28
Fri, Jun

கங்கா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

போர்முரசறைந்த கொடியவர்கள்
நாளை மிதிப்பது நானா அவனா எனத்தீர்மானிக்குமாறு
வாக்களிக்கும் உரிமையை பயன்படுத்தச் சொல்கிறார்கள்
போரின் அதர்மம் வெளித்தெரியாவண்ணம்
நாட்டைக் காட்டிக்கொடுக்கோமென
இரத்தம்  தோய்ந்த கரங்களால்
புத்தபீடங்களிடம் சத்தியம் செய்கிறார்கள்...

 

பழைய எல்லாத்தீர்மானங்கட்கும் மேலானதாய்
வழங்கப்போவதாய் விஞ்ஞாபனங்கள் தயாராகிறது
புலிகளை வைத்து அரசியல் நடத்தியவர்கள்
யாரை ஆ+ரத்தழுவுவதென குழம்பிப்போய்..நாளை
காலமோட்டும் கனவுகள் மட்டுமாய்..
உலகவல்லவர்கள் ஆடுகளமாய் இருக்கப்போவது பற்றி
அரசியல்வாதிகள் அலட்டிக்கொள்வதாயில்லை
பல தலைமுறைக்கான சொத்தும் பாதுகாப்பான குடும்பவாழ்வுமாய்....

வதைமுகாம்களில் வாக்குசாவடி அமைக்கப்படுவதாயும்
கூடாரக்கிராமங்களில்
வாக்கிடும் ஜனநாயகம் வழங்குவதற்காயும் விரைந்து செயல்படுகிறது
படித்தவாலிபர் திட்டமென செழித்தகாடு
இடிந்து நொருங்கி எரிநிலமாய்
ஏற்றியபேருந்துகள்
ஆச்சி அப்பு வாழ்ந்த ஊர்நோக்கி போகிறது........

எங்கே பிள்ளைகள் எங்கே மனைவி எங்கே கணவன்
எங்கே என் பெற்றோர் எனும் அழுகுரல்கள்
எவன் இதயத்தையும் ஈர்த்ததாயில்லை
இந்த மக்களால் தெரிவுசெய்யப்பட்டதாயும்
இவர்களையே பிரதிநிதித்துவப்படுத்துவதாயும்
தங்களிற்குள் ஞாபகப்படுத்திக்கொள்கிறார்கள்
வடக்கின் வசந்தம் கிழக்கின் உதயமுமல்ல
வடக்கு கிழக்கின் விடிவெள்ளிகளாய்
பிரபாவின் பிடிவாதமே அழிவுக்கு காரணமென
பிலாத்துவைபோல் கையலம்பி விட்டார்கள்

 

புலி ஆண்ட  புலத்துமனங்கள் விறைத்துப்போய்
சூடேற்றுவதற்காய் வட்டுக்கோட்டை தீர்மானமும்
சொத்தை வசப்படுத்தும் நாடுகடந்த தமிழீழமும்
உசுப்பேத்துவதாயில்லை
இத்தனை இழப்புகளும் அர்த்;தமற்றுப்போனதன்
அடிவேரை இளையவர்கள் தேடப்புறப்படுகின்றனர்
எல்லாம் புலிமேல் பழிசுமத்தியவர்கள்
வழிதேடும் பார்வையை அடித்துமுடக்கப்பார்ப்பது
ஏனெனவும் கேட்கிறார்கள்
புலி ஆண்ட மனங்கள் இனித் தேடுதல் செய்யும்
அம்மணமாகப்போவது அனைத்து மக்கள் விரோதகூறுகள்

வலியிலும் வலிமை பிறக்கும்.........
எழுந்து நடப்பதற்கான வழியும் திறக்கும்;;;.....