25
Tue, Jun

இரயாகரன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஐ.நா பரிந்துரைகளை "தமிழ்" தேசியவாதிகள் ஏற்றுக்கொண்டு கருத்துக்களை முன்வைக்கின்றனர். அதேநேரம் கூட்டமைப்பு மூலம் அதிகாரம் கிடைக்காதவர்கள், தங்கள் முரண்பாட்டை அரசியலாக்க சர்வதேச விசாரணை என்று ஒற்றைக்காலில் நின்று கூவுகின்றனர். இதற்கு அப்பால் புலிகளின் யுத்தக்குற்றம் குறித்தான பகுதி ஐ.நா பரிந்துரையில் இருப்பதால், புலி புலம்பெயர் குழுக்கள், பினாமிகள், ஆதரவுகள் கள்ள மௌனம் சாதிக்கின்றனர். ஐ.நா விசாரணை வேண்டும் என்று கூறி ஐ.நாவை நோக்கி படையெடுத்தவர்கள் - தமக்கு எதிரான பரிந்துரைகளைக் கண்டு, ஐ.நா பரிந்துரையை தமது "தமிழ்" தேசிய வெற்றியாக பறைசாற்ற முடியாது நெளிந்தபடி - புலிகளின் யுத்தக்குற்றத்துக்கு சுயவிளக்கம் அளிக்க முற்படுகின்றனர்.

"சிங்கள" தேசியவாதிகளின் தரப்பைச் சார்ந்த முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஐ.நா பரிந்துரையை ஏற்றுக் கொள்கின்றார். முதலாளித்துவ கட்சியாக சீரழிந்துவிட்ட ஜே.வி.பியோ உள்நாட்டு - சர்வதேசத்தைக் அடிப்படையாக கொண்ட கலப்பு நீதிமன்றத்தை எதிர்க்கின்றது. இப்படி ஐ.நாவின் பரிந்துரைகளை ஒட்டிய இலங்கை அரசியல் போக்கு என்பது குறுகியதாக - மக்களை பிளப்பதாக மாறி இருக்கின்றது. மக்களை பிரிந்து நின்று அணுகுமாறு - ஐ.நா தன் பரிந்துரை மூலம் கோருகின்றது.

எந்தப் பரிந்துரையும் - தீர்வும், இலங்கை மக்களை ஐக்கியப்படுத்தாத வரை அவை நிராகரிக்கப்பட வேண்டும். மக்களைத் தொடர்ந்து பிளவுபடுத்துகின்ற எந்தப் பரிந்துரையும், விதிவிலக்கின்றி இனவாதத்தையே விதைக்கின்றது என்பதே தான் உண்மை. இலங்கை மக்களின் இன்றைய தேவை என்பது - தனித்தனியாக இனங்களை திருப்திப்படுத்துவதல்ல. போர்க்குற்றம் மற்றும் சட்டவிரோத ஆட்சி மூலம் மனிதகுலத்துக்கு இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு தண்டனை என்பது - இலங்கை மக்களின் தெரிவாக இருக்க வேண்டும். மக்கள் உணர்வுபூர்வமாக உணர்ந்து கொண்ட நடைமுறையுடன் இணைந்தாக இருக்க வேண்டும். வெளியில் இருந்தோ - மேல் இருந்தோ, தத்தம் குறுகிய அரசியல் நோக்குடனோ - குறுகிய பொருளாதார நலன்களுடனோ - பழிவாங்கும் மனநிலையியோ திணிப்பது என்பது, மக்களை பிளக்கும். அதாவது மக்களை இனரீதியாக பிரிந்து அணுகுகின்ற - அதை அகலப்படுத்துகின்ற எந்த வழிமுறைகளும் - தீர்வுகளும் ஜனநாயகத்துக்கு முரணானதே. மக்களைத் தொடர்ந்து பிரித்து வைத்திருப்பதாகும்.

இந்தவகையில் ஐ.நா பரிந்துரையானது இனங்களை ஐக்கியப்படுத்துவதைப் பற்றி பேசவில்லை. இனங்களைப் பிளக்கின்ற தொடர்ச்சியான அரசியல் செயற்பாடுகளோடு - அதை இனம் கண்டு முறியடிக்கும் வண்ணம் எந்தப் பரிந்துரையையும் முன்வைக்கவில்லை.

இனரீதியாக மக்களைப் பிளந்த இலங்கையின் சமூக அமைப்பில் - இனரீதியாக வாக்குகளைப் பெற்று பாராளுமன்றம் மூலம் - ஐ.நா பரிந்துரை அமுலாக்கம் என்பது மக்களை இனரீதியாக தொடர்ந்து மோத வைக்கின்ற ஏகாதிபத்திய சதித் திட்டமே - ஐ.நா பரிந்துரையாகும். இலங்கையில் இனரீதியாக மக்களைப் பிரித்து வைத்திருப்பது தான் - நவதாராளமயத்தை முன்னெடுப்பதற்கான நெம்புகோலாக ஐ.நா பரிந்துரைகின்றது என்பது தான் உண்மை.

சர்வதேச (கலப்பு) நீதிமன்ற விசாரணையும் - தண்டணை பற்றிய எதிர்பார்ப்புக்களும் - தமிழ் மக்களை அடக்கியாள தமிழனுக்கே மேலும் அதிகாரம் என்ற "தமிழ் தேசியத்தின்" வரம்புகளும் - வரையறைகளும், இலங்கை வாழ் அனைத்து மக்களையும் மொழி கடந்து இணைத்துக் கொள்ளக் கோரவில்லை. முரணற்ற ஜனநாயகத்தின் அடிப்படையில் மக்களின் விருப்புடனான கோரிக்கை என்பதற்கு அப்பால் - அதிகாரங்கள் மூலம், அதாவது ஐ.நா - அரசு மூலம் கோருகின்ற வரம்புக்குள் இவை இனவாதத்தையே விதைக்கின்றது.

மக்கள் தமக்குள் ஐக்கியப்பட்டுக் கொடுக்கும் தண்டனையும் - தீர்வும் மட்டும் தான் மக்களுக்கானது. மற்றைய அனைத்தும் மக்களுக்கு எதிரானது. அவை ஆளும் வாக்கத்தைச் சார்ந்தவர்களின் நலன் சார்ந்தது என்பதே உலகறிந்த பொது உண்மையாகும்.