26
Wed, Jun

இரயாகரன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கூட்டமைப்பு மறைமுகமாக பொது வேட்பாளரை ஆதாரிக்கும் நிகழ்ச்சி நிரல் ஊடாகவும், முஸ்லிம் காங்கிரஸ் மகிந்தாவை ஆதாரித்த வண்ணம் பேரம் பேசுவதுவதன் ஊடாகவும் தங்கள் நிலையை மறைமுகமாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த வகையில் இந்த இரு குறுந்தேசிய இனவாதக் கட்சிகளும் பேரினவாதிகளை ஆதரிப்பதும், அதற்காக பேரம் பேசுவதையும் தவிர, மக்களை வழிகாட்ட மாற்று அரசியல் நடைமுறை எதுவும் கிடையாது.

காலகாலமாக இன ரீதியாக மக்களை அணிதிரட்டி வாக்கு பெற்ற இந்த இரு இனவாதக் கட்சிகளும், ஜனாதிபதி தேர்தலின் மூலம் மக்களை அரசியல் அனாதையாக்கவுள்ளனர். இந்த இனவாத தேர்தல் முறை மூலம் ஆட்சிக்கு வரும் எந்தத் தரப்பும், இனப்பிரச்சனை தீர்க்க தயாரற்ற இனவாதத்தை கொண்டுள்ளது. இந்த நிலையில் இதில்; ஒன்றுக்கு வாக்களிப்பதன் மூலமே பிரச்சனைக்கு தீர்வு என்ற கூறும் இந்தக் கட்சிகள், தொடர்ந்து மக்களை தவறாக வழி நடத்தி மோசடி செய்கின்றன.

உண்மையில் இந்தக் கட்சிகள் அனைத்தும் மக்களை தமக்கு வாக்களிக்க வைக்கும் இனவாதக் கட்சிகளே. இவர்களால் இந்த அரசியல் மூலம் இன பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது.

இன்று ஆளும் - ஆள விரும்புகின்ற கட்சிகள் அனைத்தும் இனரீதியாகவே வாக்கை கோருகின்றனர். அதே போல் தான், கூட்டமைப்பும், முஸ்லிம் காங்கிரசும் கூட இனரீதியாகவே வாக்கைக் கோருகின்றனர். இன ரீதியாக முரண்பட்ட அணிதிரண்ட இரண்டு தரப்புகள், தமக்குள் இன ரீதியான அரசியல் தீர்வை எப்படி கொடுக்க முடியும்? அல்லது பெற்று விட முடியும்? இன ரீதியான கட்சி அரசியல் மூலம் கிடைக்கும் இன ரீதியான தேர்தல் முடிவுகளைக் கொண்டு, இனப்பிரச்சனைக்கு தீர்வு என்பது சாத்தியமற்றது. இதைத் தீர்வாக முன்வைப்பது மோசடித்தனமானதாகும்.

இனரீதியாக வாக்கு கோருவதும் வாக்களிப்பதும் தொடரும் வரை, எந்த ஆட்சி வந்தாலும், எந்த ஆட்சி முறை வந்தாலும் மாற்றம் வராது என்பது உண்மையாகும். இதை மீறிய தீர்வு இன ரீதியாக வாக்களித்த மக்களுக்கு எதிரானது கூட.

கூட்டமைப்பும், முஸ்லிம் காங்கிரசும் தொடர்ந்து இந்த இனவாதத்துக்குள் தான் மக்களை வழிநடத்துகின்றன, இந்த இன ரீதியான தேர்தல் முறையையும், அது கொண்டு இருக்கும் சமூக அமைப்பை பாதுகாக்கும் சந்தர்ப்பவாதத்தையும், தன் அரசியலாக கொண்டு முன்தள்ளுகின்றன.

இதற்கான மாற்றீடு என்ன?

இனரீதியான தேர்தல், இனரீதியான வாக்களிப்பு முறைக்கு வெளியில் தான், இனவாதமற்ற தீர்வைக் காண முடியும். இனரீதியான யுத்தம் கூட, இனரீதியான வாக்களிப்பு போல் தீர்வைக் காணும் வழியாக இருக்கவில்லை என்பது, கடந்தகால அனுபவமாயிருகின்றது. .

இந்த தேர்தலில் மாற்றீடு என்பது, இனரீதியாக அணிதிரள்வதற்கு எதிராக அணிதிரள்வது தான். அனைத்து இனவாதிகளையும் தோற்கடித்தல் மூலம், இன முரண்பாட்டுக்கு தீர்வைக் காணுதலாகும். இந்த வகையில் இனவாதிகளை தோற்கடித்தல் என்பது, தீர்வு காண்பதற்கான உண்மையான வெற்றியாக இருக்கும்.

இதன் அர்த்தம் இனவாதத்துக்கு எதிரான அனைத்து மக்களும் தமக்குள் இணைந்து கொள்வதன் மூலம், இனமுரண்பாட்டுக்கு ஜனநாயக பூர்வமான தீர்வைக் காண முடியும்.

இந்த வகையில் ஆளும் - ஆள விரும்பும் இனவாதிகளை தோற்கடிக்கும் அரசியலை தமிழ் - முஸ்லிம் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்;. அதே நேரம் கூட்டமைப்பும் - முஸ்லிம் காங்கிரசும் முன்தள்ளும் இனவாதத்தையும் தோற்கடிக்க வேண்டும். இரண்டையும் தோற்கடிப்பதன் மூலம் உண்மையான சரியான ஜனநாயகத் தெரிவை தேர்ந்தெடுக்க முடியும்;.

அதாவது "சிங்கள" பேரினவாத ஆட்சியாளர்களை மட்டுமல்ல "தமிழ்" மற்றும் "முஸ்லீம்" குறுந்தேசிய பிழைப்புவாதிகளையும், சந்தர்ப்பவாதிகளையும் தோற்கடிக்க வேண்டும். இது மட்டுமே பிரச்சனைக்கு ஜனநாயக பூர்வமான தீர்வுகளை பெற்றுத்தரும். உங்கள் வாக்கைக் கூட, இனவாதிகளை தோற்கடிக்கும் வண்ணம் பயன்படுத்த வேண்டும். இதைத் தான் இடதுசாரிய முன்னணி, தனது அரசியல் கிளர்ச்சியாக நடைமுறையாக உங்கள் முன்வைக்கின்றது.