28
Fri, Jun

சிறி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நான் பள்ளன் தானடா பறையன் தானடா

விஞ்சும் கடலலை கொஞ்சும் மீனவ ஜாதி நானடா

பஞ்சம் பிணியினில் நெஞ்சம் கொதிக்கையில்

உனைக் கெஞ்சி வாழ்வதும் வாழ்தலாகுமோ!

 

சாதி வஞ்சம் வைத்து நீ நமை அஞ்ச வைப்பியாம்

அடக்கி வைக்கும் ஆண்டகை நீயெனத் தொடர்கையில்

சுயநிர்ணயம் உன்நயம் ஆக்கவே அலைகிறாய்

சுயமாயச் சமூக இயைபாய் வாழ்தலே விடுதலை

எமை நீ சுரண்டவல்லவே!

 

சாதித் திமிருக்கு சுயம்வரம் வைப்பது

சுயத்தின் நிர்ணயமல்லவே!

பயப்பட்டு உன் வயப்பட்டு

சர்வலோகமும் உலைந்து உருக்கெட்டு

சவக்காடு காட்டிய நீ தருவதாய்

சொல்லுமந்தச் சுயநிர்ணயம் வேண்டாம்!

 

கனவின் நடுவில் திடுக்கென விழித்து

பிதற்றும் உன் கயமைகள் வேண்டாம்!

சொத்துச் சுகங்கள் ஆள்வதற்கல்லா மானிட விடுதலைக்

கான மனிதர்கள் அடைவதே சுயநிர்ணயவுரிமை!