை இன-மத-மொழி ரீதியாக பிளவடைய வைத்துள்ளது.

கடந்த அரை நூற்றாண்டுகால இனவாத அரசியலின் அறுவடையை, அந்நியங்கள் தனக்கு சாதகமாக்க வழிவகுத்தலில் இவ்வரசிற்கு பெரும் பங்குண்டு. இது கொண்டு இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையானது அந்நியத்தின் பாற்பட்டு விட்டது. இதன் செயற்பாடே பிரிட்டிஸ் பிரதமருக்கு மாநாட்டை விட யாழ்-விஜயம் முக்கியமாயிற்று.

சுதந்திரமானதொரு நாடு அந்நியங்களின் காலடியில் மிதிபடுவது, அவமானப்படுவது, தன் வர்க்க நலன் கொண்ட அடிமை அரசியலை கொண்டு கோலோச்சும் மகிந்த குடுமபத்திற்கு "டோன் வெறி".!..; ஆனால் இப்போக்கு சுதந்திரத்தை, சுயநிர்ணயத்தை நேசிக்கும் மக்களுக்கு, தேசபக்த-முற்போக்கு சக்திகளுக்கு விடும் சவால் ஆகும்.