25
Tue, Jun

இரயாகரன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

காலங்களை முன் வைத்து ஆரூடம் கூறுகின்ற சாத்திரி போல், முகமாற்றம் மூலம் நல்லாட்சி கிடைக்கும் என்று "ஜனநாயகவாதிகள்" கூற, மக்கள் முகமாற்றத்துக்கு வாக்களித்தனர். இப்படி "நல்லாட்சிக்கு" வாக்களித்தவர்கள், அதை அரசிடம் எதிர்பார்க்கின்றவர்கள், தங்கள் தங்கள் விருப்பங்கள், தேவைகள் பிரச்சனைகளுக் கூடாகவே அணுகுகின்றனர். தங்கள் அனுபவ ரீதியான முடிவுகளில் இருந்தும், ஓப்பீட்டின் அடிப்படையிலும் "நல்லாட்சி"யை ஆதரிப்பதும், விமர்சிப்பதும் நடக்கின்றது. இப்படி அனுபவாதமும், ஓப்பீடும் தருகின்ற முடிவுகள் சரியானதா?.

உதாரணமாக "நல்லாட்சிக்கு" முன்பு வடகிழக்கில் நிலவிய இராணுவ கெடுபிடிகள் அகன்றது முதல் மக்கள் தங்கள் வாழ்விடங்களில் கணிசமானதை மீளப் பெற்றுள்ள இன்றைய நிலையில், இதையே "நல்லாட்சியாக", தன் சொந்த அனுபரீதியானதும், ஓப்பீட்டுடனும் புரிந்து கொள்கின்ற தன்மை இன்று எல்லாத் துறையிலும் காணமுடிகின்றது. வடகிழக்கு மக்களின் மீது "நல்லாட்சி" அரசு கொண்டு இருக்கும் அக்கறையின் பொது வெளிப்பாடா இது என்று கேட்டால், பலருக்கு உடனடியாக தடுமாற்றம் ஏற்படுகின்றது. இங்கு அனுபவமும், ஓப்பீடும் தான் "நல்லாட்சி" பற்றிய அரசியல் விளக்கமாகி விடுகின்றது.

ஓப்பீட்டு ரீதியான அனுபவாதம் மூலம் "நல்லாட்சி" பற்றிய மதிப்பீட்டை பொது மக்கள் பெறுவதற்கு அரசு கையாண்டுள்ள மாற்றங்கள் "மக்கள்" நலன் சார்ந்த ஒரு அரசால் எடுக்கப்பட்ட முடிவா எனின் இல்லை. மாறாக அரசின் பொதுக் கொள்கை சார்ந்த முடிவில் இருந்தே இந்த மாற்றம் நடக்கின்றது. இந்த கொள்கை என்பது இலங்கை ஓட்டுமொத்த சமூக பொருளாதாரம் பற்றியது. எதிர்காலத்தில் எப்படிப்பட்ட சமூக பொருளாதாரத்தை அரசு உருவாக்கவுள்ளதோ, அதன் தேவைகளின் ஒன்றாக வடகிழக்கின் கெடுபிடிகளை தளர்த்தியதாகும். இப்படித்தான் அரசின் அனைத்துக் கொள்கைகளும் முடிவுகளும் முன்னெடுக்கப்படுகின்றது.

இங்கு அரசின் கொள்கை உழைக்கும் மக்கள் நலன் சார்ந்த சமூக பொருளாதாரக் கொள்கையா அல்லது தனியார் நலன் சார்ந்த சமூக பொருளதாரக் கொள்கையா என்ற கேள்வியை எமது அனுபவாத குறுகிய சிந்தனையைக் கடந்து கேட்டாக வேண்டும். இந்த அரசு முந்தைய அரசை விட மீகத் தீவிரமாக நவதாராளமயத்தை முன்னெடுக்கின்ற அதன் கொள்கை காரணமாக அதை நடைமுறைப்படுத்த ஓப்பீட்டளவில் சில மாற்றங்களைச் செய்கின்றது. இதன் அங்கமே வடகிழக்கில் நடந்து வரும் மாற்றம். இதைத்தான் "நல்லாட்சியின்" இலட்சணமாக புரிந்துகொள்கின்ற அனுபவவாதிகள் முதல் ஓப்பீட்டுவாதிகள் வரை அரசை பற்றிய முடிவை எடுக்கும் அதேநேரம், அரசு இதையே "நல்லாட்சி" என்று காட்டவும் செய்கின்றது.

அரசின் கொள்கை ரீதியான "நல்லாட்சி" என்ன? ஓப்பீட்டு ரீதியான மாற்றத்தைத் தருவதல்ல. மாறாக தனியார் மயத்தை வீரியமாக்குவது. தனியார் மயத்தை வீரியமாக்குவது என்பது, மக்களிடமிருந்து தனிவுடமையை பறித்தெடுத்து குவிப்பது. அதாவது சிறு சொத்துடமையாக மக்களிடம் இருக்கின்ற தனிச் சொத்துடமையையும், அதைப் பாதுகாக்கின்ற சட்டரீதியான உரிமைகளையும், உழைப்பு மீதான மனித உரிமைகளையும் பறித்துவிடுவதன் மூலம், தனியார் மயத்தை வீரியமடையச் செய்வதாகும். இதை நாங்கள் கொண்டுள்ள அரசியல் கண்ணோட்டத்தில் இருந்து கூறவில்லை, மாறாக இதைத்தான் அரசு 2016 வரவு செலவு திட்டம் மூலம் "நல்லாட்சியாக" பிரகடனம் செய்திருக்கின்றது.

