Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

ஏகாதிபத்தியங்கள் உருவாக்கிய மத அடிப்படைவாதங்களை, கம்யூனிஸ்டுகள் ஏன் எதிர்க்கவில்லை?

நவதாராளவாத உலகில் எல்லாவிதமான (மத) அடிப்படைவாதங்களும் மேலெழுந்து, ஒன்றையொன்று ஒடுக்குகின்றனவாக மாறி – சமூக முரண்பாடாகவும் மாறியிருக்கின்றது. இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின்னான ஏகாதிபத்திய கொள்கைகளே, இவை தோன்றுவதற்கு காரணமாக இருந்தது.

1917 ருசியப் புரட்சியும், 1950 சீனப் புரட்சியும், காலனிகளில் தேசிய ஜனநாயகப் புரட்சிகளும், உலக மக்களிடையே ஜனநாயக கூறுகளாக வளர்ச்சி பெற்றது. மக்கள் தன்னியல்பாக மதம் குறித்த நம்பிக்கைகளையும். நிலப்பிரபுத்துவ அடிமைதனங்களையும் களைந்த, நவீன ஜனநாயக சமூகமாக சமூகம் உருவாகி வந்தது. ஜனநாயகம், புரட்சி போன்ற எண்ணக்கருக்கள், நடைமுறை வாழ்வியலுக்கான போராட்டமாக மாறியது. இது இயல்பாகவே ஏகாதிபத்திய பொருளாதாரக் கட்டமைப்புக்கு, அதன் காலனிய, அரைக் காலனிய, நவகாலனிய கொள்கைக்கும் எதிரானதாக இருந்தது. அதேநேரம் சோசலிசப் புரட்சியானது ஏகாதிபத்திய நாடுகளுக்குள்ளேயே சுரண்டலின் வீதத்தைக் குறைக்கவும், செல்வத்தின் ஒரு பகுதியை சமூக நிதியமாக பகிர்ந்து கொடுக்கவும் நிர்ப்பந்திக்கப்பட்டது.

மக்கள் பகுத்தறிவுவாதிகளாகவும், ஜனநாயகவாதியாகவும் தம்மை முன்னிறுத்தினர். இது ஏகாதிபத்திய தனியுடமைக் கொள்கைக்கு எதிரானதாக இருந்தது. இந்தப் போக்கைத் தடுக்கும் ஏகாதிபத்தியக் கொள்கை தான், நிலப்பிரபுத்துவ சிந்தனைமுறைக்குள் சமூகத்தை மீள நகர்த்தியது. அதாவது மத அடிப்படைவாதங்களை மீள தோற்றுவித்தது. தனிப்பட்ட மனிதனின் கடவுள் நம்பிக்கையை, ஒருங்கிணைந்த மத அடிப்படைவாதமாக மாற்றியது.

1950 களில் சர்வதேசரீதியான சுரண்டலை தீவிரமாக்க, திட்டமிட்டு உருவாக்கப்பட்டது தான் மத அடிப்படைவாதம். ஏகாதிபத்தியங்களின் சுரண்டல் கொள்கைதான், மத அடிப்படைவாதமாகவும், மதப் பயங்கரவாதமாகவும் மாறியது. திட்டமிட்டு ஏகாதிபத்தியம் உருவாக்கிய இந்த மத அடிப்படைவாதமானது, இடதுசாரிகளால் எதிர்க்கப்பபட்டதா?

சோவியத் புரட்சிக்குப் பிந்தைய 2ம் உலக யுத்த காலத்தில் ஜனநாயக சமூகங்களாக உலகம் முன்னேறிய வரலாற்றுப் போக்கில், மதம் தானாகவே சமூக அதிகாரத்தை இழந்து வந்தது. இதனால் மதம் குறித்த பகுத்தறிவுவாத மற்றும் இடதுசாரிய விமர்சன முறையும் நடைமுறைகளும் தேவைப்பட்டு இருக்கவில்லை. சமூகத்தின் ஜனநாயக கூறுகளின் வளர்ச்சியானது, முடிவெடுக்கும் கட்டுப்படுத்தும் மத அதிகாரத்தை அழித்தது. மதம் சார்ந்த ஒடுக்குமுறைகளை எதிர்த்துப் போராட வேண்டிய அரசியலை முக்கியத்துவம் இல்லாது செய்தது.

ஏகாதிபத்தியங்கள் ஜனநாயக சமூகத்தை அழித்து, அதனிடத்தில் மத அடிப்படைவாத சமூகத்தை உருவாக்கி, மத அதிகாரத்ததை சமூகத்தில் மறுபடியும் திணித்த போது, இடதுசாரியம் என்ன செய்தது? இடதுசாரியம் அதை எதிர்த்து, ஜனநாயக கூறுகளை பாதுகாக்கும் போராட்டத்தை ஏகாதிபத்தியத்துக்கு எதிராக நடத்தவில்லை. மதம் அதிகாரத்தை பெற்று, சமூகத்தை ஒடுக்கும் அரசியல் கூறாக வளர்ந்த போது, இடதுசாரியம் செயலற்றுக் கிடந்தது. மதத்துடன் இணங்கி வாழும் வலது சந்தர்ப்பவாத அரசியலாக இடதுசாரியம் சீரழிந்தது. மதம் முதலில் பெண்களை பழையபடி வீட்டுக்குள் அடைத்தது. ஆணின் கட்டளைக்கு அடிபணியும் அடிமையாகவும், சமூகத்தின் கண்காணிப்புக்கு உட்பட்ட உயிரற்ற பண்டமாகவும் மாற்றியது. இந்த ஆணின் ஆணாதிக்க அதிகாரம், சமூகத்தினைக் கட்டுப்படுத்தும் அளவுக்கு, ஒடுக்குமுறை கொண்டதாகியது. ஏகாதிபத்தியத்தின் இந்த அரசியல் நகர்வை இடதுசாரியம் எதிர்த்து நிற்காது இணங்கிப் போனது என்பதே, இன்றைய அவலங்களுக்கு காரணம். இடதுசாரிகள் மத அடிப்படைவாதத்தை ஏகாதிபத்திய சரக்கு என்ற கொள்கை அளவில் கூறுவதுடன், தங்களை அரசியலை வரம்பிட்டுக் கொண்டனர். ஏகாதிபத்தியத்தின் சரக்கு என்று கூறுவதுடன், அரசியல்ரீதியான செயற்பாட்டில் இருந்து ஒதுங்கிக் கொண்டனர்.

