28
Fri, Jun

இரயாகரன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

அனைவரது கவனத்தையும் பொது வேட்பாளர் குறித்தும், மீண்டும் மகிந்தா போட்டியிட முடியாது என்ற பிரச்சாரத்துக்குள் கொண்டு வரும் வண்ணம், செய்திகளையும் கருத்துக்களையும் திட்டமிட்டு அன்றாடம் கொண்டு வருகின்றனர்.

மகிந்தாவை பதவியிலிருந்து இறக்குவதும், ஜனாதிபதி முறையினை ஒழித்து பாராளுமன்றத்கிற்கு அதிகாரத்தை வழங்குவதும் தான் இன்றைய இலங்கை மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வாக இருப்பதான ஒரு பிரமையை எற்படுத்த முனைகின்றனர்.

இப்படி அரசுக்கு எதிராக இவற்றை முன்னுக்கு கொண்டு வருவதன் மூலம், இதை நாட்டின் "ஜனநாயக" பிரச்சனையாக்க முனைகின்றனர். மக்கள் பொது வேட்பாளரை ஆதரித்தலும், மகிந்தாவை போட்டியிடாமல் தடுத்தலுமே நாட்டின் "ஜனநாயக" மீட்சிக்கான செயலாக காட்டிவிட முனைகின்றனர். மகிந்த குடும்ப சர்வாதிகார ஆட்சி தொடர்வது தான் நாட்டின் "ஜனநாயகப்" பிச்சனையாகக் குறுக்கி விடுகின்றனர். எதிர்க்கட்சிகள் தொடங்கி மௌனங்கள் மூலம் அரசியல் செய்யும் கூட்டமைப்பு வரை, இதையே மக்களுக்குரிய மாற்று வழியாக காட்ட முனைகின்றனர்.

மகிந்தாவை மாற்றி விட்டாலும், ஐனாதிபதி முறையை ஒழித்து விட்டாலும் "ஜனநாயகம்" வந்துவிடும் என்பதே இதன் பொருள். இவ்விரண்டும் தான் சர்வாதிகாரமானவை, இதனால் தான் பொது மக்களுக்கு பிரச்சனை என்று, நவதாராள சமூக பொருளாதார அமைப்பு முறையை பாதுகாக்கின்றவர்கள் கூற முற்படுகின்றனர்.

அரசு மக்களை ஒடுக்குவது எதற்காக? ஜனாதிபதி முறையை பாதுகாக்கவும், அதன் மூலம் மகிந்தாவை தொடாந்து ஆட்சியில் வைத்திருக்கவுமா மக்களை ஒடுக்கின்றது? இப்படி கூறுவதும் காட்டுவதும், சமூகம் சுயமாக சிந்திப்பதையும் தமக்காகப் போராடுவதையும் தடுத்து தமது அதிகாரத்தை தக்க வைக்க வாக்குகளை பெற முனைவதாகும்.

அரசு மக்களை ஒடுக்குவது மகிந்தா ஆட்சி தொடரவும், ஜனாதிபதி முறையை பாதுகாக்கவும் அல்ல. மாறாக மக்களின் வாழ்கையைப் பறிக்கும் இன்றைய நவதாராள பொருளாதார கொள்கைகளுக்கு எதிராக மக்கள் போராடுவதால், அரச இயந்திரம் மக்களை ஒடுக்குகின்றது.

இன்று நாட்டில் நடக்கும் போராட்டங்கள் நவதாராளமயத்தையும், அதன் சமூக விளைவுகளையும் எதிர்த்துதான் பரவலாக முன்னெடுக்கப்படுகின்றன. பல்கலைக்கழக மாணவர் போராட்டங்கள், மீனவர் போராட்டங்கள், சற்றுச் சூழல் போராட்டங்கள், குடியிருப்பை பாதுகாக்கும் போராட்டங்கள்... என்று அனைத்தும் மனித வாழ்க்கையை பறிக்கும் பொருளாதார கொள்ளையை எதிர்த்து தான் நடக்கின்றன. அரசும் நவதாரளமயமும் நகமும் சதையுமான நிலையில், வடக்கு மீனவர்களின் போராட்டங்கள் தொடங்கி காணமல் போனவர்களின் போராட்டங்கள் வரை மறைமுகமாக நவதாரளத்தை எதிர்த்து நடந்தேறுகின்றன. இப்படி தொடராக நடக்கும் மக்கள் போராட்டங்களை மளுங்கடித்து, அதை ஜனாதிபதி முறையை மாற்றுவதற்கான பொது வேட்ப்பாளரை ஆதரிக்கும் அரசியலாக மாற்றிவிட முனைகின்றனர்.

