25
Tue, Jun

அகிலன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

"ஐக்கிய நாடுகள் சபையை நாட்டு மக்கள் பக்கசார்பானதாகவே கருதுகின்றனர். உங்களுடைய அறிக்கை கூட முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டதொன்றென மக்கள் கருதுகின்றனர்" என மகிந்த ராஜபக்ச தன்னைச் சந்தித்த நவநீதம்பிள்ளையிடம் சொல்லியுள்ளார்.

மேலும் "ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை கடமை தவறி செயற்பட்டு வருவதாகவும் சர்வதேச அமைப்பு ஒன்றின் உயர் அதிகாரி என்ற ரீதியில் தமது அதிகாரங்களை மீறிச் செயற்பட்டுள்ளதாகவும் அரசதரப்பால் கர்ன-கடுரத் தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது."

உண்மைதான். நவநீதம்பிள்ளை அம்மையார் "திறந்த மனதுடன்" இலங்கை செல்லவில்லை. முன்கூட்டிய தீர்மானங்களுடன்தான் இலங்கை சென்றடைந்தார். அம்மா மாத்திரம் அல்ல, ஐயாவும்தான்.

அம்மா நாட்டிற்குள் காலடி பதிக்க, ஐயாவின் காலடியும் வெளியேதான் பதிந்தது. அத்துடன் அரச கூட்டாளியான பொதுபலசேனா போன்றதுகளின் எதிர்ப்பு நடவடிக்கைகளும், மகிந்த மந்தி(ரி)கள் எனப்பட்டதுகளின் இவவெறிக் கோமாளித்தனங்களும் தற்செயலானதின் பாற்பட்டவைகள் அல்ல.

ஐக்கிய நாடுகள் சபை, மகிந்த அரசு எனும் இரு அதிகார மையங்களுக்கு இடையில் கறார் கொண்டு நடைபெறும் பனிப்போருக்குள் இருக்கும் சாரம்தான் என்ன? "நீ இப்படித்தான் என்றால், (அமெரிக்க-ஐரோப்பியம், அதன் எடுப்பார் கைப்பிள்ளையான ஐக்கியநாடுகள் சபையை ஒரு பொருட்டாக கணிக்கவில்லை என்றால்) நாங்களும் இப்படித்தானெ சொல்லி சென்றுள்ளார் நவநீதம்பிள்ளை அம்மையார்.

அம்மையார் தன் ஒருவாரகால சுற்றுலாவிற்குள்ளால், திக்கற்று நின்ற எம்மக்களின் துன்ப-துயர் கொண்ட கண்ணீர் மல்களையெல்லாம் துடைத்துக்காட்டி, தன்னையோர் தாயாகவும், காவல் தெய்வமாகவும் நிறுவிச் சென்றுள்ளார். முள்ளிவாய்க்காலில் படுகொலைகளுக்கு கூட மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தவும் முற்பட்டாராம்.

அம்மையார் தனக்குக் கிடைத்த சந்தர்ப்பததை (தமிழமக்களின் திக்கற்ற அரசியல்-அனுதாப வாழ்வை) அமெரிக்க-ஐரோப்பியத்திற்கும், ஐக்கிய நாடுகள் சபைக்கும் சார்பாக சரியாகத்தான் பயன்படுத்தியிருக்கின்றார். இந்நிறுவனங்கள் எல்லாம் தமிழ் மக்களை உய்விக்க வந்த காவல் தெய்வங்கள் எனக் காட்டி வழிபடுங்கள் எனச் சொல்லிச் சென்றுள்ளார்.

உண்மையில் நவநீதம்பிள்ளை அம்மையாரின் வரவு மகிந்தாவின் தேசிய-சர்வதேசிய எதிராளிகளுக்கு (இலங்கை ஏதேச்சாதிகார நாடாக மாறிவருவதாக சொன்னதன் மூலம்) பெரு விருந்தொன்றைப் படைத்திருக்கின்றது.

அம்மையாரின் வருகையை தமிழர் தரபபின் ஒரு வார தேர்தல்-பிரச்சார காலமாகவும் கொள்ளலாம். இத்ததரப்பு எம்மக்களுக்கு இவ் "வெளவால் வருகைக்கூடாக" எல்லாம் சரியாகிவிடும் எனும் பெரு நம்பிக்கையையும் கொள்ள வைக்கின்றது. ஆனால் நீதவான்கள், அப்புக்காத்துக்கள், பிரக்கிராசிகளைக் கொண்ட படித்த மேட்டுக்குடிக் கூட்டத்திற்கு அம்மையாரும் ஐக்கியநாடுகள் சபையும் என்ன செய்தது, செய்கின்றது, செய்யபபோகின்றது எனும் முக்காலத்தையும் உணராதவர்களா?

மிதவாதம் என்பது சுயமின்றிய அன்னியத்தின் பாற்பட்து. மக்கள் நலன் சார்ந்து போராடும் இயலாமை இன்றி, அதுவுள்ளதாக காட்டி, மக்களை ஏமாற்றும் பாங்கின் பெருவெட்டுக்கூடாக தன்நலனை சாதிக்கவல்லது. இவ்வோட்டம் கொண்ட மிதவாதத் தமிழ்த் தேசியத்தின் கடந்தகால அரசியற் செயற்பாட்டை பட்டறிவிற்கு ஊடாக காண்கின்றோம் அல்லவா?

தற்போதைய தமிழர் தரப்பிடம் இதுவனைத்தும் இல்லாததின் இயலாமையாலேயே, எம்மக்கள் அரசியல் வெற்றிடத்தில் திக்கற்றவர்களாக உள்ளார்கள். இத்திக்கற்ற மக்களின் துன்ப-துயர் கொண்ட வாழ்வை, அதன் ஸ்திரமற்ற அரசியல் தன்மையை நம்நாட்டிற்குள் வரும் அந்நிய "வெளவால்கள்" தமக்குச் சாதகமாக பாவித்து தெய்வங்கள் ஆகிவிடுகின்றன.

"வெளவால்கள்" பறந்துவர மரங்களில் பழங்களைப் பழுக்க வைத்தவர் மகிந்த ராஜபக்சதான். பழுக்கவைத்து வரழைத்துவிட்டு, வருபவர்களை பக்கசார்பானவர்கள் எங்களுக்கு ஆனவர்கள் இல்லை என்றால், அவர்கள் தங்கள் நலன்களுக்கு அல்லாமல், எம்மக்களின் நலனுகளுக்காகத்தான் வருகின்றார்களோ?

நாட்டில் மக்களுக்கான சகலதையும் அந்நியத்தின் வெளவால்களுக்கு ஆனதாக தாரைவார்த்து விட்டு, அதன்பாற்பட்டு வருபவர்களை எல்லாம் பக்கசார்பானவர்கள், கடமை தவறியவர்கள் என மக்கள் கருதுகின்றார்கள் என மகிந்தா மக்களையும் துணைக்கு அழைக்கின்றார்.

மக்கள் சொல்கின்றார்கள் எனும் தாரக மந்திரத்தை, தன் கறை படிந்த அரசியல் துரோக குற்றவாளிப் பாத்திரத்திற்கு அனுகூலமான ஆராதனைப் பூசையாக்கப் பார்க்கின்றார்.

ஆனால் எம்நாட்டு மக்கள் இவர்கள் எல்லோரையும், இல்லாதாக்குவதற்கான வேள்விகளைத்தான் செய்யப்போகின்றார்கள். தற்போது அதற்கான யாகங்களைத்தான் செய்து கொண்டிருக்கின்றார்கள்.