25
Tue, Jun

இரயாகரன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

 இனவாதம் குறுகியதும், வக்கிரமானதுமாகும். இதில் சிறுபான்மை பெரும்பான்மை என்று எந்த வேறுபாடு இன்றி அது ஒரே தன்மை கொண்டது. ஒடுக்கும், ஒடுக்கப்படும் என்ற எந்த வேறுபாடும் இன்றி, ஒத்ததன்மை கொண்டது. இனவாதம் சமூகத்தில் நிலவும் பிற சமூக ஒடுக்குமுறைகளைச் சார்ந்து, தன்னை முன்னிறுத்தி இயங்குகின்றது. இனவாதம் சுரண்டும் வர்க்கத்தை மூடிமறைத்தபடி, அதை பாதுகாத்து முன்னெடுக்கும் பிற்போக்கு கோட்பாடாகவும் இயங்குகின்றது. இனவாதம் அரசியல்ரீதியாக ஏகாதிபத்தியத் தன்மை கொண்டது. இனவாதம் என்பது தேசியவாதமல்ல. முதலாளித்துவ தேசியவாதம் என்பது இனவாதமல்ல. சமூகத்தில் புரையோடிக் கிடக்கும் படுபிற்போக்கான கூறுகளைக் கொண்டு, தன்னை வெளிப்படுவது தான் இனவாதம்.

இனவாதம் சார்ந்து நடந்த தியாகங்களை இந்த சமூக எல்லைக்குள் நின்றுதான், நாம் புரிந்துகொள்ள வேண்டும். தியாகமும் அர்ப்பணிப்பும் கொண்ட வாழ்வு மக்களுக்கானதாக அமையவேண்டும் என்றால், சமூகத் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். அது தன் இன, சகஇன மனிதனை நேசிப்பதாக இருக்க வேண்டும். மனிதன் மீதான அனைத்து ஒடுக்குமுறைகளை செய்பவர்களையே வெறுப்பதாக இருக்க வேண்டும். மனிதனை மனிதன் நேசிக்காத இனவாதத்துக்கு, எந்த சமூகத் தன்மையும் கிடையாது. இனவாதம் சார்ந்த தியாகங்கள், மனிதத் தன்மை கொண்டவையல்ல. இங்கு சுயநலமாற்ற, அறியாமை சார்ந்த எல்லைக்குள் மட்டும் தான், தியாகங்களை புரிந்து கொள்ளவும் அங்கீகரிக்கவும் முடியும். இதற்கு அப்பால் இனவாதம் சார்ந்தவை அனைத்தும், சாராம்சத்தில் மனித விரோதத் தன்மை கொண்டவை.

இங்கு இனவாதத்துக்கு எதிரான போராட்டத்தின் மூலம்தான், சுயநலமற்ற அறியாமை சார்ந்த தியாகங்களை சரியாக முன்னிறுத்திப் பாதுகாக்க முடியும். இனவாதத்துக்கு எதிராக சமூகத் தன்மையை மீட்டு எடுக்கும் போராட்டம் தான், அர்த்தமுள்ள தியாகங்களை கூட சரியாக முன்னிறுத்தி அர்த்தப்படுத்தும்.

இது அல்லாத இனவாதம் என்பது மனிதத்தன்மை கொண்டதல்ல. மாறாக மனித விரோதக் கூறாகும். மனிதனை மனிதன் இனரீதியாக பிளக்கும் கூறாகும். இதன் மூலம் இனத்தின் உள்ளான பிளவை மூடிமறைக்கும் கூறாகும். சமூகம் மீது வன்முறையை ஏவும் கூறாகும். எந்தவிதமான இனவாதமாகவும் இருக்கலாம். இனத்தின் ஊடாக சமூகத்தை பார்க்க வெளிக்கிட்டால், அதன் பின் மனித விரோதமாகவே அது வெளிப்படும். சிந்தனை, செயல் அனைத்தும் சமூகத் தன்மையற்றதாக செயலாற்றும். அது தன்னைச் சுற்றி ஒரு குறுகிய தற்காப்பு வட்டத்தை உருவாக்கி கொண்டு விடுகின்றது. தன்னை மற்ற இன மக்களில் இருந்து வேறுபடுத்திக் கொள்கின்றது. மற்றைய இனத்துக்கு எதிரான குற்றங்கள் செய்வதற்கான நியாயத்தை முன்வைப்பதுடன், இனவாதம் சார்ந்து குற்றங்களை தயக்கமின்றி செய்யத் தூண்டுகின்றது.

இனக் குற்றங்களாக, சமூகவிரோத செயலாக இனவாதம் கருதுவதில்லை. இப்படி இருக்காமல் இருப்பதையே, அது சமூக விரோதமாக கருதுகின்றது.