இதற்கு முரணாக உதாரணமாக இந்தியாவில் தமிழகத்தை எடுக்க முடியும். மதத்தையும் - சாதியையும் எதிர்த்து இந்தியா அளவில் அம்பேத்கரின் போராட்டமும், தமிழகத்தில் பெரியாரின் போராட்டம், தமிழகத்தை இந்தியா அளவில் தனித்துவமாக்கி இருக்கின்றது. இந்தியாவில் இந்து மத அடிப்படைவாதத்துக்கு எதிரான போராட்டத்தின் மையமாக தமிழகம் இருப்பதென்பது, மத அடிப்படைவாதத்துக்கு எதிரான தனித்துவமான போராட்டங்கள் தான். இது தான் வர்க்கப் போராட்டத்துக்கான, இந்தியக் கூறாகவும் இருக்கின்றது.

இன்று இலங்கையில் பிரிந்து கிடக்கும் சிங்கள – தமிழ் இடதுசாரியம், மதம் குறித்து சந்தர்ப்பவாத நிலையை பின்பற்றுகின்றது. மதத்தைக் குறித்து கொள்கைகளுடன், தங்கள் செயற்பாட்டை முடக்கி கொள்வதும், சம்பவங்கள் நடக்கும் போது கண்டன அறிக்கைகளுடன் மதம் குறித்த விமர்சனத்தை முடக்கி விடுகின்றனர். இதைத்தான் இலங்கை இன முரண்பாட்டிலும் செய்தனர், செய்கின்றனர். செயலற்ற கட்சிக்கு இத்தகைய அணுகுமுறையை, தங்கள் சுய இருப்புக்கான வாய்ப்பாக்கி கொள்கின்றனர். சமூக வலைத்தளத்தில் கருத்துச் சொல்லுகின்ற தனிநபர்களுக்கும், இந்தக் கட்சிகளின் கொள்கை மற்றும் நடைமுறைகளுக்கும் இடையில் எந்த வேறுபாடும் கிடையாது.

வர்க்க நடைமுறையில் செயற்படும் கட்சிகள், இன - மத சிந்தனைமுறையுடன் முரண்படாத கொள்கையைக் கையாளுகின்றனர். இன-மத ஒடுக்குமுறையை நேருக்கு நேர் எதிர்க்காத இணக்கமான அரசியலை முன்வைக்கின்றனர். அதாவது இன – மத ஒடுக்குமுறைக்கு எதிரான வர்க்க நடைமுறையை முன்வைக்க மறுக்கின்றவர்களாகவும், கொள்கையளவில் மட்டும் ஒடுக்குமுறைகளை ஏற்றுக் கொள்பவராக இருக்கின்றனர்.

மதம், மத அடிப்படைவாதம், மதப் பயங்கரவாதத்துடன் இணங்கி அரசியல் செய்யும் நிலைக்கு, தங்கள் அரசியலை தாழ்த்திக் கொண்டுள்ளனர். மதம் குறித்து பாவிக்கும் சொற்கள் முதல் கோசங்கள் வரை, புரட்சிகரமான வர்க்க அரசியலைக் கொண்டு இருப்பதில்லை.

இதன் விளைவு என்ன? தனிமனித கடவுள் நம்பிக்கைகள் அமைப்பு வடிவம் பெற்று மதமாக, மத அடிப்படைவாதமாக, மதப் பயங்கரவாதமாகி இருக்கின்றது. இந்தியாவில் இந்து பயங்கரவாதம், பர்மாவில் பௌத்த பயங்கரவாதம் போன்ற கிறிஸ்துவ, இஸ்லாமிய, யூத பயங்கரவாதங்கள் உலகெங்கும், அங்குமிங்குமாக நிகழ்ந்து வருகின்றது.

தனிமனித உணர்வுகளையும், நம்பிக்கைகளையும் பொதுமைப்படுத்தி, அதை அமைப்பாக்கி ஒடுக்குகின்ற இன்றைய பொதுச் சூழலில் இருந்து, மனிதகுலத்தை விடுவித்தாக வேண்டும். இதற்கான தனிச் செயற்பாடு அவசியமானது.

எப்படி காதல் தனிமனிதனின் தெரிவுக்கு உட்பட்டதோ அதே போன்றதே கடவுள் நம்பிக்கை. காதலில் தலையிட பெற்றோருக்கோ, மதத்துக்கோ, சாதிக்கோ,… சமூகத்துக்கு எந்த உரிமையும் கிடையாது. இதுபோல் கடவுள் நம்பிக்கையும், தனிமனிதன் சார்ந்தது. அதை மதமாக்குவதற்கும், அடிப்படைவாதமாக்குவதற்கும், பயங்கரவாதமாக்குவதற்கும் .. யாருக்கும் எந்த உரிமையும் கிடையாது. இதுதான் மதம் குறித்த இடதுசாரியச் செயல்திட்டத்தின் மையப்புள்ளி. இதற்கான தனித்துவமான செயற்திட்டமே இன்றைய தேவையாகும்.