25
Tue, Jun

அகிலன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

வட்டுக்கோட்டைக்கு போற வழி கேட்க, துட்டுக்கு இரண்டு கொட்டைப்பாக்கு எனச் சொன்ன பாக்கு வியாபாரி போல, அரசியல் தீர்வுபற்றி கேட்டால், அபிவிருத்தியைப் பார் என்கின்ற சராசரி வழிப்போக்கு வியாபாரி போல் ஆகிவிடுகின்றார் மகிந்தா.

நவநீதம்பிள்ளை அம்மையாரைச் சந்தித்தபோதும், நீங்கள் சென்றவிடம் எல்லாம் சுதந்திரமாகத்தானே நடத்தப்பட்டீர்கள். எங்கள் அபிவிருத்திகள் எப்படியுள்ளது எனக் கேட்டாராம்.

"எனக்கான சுதந்திரத்திற்கு குறைவில்லை. ஆனால் தமிழ்மக்கள் அரசியல் சுதந்திரமற்று வாழ்கின்றார்கள். அதற்குள்ளால் உங்கள் அபிவிருத்திகளை பெரிதாக கண்டுகொள்வதாக நான் உணரவில்லை" எனச் சொல்லிய போது, இன்னும் எம் அபிவிருத்திகள் தொடரும் என்றாராம்.

தொடர்ந்தும் அரசியல் தீர்வுபற்றி அம்மையார் கேட்டிருந்தால், கவுண்டமணியின் வாழைப்பழக் கேள்விக்கு செந்திலின் பதில் போல்தான் மகிந்தாவின் பதில்களும் இருந்திருக்கும்… அம்மையார் மகிந்தா போன்ற எத்தனை செந்தில்கள்களை கண்டிருப்பார். அதனால் அரசியல் தீர்வுபற்றி தொடரவில்லை. ஆனால் பத்திரிகையாளர் மாநாட்டில் அரசியல் தீர்வுபற்றிய அரசின் திட்டமிட்ட அக்கறையின்மையை சொல்லியே சென்றார்.

மேலும் மகிந்த அபிவிருத்தி பற்றி குறிப்பிடுகையில், 2009-ற்குப் பின்னான வட-கிழக்கிற்கான அபிவிருத்திகள் யாவும் அரச நிதிகளில் இருந்து ஓதுக்கப்பட்டு செய்யப்படவில்லை. இவையெல்லாம் அரசுசாரா உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களால் (ஐக்கிய நாடுகள் சபை, ஏனைய மனிதாபிமான அமைப்புகள்) செய்யப்பட்டதென்ற உண்மையையும் சொல்லித்தான் சென்றுள்ளார்.

தவிரவும் தேர்தல் பிரசாரத்திற்காக யாழ்-சென்ற ஜனாதிபதி துரையப்பா விளையாட்டரங்கில் பேசும்போது அரசியல் தீர்வுபற்றி தன்னிடம் அதுபற்றியதோர் "மகிந்த சிந்தனைத்துளி" கூட இல்லையெனவும், தானும் சராசரி ஓட்டை ஒடிசல் அரசியல் வியாபாரிதானென நிறுவியுள்ளார்.

ஆனால் இதற்கு மேலால் தன்னை தமிழ்மக்கள் அக்கறையாளனாக-சேவகனாக காட்டியுள்ளார். மாவை சேனாதிராசா யாழ்-மண்ணின் மைந்தனாம், விக்னேஸ்வரன் தென்னிலங்கை ஜீவியாம். பாருங்கள் என் அரச வேட்பாளர்கள் எல்லாம் யாழ்-மண்ணின் வித்துக்களும் விருட்சங்களும் எனச் பறைசாற்றி, தான் சராசரிப் "பேரினவாதி மட்டுமல்ல, பிரதேசவாதியும், அசல் தமிழ்த் தேசியவாதி" எனவும் காடடியுள்ளார்.

கூட்டமைப்பு "சுயநிர்ணயம்" பற்றி தேர்தல் விஞ்ஞாபனத்தில் சொல்லியிருக்க கூடாதென்கின்றார். அதுதான் பிரபாகரன் விட்டுச்சென்ற தமிழ் ஈழமாம்.