இது ஒப்பீட்டளவில் இனவொடுமுறையை எதிர்கொள்ளும் தமிழ் மொழி பேசும் மக்களை, ஐ.நா, அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் தீர்வை பெற்றுத்தரும் என தமிழ் மக்களுக்கு வழிகாட்டும் தமிழ் குறுந்தேசியத்தின் நலன் சார்ந்த செற்பாட்டுக்கு பின்னால் அணிதிரட்ட முனையும் அரசியலுக்கு ஒப்பாகும். சொந்த மொழி பேசும் மக்களை இனவாதத்துக்கு எதிராக அணிதிரட்டி போராட்ட மறுக்கின்றதும், மற்றயை மொழியை பேசும் மக்களுடன் இணைந்து இனவொடுக்குமுறைக்கு எதிராக போராட மறுக்கின்ற அரசியல் பித்தாலாட்டம் போன்றதே இது.

ஜனாதிபதி முறையை ஒழிப்பதன் மூலம் நவதாரள பொருளாதாரத்தை அரச இயந்திரம் கொண்டு இருப்பதையோ, ஆளுகின்ற கூட்டம் அதனை தொடர்ந்தும் முன்னெடுக்கப்போவதும் மாறிவிடப் போவதில்லை. யார் ஆட்சிக்கு வந்தாலும், எந்த ஆட்சி முறை (ஜனாதிபதி அல்லது பாராளுமன்ற) இருந்தாலும் இது தான் உண்மை. ஒடுக்குமுறைக்குரிய சமூக பொருளாதார அடிப்படை தொடரும். மக்களை ஒடுக்குவதும், ஒடுக்குமுறையும் மாறாது. இந்த அரசியல் அமைப்பு முறைமை மக்களுக்கு ஜனநாயகத்தை வழங்கி விடாது. மக்களைச் சுரண்டுவதும், அதற்காக மக்களை பிரித்து கையாள்வதும், மக்களை ஒடுக்குவதும் ஜனாதிபதி ஆட்சி முறையுடன் தொடர்புபட்டதல்ல. அதேபோல் பாராளுமன்ற முறையாக இருந்தாலும் சரி, எந்த ஆட்சி முறையாக இருந்தாலும் மக்களின் மீதான ஜனநாயக மறுப்பும், ஒடுக்குமுறையும் மாறாது. இன்று இருக்கின்ற அரச ஆட்சி அமைப்பானது மக்களுக்கு எதிரான நவதாரள பொருளாதார கொள்கை முன்னெடுத்து செல்வதனையே பிரதான நோக்காக கொண்டது.

நவதாராளமயத்தால் வாழ்வை இழக்கும் மக்களுக்கு ஜனநாயகம் கிடையாது. இந்த நவதாராளவாத பொருளாதார கொள்கையினை முன்னெடுத்து செல்ல ஆளும் வர்க்கத்திற்கு மக்களது ஜனநாயக உரிமைகளை மறுத்து அடக்கி ஒடுக்க அதிகாரமும் ஆட்சியும் தேவைப்படுகின்றது. நவதாராளமயத்தினை தொடர்ந்தும் பொது வேட்பாளர் மூலம் முன்னெடுக்கும் இந்த அரசியல் செயற்பாட்டை முறியடித்தேயாக வேண்டும்.

இந்த அரசியல் செயற்பாட்டை முன்னெடுத்து மக்களை அணிதிரட்டவே, நவதாரளமயத்தை எதிர்க்கும் இடதுசாரிய பொது வேட்பாளரை முன்னிறுத்த வேண்டிய தேவை இன்று இடதுசாரி கட்சிகளின் முக்கிய பணியாக இருக்கின்றது. இந்த தேர்தல் முறையில், இடதுசாரிகளது இன்றைய தேர்தல் அரசியல் செயற்பாடு மக்களை நவதாராளவாதத்திற்கு எதிராகவும் அதனை முன்னெடுக்கும் சகல ஆளும் தரப்பினர்களுக்கு எதிராகவும் விளிப்புணர்வூட்டி அணிதிரட்டுவதே.