25
Tue, Jun

இரயாகரன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

அனைவருக்கும் இலவசக் கல்வியும், அனைவருக்குமான பல்கலைக்கழகக் கல்வியும் என்ற அடிப்படை

உரிமையே, மக்கள் நலன் சார்ந்ததாக இருக்க முடியும். இதற்குப் பதில் தனியார் கல்விமுறை, அனைவருக்கும் கல்வியைத் தரமுடியுமா? 

பணம் கொடுத்து கல்வியைக் கற்கக் கோருகின்ற கல்விமுறையானது, எப்படி அனைவருக்கும் கல்வியைத் தரமுடியும்? இங்கு பணம் கல்வியைத் தீர்மானிக்கும் போது, பணம் இல்லாதவன் கல்வியைப் பெற முடியாதாகிவிடுகின்றது. இந்த வகையில் வர்க்கரீதியாகவும், சாதிரீதியாகவும், ஆணாதிக்கரீதியாகவும், பல்வேறு சமூக ஒடுக்குமுறைக்கு உள்ளாகுவோரில் பெரும்பகுதி, பணமின்றிய நிலவரத்தால் கல்வி கற்பதைக் கைவிடுவார்கள். சமூகத்தில் நிலவும் ஒடுக்குமுறை மூலம், சமூகத்தில் ஏதோ ஒரு வகையில் இரண்டாந்தரப் பிரஜையாக வாழ்பவர்களுக்கு கிடைக்கும் இலவசக் கல்வியானது, தனியார் கல்விமுறையால் வேட்டு வைக்கப்படும் என்பதே உண்மை. 

 இந்தத் தனியார் கல்வி யாருடைய கொள்கையாக இருக்கின்றது? கல்வியை விற்று செல்வத்தைக் குவிக்க விரும்புகின்ற, நவதாராளவாதக் கும்பல்களின் கொள்கையே தனியார் கல்விமுறையாகும். இந்தக் கல்வி வியாபாரத்தை முன்னெடுப்பதற்கு ஏற்பதான அரசியலை  நவதாராளவாத கட்சிகள் முன்னெடுக்கின்றது. இந்த நவதாராளவாத கல்வி வியாபாரத்துக்கு தரகுவேலை பார்க்கின்றவர்களாக அரசு இருக்க, இதை நியாயப்படுத்;துகின்றவர்கள் அவர்களுக்கு குடை பிடிக்கின்றவர்களாக இருக்கின்றனர். 

இதன் மூலம் பணம் உள்ளவனுக்கும், சமூகரீதியாக பிறரை ஒடுக்கும் தரப்புக்குமான கல்விக் கொள்கை முன்வைக்கப்படுகின்றது. பணம் சம்பாதிக்கும் இந்த தனியார் கல்விக் கொள்கையிலான மோசடியை அமுல் செய்ய, இலவசக் கல்வியும் தொடர்வது நடக்கின்றது.      

உதாரணமாக இலவச மருத்துவ முறைமைக்குப் பதிலான தனியார் மருத்துவமானது, பணம் இல்லாத ஒடுக்கப்பட்ட வர்க்கத்தை - சமூகத்தையும் உயிருடன் கொன்று விடுகின்றது. பணமின்றி மருத்துவத்தை பெறமுடியாது. நோயில் இருந்து தங்கள் உயிரை பாதுகாக்கும் போராட்டமானது, கடனாளிகளாக மாற்றி நடைபிணமாக்குகின்றது. பணமில்லாதவன், உயிர் வாழ தகுதி அற்றவன். இது தான் தனியார் மருத்துவக் கொள்கை. 

இந்தக் கொலைகார மருத்துவ முறையை அமுல்படுத்த, தனியார் மருத்துவத்தை படிப்படியாக கொண்டு வருகின்ற நரித்தனமே, "இலவச" மருத்துவத்தின் இன்றைய எச்சங்களாக தொடருகின்றது. இலவச மருத்துவம் என்பது முழுமையானதல்ல, அதில் தனியார் இணைந்;ததாகவும், இலவச மருத்துவத்தை காலம் தாழ்த்திய மருத்துவமாகவும் மாற்றி, தனியார் மருத்துவத்தை நாட வைக்கின்றது. தனியார் மயமாக்கும் அரசின் கொள்கை இதுதான்.