சுயநிர்ணயம் என்றால் (உடனே சமன் போட்டு) அது "பிரிவினைதானெ" இட்டுக்கட்டி உலகில் அரசியல் செய்யும் அரசியலாளர்கள் நம் இலங்கையில் தான் உள்ளார்கள். இது கடந்த அரை நூற்றாண்டிற்கு மேற்பட்ட இனவாத அரசியலின் பெறுபேறாகும்.

"சுயநிர்ணயம் என்பது ஓர் தேசிய இனம் தன் தலைவிதியை தானே நிர்ணயிப்பதற்கு, (சமஸ்டி-பிரதேச சுயாட்சி- இதுபோன்ற இன்னோரன்ன) அதற்கு சுயாதீன உரிமையுண்டு. இதில் தலையிடும் உரிமை யாருக்கும் கிடையாது. இது ஒவ்வொரு தேசிய இனங்களின் பிறப்புரிமை. இதில் பிரிவினை என்பது, விவாகரத்துச் சட்டம் எனும் ஒன்றிருப்பதால், எல்லா குடும்பங்களும் பிரிந்து போவதென்பதல்ல" என்பதாகும்.

இதை புரிந்துதான்.. கூட்டமைப்பின் விக்கினேஸ்வரனும் இது "கணவன்-மனைவி போன்ற உள்நாட்டுப் பிரச்சினை இதில் அயலவர்கள்… குறிப்பாக தமிழக அரசியல்வாதிகள் தலையிடத் தேவையில்லையென சொல்கின்றாரோ?

மேலும் மகிந்த அரசிற்கும், கூட்டமைப்பிற்கும் சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டின் உள்ளார்ந்த அர்த்தங்கள் சரிவரத் தெரியுமா? புரியுமா? இவர்கள் தங்கள் வாக்குச் சேகரிப்பிற்பாக யானை பார்த்த குருடர்கள் போல் தாங்கள் தடவிப் பார்த்ததை சுயநிர்ணய அரசியல் ஆக்குகின்றார்கள்.

சுயநிர்ணயத்தின் பால் இவர்கள் அரசியல் செய்ய விரும்பின்… முதலில் மகிந்த அரசு பேரினவாத அகந்தையில் இருந்து விடுபட்டு, சிறுபான்மைத் தேசிய இனங்களுக்கு தங்கள் தலைவிதியை தாங்களே தீர்மானிக்கும் உரிமை உள்ளது என்பதை ஏற்குமா? இதனடிப்படையில் சிறுபான்மை தேசிய இனங்களை தேசிய இனங்களாக அங்கீகரிக்குமா? இதுகொண்டு தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வுகளைக் காண முதலில் குறைந்தபட்ச தீர்வுகளையாவது முன்வைக்குமா?

மறுபுறத்தில் சிங்கக் கொடியை தூக்கும் தமிழர் தரப்பும் இவைகளை உள்வாங்கி, சகல இனவாதங்களையும் கடந்து சிங்கள மக்களுக்கு, சுயநிர்ணயத்தின் உண்மைத்தன்மையை சொல்ல முற்படுவார்களா? தமிழ்பேசும் மக்கள் மத்தியில் உள்ள மலையக, முஸ்லிம் மக்களை தேசிய இனங்களாக அங்கீகரிப்பார்களா?

இவ்விரு தரப்பும் இவைகளைச் செய்வதற்கான நிலைகளில் உள்ளார்களா? இல்லையென்பதே எதார்த்தம். இருதரப்பின் இப்பரப்புரைகள் வெறும் தேர்தல் வாக்கு பறிப்புகளுக்கான உத்திகள்தான்.

இன்றைய இலங்கையில் சகல இனவாதங்களையும் வெறுக்கின்ற, அதை வெறுத்து கடந்து செல்வதற்காக ஏகப்பெரும்பாண்மையான சகல இனமக்களும், இதைப்பிரதிபலிக்கும் சக்திகளும் உள்ளன. இவைகளுக்கு ஊடான பயணங்களின் மூலமே சுயநிர்ணயத்தின் சரியான திசை நோக்கி செல்லமுடியும்.