குற்றங்களை இனப் பெருமையின் வெளிப்பாடாக காட்டுகின்றது. இந்த வகையில் தன் இனத்தை பெருமைப்படுத்திக் கொள்ளவும், மற்றைய இனத்தை சிறுமைபடுத்திக் காட்டியும் விடுகின்றது. இப்படி பரஸ்பரம் மனிதவிரோதத்துடன் தான், எதிரெதிராக இனவாதங்கள் பிரிந்து எதிர்வினையாற்றுகின்றது. ஒன்று இன்றி ஒன்று இல்லை. ஆக ஒன்றைக் காட்டி ஒன்றின் இருப்பை நியாயப்படுத்த எந்த அரசியல் அடிப்படையும் கிடையாது. இப்படி கூறி இனவாதத்தை முன்வைப்பது அரசியல் மோசடியாகும்.

அரசியல் சமூக பொருளாதார அடித்தளத்தின் மேல் இயங்கும் ஆளும் வர்க்கங்களும், அதிகாரத்துக்கு வரத்துடிக்கும் சமூகப் பிரிவுகளும், ஆட்சியாளர்களும் தான் இனவாதத்தை மக்கள் மத்தியில் திணிக்கின்றனர். இந்த இனவாதம் மூலம் மக்களை பிரிப்பதும், அவர்களை மோத வைப்பதும், எதிர் வன்முறையையும் ஏவுகின்றனர். இதன் மூலமான இனக் குற்றங்களை, இனத்தின் பெருமைக்குரிய ஒன்றாக மாற்றுகின்றனர். இனம் கடந்து மக்கள் சேர்ந்து வாழ்வதை குற்றமாக, அவமானமாக காட்டி தடுக்கின்றனர். இதன் மூலம் மக்கள் தங்கள் பொது எதிரியை இனம் கண்டு கொள்வதை தடுக்கின்றனர். உண்மையில் மக்களின் பொது எதிரிகளின் பக்கத்தில் நிற்பவர்கள் தான், மக்கள் மத்தியில் இனவாதத்தை தூண்டுகின்றவர்களாக இருக்கின்றனர். இதன் மூலம் சமூக விரோதிகளாக இயங்குகின்றனர்.

இந்த இனவாதம் என்பது எங்கிருந்தாலும், அது எப்படி இருந்தாலும் சரி, அவை சமூக விரோதத் தன்மை கொண்டவை. ஒரு இனவாதத்தைக் காட்டி, இன்னொரு சமூக விரோத இனவாதத்தை உருவாக்க முடியாது. எந்த இனவாதத்தையும் நியாயப்படுத்த முடியாது. இனவாதம் எங்கும், எப்போதும் மற்ற இன மக்களை இழிவுபடுத்தித்தான், தன் சமூக விரோதத்தை இனவாதமாக கட்டமைக்கின்றது. மற்ற இனத்தை ஒடுக்க, தன் இனம் சார்ந்து பிற்போக்கு கூறுகள் சார்ந்து இனவாதம் தன்னைத் தயார் செய்கின்றது.

இந்த இனவாதம் என்பது தவறான போராட்டமாகவும், சமூக விரோத குற்றங்களுக்கான அரசியல் அடிப்படையுயாகும். இந்த வகையில் மனித விரோதக் கூறாகவே, எப்போதும் எங்கும் இனவாதம் செயல்படுகின்றது. இதை மறுதளித்து போராடாத மனிதன், சமூகத்தில் நேர்மையாக இருக்கவும், நேர்மையாக வாழவும் முடியாது. இதை இனம் காண்பதற்காகவும், இதை மறுதளிப்பதற்கான சுய போராட்டத்தையும், சமூகம் நடத்தியாக வேண்டும்;.

இந்த வகையில் தான் இன்று இலங்கையில் நிலவும் இனமுரண்பாட்டை எப்படி கையாள்வது என்ற கேள்விக்கு விடை காணவேண்டும். நாங்களும் இனவாதியாக மாறுவதா? என்ற அடிப்படையான கேள்விக்கு, பகுத்தறிவுள்ள அனைவரும் சிந்திக்கவும், பதில் அளிக்கவும் வேண்டும். தவறான கண்ணோட்டத்தையும், நடத்தையையும் மறுத்து, அதற்கு எதிராக வாழ்தல் தான் அடிப்படையான நேர்மையாகும். இந்த வகையில் சமூக விரோதம் கொண்ட இனவாதத்தை, சமூகம் சார்ந்து எப்படி எதிர்த்து நிற்கின்றோம் என்பதை நடைமுறையில் நிறுவியாக வேண்டும். இன்றுள்ள அரசியல் பணி இதுதான்.

பி.இரயாகரன்

13.12.2012