இதே அடிப்படையில் தான் இலவசக் கல்வியை அரசு கையாளுகின்றது. தனியார் கல்வியை நாடும் வண்ணம் பாடசாலைகளை தரப்படுத்தியும், மாணவர்களைப் போட்டிப் பரீட்சைகளில் போட்டி போடவைக்கின்றது. திறமையான மாணவர்களுக்கு தரமான பாடசாலையும், தரமான கல்வியை பெற பணமும் என்ற கொள்கை முன்னெடுக்கப்படுகின்றது. இந்த வகையில் பணம் கொடுத்து கல்வியை பெறுதல், நாடு தளுவிய அளவில் முன்னெடுக்கப்படுகின்றது. சுயமொழிக் கல்வியைத் தரமற்றதாக மாற்றி, பிற மொழிக் கல்வியை தரமானதாக மாற்றி, பணத்தைக் கொடுத்து படிக்கக் கோருகின்றது. இதன் பின் தரமான கல்விக்கு ஏற்ற வசதிகள் என்று, பல்வேறு மோசடிகள் மூலம் கல்வி விற்கப்படுகின்றது. பல்கலைக்கழக தகுதி பெற்ற மாணவர்களுக்கு "இடமின்மைக் கொள்கையை" அமுல் செய்து, அரசே கல்வியை மறுக்கின்றது. பணத்தைக்  கொடுத்து, தனியார் கல்வி மூலம் கற்கக் கோருகின்றது. 

இந்தக் கொள்ளைக்கார தனியார் கல்விமுறைக்கு எதிராக மக்கள் திரும்பாதிருக்க, தனியார் முறையில் ஒரு பகுதிக்கு அரசு மானியம் வழங்கி, அதை வர்க்க ரீதியாகவும், சமூக ரீதியாக பின்தங்கிய பிரிவுக்கு வழங்குவதன் மூலம், தனியார் கொள்கைக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்கின்றது. 

மக்களுக்கு எதிரான மோசடிகள் மூலம், தனியார் செல்வத்தைக் குவிக்கும் வண்ணம், அனைத்தையும் விற்பனை பொருளாக்குகின்றது. 

உழைப்பையும், உழைப்பிலான வரிப்பணத்தையும் மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு பயன்படுத்துவதற்குப் பதில், சர்வதேச நவதாராளவாத கந்துவட்டி கொள்ளைக்கார நிதிக் கும்பலுக்கு வாரி வழங்குகின்றது. கொள்ளையிட வரும் மூலதனத்துக்கு வரியை வாரி வழங்குகின்றனர். இதற்காக மக்களின் அடிப்படை தேவைகளை பறித்துவிடுவதன் மூலம், எழுகின்ற போராட்டங்களை ஒடுக்க, எஞ்சிய வரிப்பணம் பயன்படுத்தப்படுகின்றது. 

வரிப்பணமானது வட்டியாகவும், உழைப்பை சுரண்டி கொழுக்கும் நவதாராளவாத முதலாளிகளுக்கும், மக்களை ஒடுக்கும் அரச இயந்திரத்தை பலப்படுத்துவதற்குமானதாக மாறி இருக்கின்றது. இலவச மருத்துவம், கல்வி, குடிநீர், விவசாயத்துக்கான நீர்வளங்களை பாதுகாத்தலும் வழங்கலும், பொதுப் போக்குவரத்து.. என்று இருந்த சமூக அடிப்படைகளை கைவிட்டு, அதை தனியார் மயமாக்கி விற்பனை சரக்காக்கி வருகின்றது.             

இந்த நவதாராளவாத கொள்கை மூலம், மக்களை கொள்ளையடிக்கும் செயற்திட்டமே தனியார் கல்வி முறையாகும். இன்று இலங்கையில் இலவசக் கல்விக்கான போராட்டம், இந்த நவதாராளவாத கொள்ளைக்கார திட்டத்துக்கு எதிரானதும் - மக்களின் அடிப்படை நலனை பாதுகாக்கின்றதுமாகும். போராடுகின்றவர்களுடன் இணைந்து பயணிப்பதன் மூலம், இலவசக் கல்வியை பாதுகாக்க முடியும்.