"நல்லாட்சி" பற்றிய அரசின் கொள்கைப் பிரகடனங்களும் நடைமுறைகளும்

அரசின் கொள்கை ரீதியான நடைமுறைகள் தான் வரவு செலவு திட்டம். 2016க்கான வரவு செலவு திட்டத்தை பாராளுமன்றத்தில் முன்வைத்த அரசு; “இருட்டினைச் சபிப்பதனை விடுத்து ஒரு மெழுகுவர்த்தியினை ஒளியேற்றி இருட்டினை விலக்கி விடுவோம்” என்று பிரகடனம் செய்திருக்கின்றது. இங்கு எம்முன் மூன்று கேள்வி எழுகின்றது.

1. இங்கு இருட்டாக அரசு கருதுவது எதை?

2. ஒளியாக அரசு எதை முன்வைக்கின்றது?

3. மெழுகுவர்த்தியான அரச எதைப் பயன்படுத்துகின்றது?

"ஒளியை" ஏற்றவும், "இருண்ட" தடைகளை அகற்றவும், 2016 வரவு செலவு திட்டம் புதிதாக 172 புதிய பொலிஸ் நிலையங்களை அமைக்க வேண்டும் என்கின்றது. அதாவது இன்று இருக்கின்ற "428 பொலிஸ் நிலையங்களுக்குப் பதில் 600 பொலிஸ் நிலையங்களாக அதிகரிப்பதற்கு மேலதிகமாக ரூபா 1,000 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்படும்" என்று அறிவித்து இருக்கின்றது இந்த "நல்லாட்சி" அரசு.

இங்கு மெழுகுவர்த்தியாக அரசு கருதுவது (172 புதிய) பொலிஸ் நிலையங்களை. வடகிழக்கை எடுத்தால், ஒப்பீட்டளவில் முந்தைய கெடுபிடியை அகற்றிய "நல்லாட்சி", 2016 க்குள் புதிதாக நாடு தழுவியளவில் புதிய பொலிஸ் நிலையங்களை அமைக்கவுள்ளதுடன், பொலிஸ் கெடுபிடி ஆட்சியை "நல்லாட்சியாக" மாற்றவுள்ளது. இதுவொரு உண்மை.

நாட்டில் யுத்தம் முடிந்துவிட்டது. எதற்கு இவ்வளவு பொலிஸ் நிலையங்கள் அமைக்கவுள்ளனர்?. "நல்லாட்சி" முன்வைத்துள்ள தனியார் மயத்துக்கு எதிரான மக்கள் வாழ்வு சார்ந்த போராட்டங்களை ஒடுக்க பொலிஸ் நிலையங்களை இந்த வருடத்துக்குள் 25 சதவீதத்தால் அதிகரிக்கவுள்ளது. ஆக "நல்லாட்சி" பொலிசைக் கொண்டு மக்களை ஒடுக்குவதுதான். யுத்தம் நடந்த காலத்தில் கூட இந்தளவுக்கு பொலிஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டது கிடையாது என்ற உண்மையை ஒப்பிட்டு இன்று "நல்லாட்சியை" புரிந்து கொள்வது அவசியம்.

இங்கு இருட்டாக இருப்பது முந்தைய மகிந்த அரசல்ல. அதனால் கொண்டுவர முடியாது போன தீவிர தனியார் மயமாக்கல் முறைமைதான். இங்கு ஒளியாக இருப்பது அரசு கட்டுப்பாடற்ற சுதந்திரமான தனியார்மயம்.

இந்த வகையில் 2016 க்கான வரவு செலவு திட்ட உரை அமைகின்றது. அரசின் எதிர்கால கொள்கைகள் நடைமுறைகள் தொடர்பான விளக்கங்களை முன்வைத்திருக்கின்றது. அதற்கான புதிய சட்டங்களும், நிதி ஒதுக்கீடுகள் பற்றி குறிப்பிட்டு இருக்கின்றது. இதைத் தாண்டி அரசின் "நல்லாட்சியை"யோ, அதன் சமூக பொருளாதார அரசியலையோ விளக்கி விட முடியாது. இந்த சமூக பொருளாதார திட்டத்தை எதிர்க்கட்சி தலைவரும், தமிழினவாத தலைவர்களும் ஏற்றுக்கொண்டு இருப்பதால் இனரீதியாக சிந்திக்கின்றவர்கள் கூட இதையே தங்கள் கொள்கையாக்கி விடுகின்றனர் என்பது மற்றொரு உண்மை.

தொடரும்