25
Tue, Jun

அகிலன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times



அண்மையில் கிழக்கு மாகாண தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் உரையாற்றிய முஸ்லிம்காங்கிரஸ் தலைவர்  ஹக்கீம் "காவியுடைப் பயங்கரவாதம் ஒழிக்கப்படவில்லை. இது விடயத்தில் ஜனாதிபதி கவனம் செலுத்தவேண்டும்" என பேசியுள்ளளார்.

இதை விட இன்னொரு கூட்டத்திலும் 'குக்கிராமங்களில் கூட ஒரு வீட்டுக்குள் அருகிலுள்ளவர்கள் ஒன்று கூடி கூட்டாக தொழுகை நடாத்தக் கூட அஞ்சுகின்றகாலமிது. மதவெறியர்கள் அதற்கு முட்டுக்கட்டை போடுகின்றார்கள். இத்தகைய கேவலமான இழிசெயலை நாட்டில் பாதுகாப்பிற்குப் பொறுப்பான ஆட்சித் தலைவரும், பாதுகாப்புச் செயலாளரும் வெறுமனே பார்த்துக்கொண்டிருப்பதால் மக்களின் மனவேதனை மேலும் அதிகரிக்கின்றது. மதவழிபாட்டுச் சுதந்திரத்தை கேள்விக்குள்ளாக்கும் கேவலமான செயல்களை சுட்டிக்காட்டப்போனால் நாங்கள் நையாண்டி செய்யப்படுகின்றோம்' எனவும் பேசியுள்ளார்.


பேசிய 24-மணி நேரத்திற்குள் பயங்கொண்டு பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார். ஏன் இந்த மன்னிப்புக் கோரல்? இதன்மூலம் தன்மானத்தை மட்டுமல்ல, ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களின் கௌரவத்தையும் அல்லவா மகிந்த காலடிக்குள் மிதிபட வைக்கின்றார்.


'காவியுடைப் பயங்கரவாதம் ஒழிக்கப்படவில்லை'...இதில் என்ன தவறு? தவறென்றால் முன்யோசனையுடன் அல்லவா பேசியிருக்க வேண்டும்! வாக்கு வங்கி குவிப்பும் வேண்டும், மகிந்தாவின் அரவணைப்பும் வேண்டுமென்றால்; இது கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை எனும் அரசியல்தான்! இதற்கு சொல்லும் (சாஸ்டாங்க நமஸ்கார) காரணங்கள் முஸ்லிம் மக்களின் அபிலாசைகளுக்கு விரோதமானவை.


'பௌத்தர்களுடனும் ஏனைய சமயத்தவர்களுடனும் பூரண ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்னும் முஸ்லிம்களின் விருப்பம் பற்றி நான் நன்கு அறிவேன். இதுவே ஸ்ரீலங்கா தேசத்தில் முஸ்லிம்கள் முழுமையாக இணைந்துகொள்ளவுள்ள ஒரேபாதையாகும்''. உண்மைதான், இது முஸ்லிம் மக்களின் அபிலாசை மாத்திரமல்ல, ஏனைய  சிறுபான்மை இன தமிழ் மக்களின் அபிலாசையும் அதுவே! ஆனால் இந்நோக்கை நிறைவேற்றும் பெரும் பொறுப்பு இவ்வரசிற்குத்தான் உண்டு. ஆனால் ஏனைய சிறுபான்மை இனங்கள் எம்நாட்டின் மக்களென்ற சிந்தனைச் செயற்பாடு இவ்வரசிற்கு உண்டா?


'முஸ்லிம்களின் மனத்தாங்கல்கள் பற்றி நான் குறிப்பிட்டது குறித்த ஒரு இடத்தில் காணப்பட்ட உள்ளூர் விவகாரத்தோடு மட்டுப்படுத்திய பிரச்சினை பற்றியதாகும். ஆனால் துரதிஷ்டவசமாக குறித்த பின்னணியிலிருந்து விலகிய எனது சொற்பிரயோகம்'' எனும் போது.... ஏனிந்த மன்னிப்பு?


உங்களுக்கு எது தேவை மக்களா? அவர்களின் மனத்தாங்கல்களா? அபிலாசைகளா? உங்கள் தேவை அதுவல்ல மந்திரிப்பதவிகளுடன் கூடிய சொர்க்கபுரி அரசியல்....இதற்கு ஆபத்தெனில் உங்கள் வர்க்கம் மக்களுக்கு எதிராக எதையும் செய்யும்! இதை கருணாநிதியின் அரசியல் (நடிப்புச் சுதேசிகள்) றேஞ்றென்றும் சொல்லாம்?