Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

இஸ்லாமிய பயங்கரவாதமும், கொசுக்களின் தொல்லையும்

இஸ்லாமிய பயங்கரவாதத்தை அடுத்து, இஸ்லாமிய சமூகத்தை நெருக்கடிக்குள்ளாக்கக் கூடாது என்று, தமிழ் இலக்கிய – அரசியல் "முற்போக்குவாதிகளின்" கொசுத் தொல்லை தாங்க முடியவில்லை. சமூகத்துக்கு கேடானதும், சமூகத்தை மூடுதிரையாக்கி வைத்திருக்க விரும்புகின்ற, சமூக மாற்றத்தை விரும்பாத தனிமனிதத்தனமான போலி சமூக அக்கறை, இப்படித்தான் நடித்துக் காட்ட முடியும்.

இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு எதிராக இலங்கை அரச படைகள், இஸ்லாமிய சமூகத்தை நெருக்கடிக்குள்ளாக்கும் செயற்பாடுகளை இட்டு எந்தக் கருத்துமில்லை. அதை அங்கீகரித்தபடியே இவர்கள், சிந்தனைத் தளத்தில் முஸ்லிம் சமூகம் அடிப்படைவாதத்துடன் கொண்டுள்ள உறவை கேள்விக்கு உள்ளாக்கக் கூடாது என்கின்றனர்.

இப்படி கூறுகின்ற தமிழர்கள் புலிப் (தமிழ்ப்) பயங்கரவாதத்துக்கு எதிராக, அக்காலத்தில் என்ன செய்தார்கள்;? புலிக்கு பிந்தைய தமிழ் (புலிப்) பயங்கரவாதமானது, மதவெறியாக, சாதிவெறியாக, இனவெறியாக, ஆணாதிக்கவாதமாக, சுயநலம் கொண்ட நுகர்வாக்க சமூகமாக புளுத்து, புரையோடிக் கிடப்பதை எந்த வகையில் எதிர் கொள்கின்றனர்? சமுதாய ரீதியாக தேடினால் பூச்சியம். இவர்கள் தான் இன்று இஸ்லாமிய சமூகத்தை நெருக்கடிக்குள்ளாக்காது, கூடி கும்மியடித்து மாற்றுவோம் என்கின்றனர்.

இதுதான் இன்று ஆபத்தான அரசியல். இது களைந்தெறிய வேண்டிய அரசியல். இவர்கள் யார்? சமூகம் குறித்து இவர்களின் பார்வையென்ன? தமிழ் சமூகத்தில் காணப்படும் ஒடுக்குமுறைகள் குறித்து இவர்களின் நிலைப்பாடு என்ன, அதற்கான நடைமுறை என்ன என்று தேடினால், பூச்சியம்;. சமூக வலைத்தளத்தில் (பேஸ்புக்கில்) பொங்குவது, கடலை போடுவது, சமூக நடைமுறையில் வெள்ளாளிய சிந்தனையுடன் கூடிய வாழ்க்கையை வாழ்வது.

தங்களை முன்னிறுத்த இலக்கியம் - அரசியல். சமூக வலைதளங்களில் தங்களை மனிதாபிமானம் உள்ளவராக காட்டிக்கொள்ள, நடைமுறையற்ற உளறல்கள். நடைமுறையில் சமூக மாற்றத்தை செய்ய தகுதியற்ற, தங்கள் அறிவைக் கொண்டு சமூகத்தை ஏமாற்றுவது. பணத்தைக் கொண்டு உலகத்தை வளைத்துப் போடுகின்றது போன்று, அறிவைக் கொண்டு தமிழ் சமூகத்தை குட்டிச் சுவராக்கி, அதில் மிதக்கின்ற கற்பனாவாதப் பேர்வழிகள்.

சமூகம் தன்னைத்தான் விழிப்படைந்த சமூகமாக மாறுவது என்பது, இவர்களின் தனிமனித அறிவுப் புலமை சார்ந்த அரிப்பு அடையாளத்தை அழித்துவிடும் என்ற சுய பீதியில் பிதற்றுவது, அதை சமூக வலைத்தளத்தில் விதைத்து விடுவது. இதனால் மாற்றத்தை தரமுடியாது.

தமிழ்மொழியை பேசக் கூடிய முஸ்லிம் சமூகம், தன் சுய அடையாளத்தை இழந்து இஸ்லாமிய மத சமூகமாக தன்னை முன்னிறுத்துமளவுக்கு, மத அடிப்படைவாதத்துக்குள் மூழ்கிக் கிடக்கின்றது. இதில் இருந்து விடுபடுவது என்பது, இரண்டு வழியில் சாத்தியம்.

 

1.உள்ளிருந்து இதற்கு எதிரான போராட்டத்தை இன்றே தொடங்குவது

2.வெளியில் இருந்து இதற்கு எதிரான போராட்டத்துடன், தங்களை இணைந்துக் கொள்வது

இவ்விரண்டும் கடந்த காலத்தில் சாத்தியமாகவில்லை. நிகழ்காலத்தில் அதை சாத்தியமாக்காமல் இருக்கும் வண்ணம், உள் - வெளி அரங்கில் இருந்து, இஸ்லாமிய மக்களை நோக்கி சுட்டிவிரலை நீட்டக் கூடாது என்கின்றனர்.

இஸ்லாமிய அடிப்படைவாதிகள் கூட, இஸ்லாமிய சமூகத்தை நெருக்கடிக்குள்ளாக்கக் கூடாது என்று தான் கூறுகின்றனர். நாங்களாக பார்த்து "திருந்திக்" கொள்கிறோம் யாரும் அலட்ட வேண்டாம் எதுவுமே பேசாமல் விலத்தி நில்லுங்கள் என்கின்றனர்.

இதற்கு மாறாக சமூக விழிப்புணர்வும், அதற்கான நடைமுறை மட்டும், அடிப்படைவாத சிந்தனை முறைக்கு முடிவுகட்டும். இந்த எதார்த்தம் தனிமனித சிந்தனை முறையில் சிந்திக்கும், தமிழ் வெள்ளாளியத்துக்கு அச்சத்தைத் தோற்றுவிக்கின்றது.

குறித்த இந்தப் பயங்கரவாதத்தில் பாதிக்கப்பட்ட சமூகம், ஒடுக்கப்பட்ட தமிழ் சமூகம் தான். அடுத்து எங்கே எப்போது குண்டு வெடிக்கும் என்று அச்சப்படுவது, ஒட்டுமொத்த சமூகமுமாகும். இதனால் ஏற்படக்கூடிய எதிர்வினையைக் கண்டு தான், முஸ்லிம் சமூகத்திற்கு அச்சம் உருவாகின்றது.

ஒட்டுமொத்த சமூகமும் ஏதோவொரு வகையில் தொடர் நெருக்கடியை எதிர்கொள்கின்றது. இதிலிருந்து சமூகத்தை மீட்கும் பொறுப்பு முஸ்லிம் சமூகத்தின் முன்னால் இருக்கின்றது. அந்த சமூகம் மூடிய மத இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்குள் இருக்கும் வரை, மாற்றம் எதுவும் நிகழாது. நெருக்கடி அதிகரிக்கும். இதைத்தான் இஸ்லாமிய சமூகத்தை நெருக்கடிக்குள்ளாக்கக் கூடாது என்று கூறுகின்றவர்கள், நெருக்கடியை அதிகரிக்க வைப்பதன் மூலம், தங்கள் கருத்துச் சொல்லும் இருப்பை நிலைநாட்ட முனைகின்றனர்.

இஸ்லாமிய சமூகம் தன் மீதான நெருக்கடியில் இருந்து மீள, அடிப்படைவாதம் களைந்த முஸ்லிம் சமூகமாக மாற வேண்டும். இந்த மண்ணுக்கு தொடர்பற்ற எல்லா அடிப்படைவாதங்களையும் களைந்தெறியும் போராட்டத்தை தொடங்க வேண்டும்.

இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு எதிராக வீதிகளில் இறங்கி, அவற்றைத் தகர்க்க வேண்டும்;. வெளிப்படையாக பயங்கரவாதத்தை எதிர்த்து, பிற சமூகத்துடன் ஒன்றிணைந்து போராட புறப்பட்டால், யாராலும் அவர்களை நெருக்கடிக்கு உள்ளாக்க முடியாது. சமூகம் தான் எதை வேண்டும் என்று தீர்மானிக்கின்றது. தனிமனிதர்களின் சிந்தனைகள், சமூகத்தை மாற்றுவதில்லை, ஒன்றிணைந்த மனிதர்களின் நடைமுறையால் தான் மாற்றம் நிகழ்கின்றது.